தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 6.4-தீ நட்பும், கூடா நட்பும்

  • 6:4 தீ நட்பும், கூடா நட்பும்

    E

    ஒருவனுக்கு அமையும் தீய நட்பால், அவனது வாழ்க்கையே
    பாழாகி விடுகிறது. தீய நண்பனால், தீய பழக்கங்களைப் பின்
    பற்றுகிறான்; தீயவனாகவே     மாறிவிடுகிறான். எனவே,
    விரும்பத்தகாத நட்பால் ஏற்படும் தீமைகளைப்பற்றியும் நட்புப்
    பாராட்டத் தகுதியற்றவர்கள் யார் என்பது பற்றியும் ‘தீ நட்பு’,
    ‘கூடா நட்பு’ எனும் இரண்டு அதிகாரங்களில் வள்ளுவர்
    குறிப்பிடுகிறார்.


    6:4:1 இரட்டை வேடதாரிகள் நட்பு

    சொல் ஒன்று, செயல் இன்னொன்று என இருக்கும் இரட்டை
    வேடதாரிகளுடன் (Hypocrites) நட்புக் கொள்ள வேண்டாம்
    என்கிறார் வள்ளுவர். ஏனென்றால் அவர்களை நம்ப முடியாது;
    நம்பி எதையும் செய்ய முடியாது. இல்வாழ்க்கையில் இரட்டை
    வேடம் குடும்பத்திற்கு ஆபத்து. அரசியலில் இரட்டை வேடம்
    ஆட்சிக்கு ஆபத்து. ஆட்சியில் இரட்டை வேடம் நாட்டுக்கு
    ஆபத்து. தான் சொல்லுவதற்கு நேர் எதிராகச் செயல்படும்
    இரட்டை வேடதாரிகளுடன் நட்பு உறவு கொள்ளாமல் இருப்பது
    நல்லது. அவர்கள் பகைவர்களை விட ஆபத்தானவர்கள்.
    அவர்களது நட்பு, நனவில்     மட்டுமல்ல, அச்சுறுத்தும்
    கனவுகளைவிடத் துன்பம் தரும் என்கிறார் வள்ளுவர்.


    கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு
    சொல் வேறு பட்டார் தொடர்பு



    (குறள் எண்: 819)


    (இன்னாது = துன்பம் செய்வது; மன்னோ = அசை, பொருள்
    இல்லை)

    தமிழில் உள்ள சிறந்த நாடகங்களில் ஒன்று மனோன்மணியம்.
    ஜீவகன பாண்டிய நாட்டு மன்னன். அவனது முதல் அமைச்சன்
    குடிலன். இவன், இரட்டை வேடதாரி. ஜீவகனை வீழ்த்தி பாண்டிய
    நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்பது அவனது உள் ஆசை.
    ஆனால், ஜீவகனிடம், மன்னர் மீதும் நாட்டின் மீதும் மிகவும்
    அக்கறையும், அன்பும் உள்ளவன் போல் நடிக்கிறான். ஜீவகனும்
    அவனை     முழுமையாக     நம்புகிறான்.     தன்     மகள்
    மனோன்மணியத்தின் திருமணத்திற்குச் சேரமன்னனிடம் தூது
    அனுப்பக் குடிலனின் மகன் பலதேவனைத் தேர்ந்தெடுக்கிறான்.
    ஆனால், திருமணம் பேசச் சென்ற பலதேவன், போரை
    வரவழைத்தான். போர் மூள்கிறது. சேர மன்னன் புருஷோத்தமன்,
    பாண்டிய மன்னன் கோட்டையை முற்றுகையிடுகிறான்.
    எனவே     தான்     வள்ளுவர் சொல்வேறு செயல்வேறு
    என்பவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொள்ளாதீர் என்கிறார்.


    6:4:2 நண்பராய் நடிக்கும் பகைவர்கள்

    நட்பின் ஆழத்திற்கு அளவுகோல் நட்பு ஆள்பவர்கொண்டாடும்
    உரிமை. நெடுநாள் பழகிய நெருங்கிய நண்பர்களுக்கு இடையே
    சம்பிரதாயங்களுக்கு இடம் இல்லை. ஒருவரின் உத்தரவோ,
    இசைவோ இன்றிச் செய்யக்கூடாத செயல்களையும், தாமாக வலிந்து
    செய்கின்ற அளவிற்குச் சலுகைகளையும் உரிமையும் தருவது நட்பு.
    இவ் அனுகூலங்களைக் கருதிப் பகைவர் சிலர் தம்
    பகைநோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள நண்பர்கள் போல
    நடிப்பர். அத்தகையோரிடம் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.


    • கைகூப்புவது - கும்பிடுவதற்கா, கொல்வதற்கா?

    இந்திய தேசப்பிதா அண்ணல் காந்தி அடிகளார், பிரார்த்தனையில்
    கலந்து கொள்ளும் போது, கோட்சே என்ற ஒருவன் உண்மையான
    தொண்டன் போல் வந்து அவரது காலைத்தொட்டு வணங்கினான்.
    காந்தி அடிகளார், அவனை உண்மையான தொண்டன் என்றே
    எண்ணினார். ஆனால், வணங்கி நிமிர்ந்த அவன், தன்
    கைக்குள்ளே மறைத்து     வைத்திருந்த    துப்பாக்கியால்
    காந்தியடிகளைச் சுட்டுக் கொன்றான். யாருக்கும் சந்தேகம்
    தோன்றாத வகையில் வந்த அவன் தனது, கையின் உள்
    துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததை எப்படி ஊகிக்க முடியும்?
    கடினம் தான். ஆனாலும் எச்சரிக்கை தேவை.

    சிலர் நம்மை நம்பவைப்பதற்கும், நம்மிடம் இரக்கம் பெறுவதற்கும்
    அழுது கண்ணீர் விடுவார்கள். அதை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
    ஏன் என்றால் அவர்கள் அழுது வடிக்கும் கண்ணீரிலும் கெட்ட
    எண்ணம் மறைந்திருக்கும், கூப்பிய கையினுள்ளே மறைந்திருக்கும்
    கொலைக்கருவியைப் போல. ஆகவே நட்புக்கொள்ளவரும்
    எல்லோரையும் நம்பாதீர்கள் என்று எச்சரிக்கிறார்.


    தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
    அழுத கண்ணீரும் அனைத்து.



    (குறள் எண் : 828)


    (படை = ஆயுதம்; ஒன்னார் = பகைவர்)

    எனும் குறள் மூலம் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.


    • வில் வளைவது, அம்பினைச் செலுத்துவதற்குத் தான்

    நேற்றுவரையிலும் பகைவனாக இருந்தவன், இன்று வந்து நம்மிடம்,
    பணிவாகப் பேசினால், அதைப்பார்த்து நாம் ஏமாந்து விடக்
    கூடாது. அவனது அந்தப் பணிவு பின்னர் நமக்கு ஆபத்தை விளைவிக்கலாம். அவர்கள் வில்லைப் (bow) போன்றவர்கள். வில் வளைவது அல்லது வணங்குவது, எதிரே நிற்பவர் மீது அம்பை
    எய்வதற்கே. வில் வளையும் வணக்கம், தீங்கு செய்வதைக்
    குறிக்கும். அதைப்போல் மிகத் தாழ்ந்து பணிந்து பேசுகின்ற
    சொல்லினது     வணக்கத்தைக் கண்டு, நம்மிடம்     நல்ல
    நட்புக்கொள்ள வந்துள்ளதாக எண்ணவேண்டாம். அப்படிப்
    பணிபவர்களை நம்ப வேண்டாம் என்கிறார் வள்ளுவர்.


    சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில் வணக்கம்

    தீங்கு குறித்தமை யான்.
    (குறள் எண்: 827)


    (ஒன்னார் = பகைவர்)

    வில்லும் அம்பும் வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய
    கருவி. அது ஒரு கொலைக்கருவி. அதை நண்பர்போல், நம்மிடம்
    வந்து பணிந்து நடிக்கும் போலிகளினால் வரும் ஆபத்திற்கு
    ஒப்பிட்டுச் சொல்லுகிறார். வில் இயற்கையாகவே வளைவு
    உடையது. அது வளைய, வளைய அதிலிருந்து வெளிப்படும்
    அம்பின் வேகம் கூடும். மேலும் அது வளைந்தால் ஆபத்து.

    போலி நண்பர்கள் அல்லது பகைவர் மனம்
    நேர்மை கொண்டது அல்ல; அது கோணல்
    (வளைவு) ஆனது. அது புறத்திலும்
    கோணல் ஆனால்? பெரிய ஆபத்து வரும். வள்ளுவர் எவ்வளவு பொருத்தமான
    உவமையைக் கையாளுகிறார். பாருங்கள்!
    ஒரு சிறு உவமையில் எவ்வளவு அரிய நுட்பங்களை எல்லாம் அடக்கி உள்ளார்!

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:05:50(இந்திய நேரம்)