Primary tabs
22 சிறைசெய் காதை
[ மணிமேகலை பொருட்டால் மடிந்தான் உதயகுமரன் என்பது மாதவர்வாய்க்கேட்ட மன்னவன் மணிமேகலையை மந்திரியாகிய சோழிகஏனாதியால் காவல்கொண்ட பாட்டு ]
கடவுள் மண்டிலம் கார்இருள் சீப்ப
நெடுநிலைக் கந்தில் நின்ற பாவையொடு
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்
சாதுயர் கேட்டுச் சக்கர வாளத்து
மாதவர் எல்லாம் மணிமே கலைதனை
இளங்கொடி அறிவதும் உண்டோ இதுஎனத்
துளங்காது ஆங்குஅவள் உற்றதை உரைத்தலும்
ஆங்குஅவள் தன்னை ஆர்உயிர் நீங்கிய
மாபெருங் கோயில் வாயிலுக்கு இசைத்துக்
கோயில் மன்னனைக் குறுகினர் சென்றுஈங்கு
உயர்ந்துஓங்கு உச்சி உவாமதி போல
நிவந்துஓங்கு வெண்குடை மண்அகம் நிழல்செய
வேலும் கோலும் அருள்கண் விழிக்க
தீதுஇன்று உருள்கநீ ஏந்திய திகிரி
நினக்குஎன வரைந்த ஆண்டுகள் எல்லாம்
இன்றே அல்ல இப்பதி மருங்கில்
கன்றிய காமக் கள்ளாட்டு அயர்ந்து
பத்தினிப் பெண்டிர் பால்சென்று அணுகியும்
நல்தவப் பெண்டிர் பின்உளம் போக்கியும்
தீவினை உருப்ப உயிர்ஈறு செய்தோர்
மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
தன்முன் தோன்றல் தகாதுஒழி நீஎனக்
கன்னி ஏவலின் காந்த மன்னவன்
இந்நகர் காப்போர் யார்என நினைஇ
நாவலம் தண்பொழில் நண்ணார் நடுக்குறக்
காவல் கணிகை தனக்குஆம் காதலன்
இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன்
அரசுஆள் உரிமை நின்பால் இன்மையின்
பரசு ராமன்நின் பால்வந்து அணுகான்
அமர முனிவன் அகத்தியன் தனாது
துயர்நீங்கு கிளவியின் யான்தோன் றளவும்
ககந்தன் காத்தல் காகந்தி என்றே
இயைந்த நாமம் இப்பதிக்கு இட்டுஈங்கு
தெள்ளுநீர்க் காவிரி ஆடினள் வரூஉம்
பார்ப்பனி மருதியைப் பாங்கோர் இன்மையின்
யாப்புஅறை என்றே எண்ணினன் ஆகிக்
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
மண்திணி ஞாலத்து மழைவளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர்நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறன்உளம் புரிநூல் மார்பன்
முத்தீப் பேணும் முறைஎனக்கு இல்என
பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்
கொண்டோன் பிழைத்த குற்றம் தான்இலேன்
கண்டோன் நெஞ்சில் கரப்புஎளி தாயினேன்
யான்செய் குற்றம் யான்அறி கில்லேன்
பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத்
மாபெரும் பூதம் தோன்றி மடக்கொடி
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்எனப் பெய்யும் பெருமழை என்றஅப்
பொய்யில் புலவன் பொருள்உரை தேறாய்
பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு
விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக்
கடவுள் பேணல் கடவியை ஆகலின்
மடவரல் ஏவ மழையும் பெய்யாது
நிறைஉடைப் பெண்டிர் தம்மே போலப்
பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை
ஆங்குஅவை ஒழிகுவை ஆயின் ஆயிழை
பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக்
கட்டாது உன்னைஎன் கடுந்தொழில் பாசம்
மன்முறை எழுநாள் வைத்துஅவன் வழூஉம்
பின்முறை அல்லது என்முறை இல்லை
ஈங்குஎழு நாளில் இளங்கொடி நின்பால்
வாங்கா நெஞ்சின் மயரியை வாளால்
ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டுஎன
இகந்த பூதம் எடுத்துரை செய்ததுஅப்
பூதம் உரைத்த நாளால் ஆங்குஅவன்
இன்னும் கேளாய் இருங்கடல் உடுத்த
தரும தத்தனும் தன்மா மன்மகள்
பெருமதர் மழைக்கண் விசாகையும் பேணித்
தெய்வம் காட்டும் திப்பிய ஓவியக்
கைவினை கடந்த கண்கவர் வனப்பினர்
மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு
ஒத்தனள் என்றே ஊர்முழுது அலர்எழப்
மனைஅகம் நீங்கி வாள்நுதல் விசாகை
உலக அறவியின் ஊடுசென்று ஏறி
இலகுஒளிக் கந்தின் எழுதிய பாவாய்
உலகர் பெரும்பழி ஒழிப்பாய் நீஎன,
மாநகர் உள்ளீர் மழைதரும் இவள்என
தெய்வம் காட்டித் தெளித்திலேன் ஆயின்
மையல் ஊரோ மனமாசு ஒழியாது
மைத்துனன் மனையாள் மறுபிறப்பு ஆகுவேன்
இப்பிறப்பு இவனொடும் கூடேன் என்றே
நல்தாய் தனக்கு நல்திறம் சாற்றி
தரும தத்தனும் தந்தையும் தாயரும்
பெருநகர் தன்னைப் பிறகிட்டு ஏகித்
தாழ்தரு துன்பம் தலைஎடுத் தாய்என
நாஉடைப் பாவையை நலம்பல ஏத்தி
மிக்கோர் உறையும் விழுப்பெருஞ் செல்வத்துத்
தரும தத்தனும் தன்மா மன்மகள்
விரிதரு பூங்குழல் விசாகையை அல்லது
பெண்டிரைப் பேணேன் இப்பிறப்பு ஒழிகெனக்
வாணிக மரபின் வருபொருள் ஈட்டி
நீள்நிதிச் செல்வனாய் நீள்நில வேந்தனின்
எட்டிப் பூப்பெற்று இருமுப் பதிற்றியாண்டு
அந்த ணாளன் ஒருவன் சென்றுஈங்கு
என்செய் தனையோ இருநிதிச் செல்வ
பத்தினி இல்லோர் பலஅறம் செய்யினும்
புத்தேள் உலகம் புகாஅர் என்பது
கேட்டும் அறிதியோ கேட்டனை ஆயின்
நீட்டித்து இராது நின்நகர் அடைகெனத்
தக்க மதுரை தான்வறிது ஆக
மற்றவன் இவ்வூர் வந்தமை கேட்டுப்
பொன்தொடி விசாகையும் மனைப்புறம் போந்து
நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண்
நம்முள்நாம் அறிந்திலம் நம்மை முன்நாள்
மம்மர் செய்த வனப்புயாங்கு ஒளித்தன?
ஆறுஐந்து இரட்டி யாண்டுஉனக்கு ஆயதுஎன்
நாறுஐங் கூந்தலும் நரைவிரா வுற்றன
இளமையும் காமமும் யாங்குஒளித் தனவோ
உளன்இல் லாள! எனக்குஈங்கு உரையாய்
இப்பிறப்பு ஆயின்யான் நின்அடி அடையேன்
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை ஆவது
தானம் செய்எனத் தரும தத்தனும்
மாமன் மகள்பால் வான்பொருள் காட்டி
ஆங்குஅவன் அவளுடன் செய்த நல்அறம்
குமரி மூத்தஅக் கொடுங்குழை நல்லாள்
அமரன் அருளால் அகல்நகர் இடூஉம்
படுபழி நீங்கிப் பல்லோர் நாப்பண்
கொடிமிடை வீதியில் வருவோள் குழல்மேல்
மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன்
கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொளச்
சுரிஇரும் பித்தை சூழ்ந்துபுறம் தாழ்ந்த
விரிபூ மாலை விரும்பினன் வாங்கித்
தொல்லோர் கூறிய மணம்ஈது ஆம்என
எல்அவிழ் தாரோன் இடுவான் வேண்டி
மாலை வாங்க ஏறிய செங்கை
ஏறிய செங்கை இழிந்திலது இந்தக்
காரிகை பொருட்டுஎன, ககந்தன் கேட்டுக்
கடுஞ்சினம் திருகி மகன்துயர் நோக்கான்
ஊழிதொறு ஊழி உலகம் காத்து
வாழி எங்கோ மன்னவ என்று
மாதவர் தம்முள்ஓர் மாதவன் கூறலும்,
வீயா விழுச்சீர் வேந்தன் கேட்டனன்
இன்றே அல்ல என்றுஎடுத்து உரைத்து
நன்றுஅறி மாதவிர் நலம்பலம் காட்டினிர்
வென்றி நெடுவேல் வேந்தன் கேட்பத்
தீதுஇன்று ஆக செங்கோல் வேந்துஎன
முடிபொருள் உணர்ந்தோர் முதுநீர் உலகில்
கடியப் பட்டன ஐந்துஉள அவற்றில்
கள்ளும் பொய்யும் களவும் கொலையும்
தள்ளா தாகும் காமம் தம்பால்
ஆங்குஅது கடிந்தோர் அல்லவை கடிந்தோர்என
நீங்கினர் அன்றே நிறைதவ மாக்கள்
நீங்கார் அன்றே நீள்நில வேந்தே!
சேய்அரி நெடுங்கண் சித்திரா பதிமகள்
காதலன் உற்ற கடுந்துயர் பொறாஅள்
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள்.
மற்றவள் பெற்ற மணிமே கலைதான்
முற்றா முலையினள் முதிராக் கிளவியள்
செய்குவன் தவம்எனச் சிற்றிலும் பேரிலும்
ஆங்குஅவள் அவ்இயல் பினளே ஆயினும்
நீங்கான் அவளை நிழல்போல் யாங்கணும்
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள
ஆர்இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன்
காயசண் டிகைவடிவு ஆயினள் காரிகை
காயசண் டிகைதன் கணவன் ஆகிய
வாய்வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி
ஈங்குஇவள் பொருட்டால் வந்தனன் இவன்என
மதிமருள் வெண்குடை மன்ன! நின்மகன்
உதய குமரன் ஒழியான் ஆக,
ஆங்குஅவள் தன்னை அம்பலத்து ஏற்றி
ஓங்குஇருள் யாமத்து இவனைஆங்கு உய்த்துக்
காயசண் டிகைதன் கணவன் ஆகிய
வாய்வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய்
விஞ்சை மகள்பால் இவன்வந் தனன்என
வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி
ஆங்குஅவன் தன்கை வாளால் அம்பலத்து
ஈங்குஇவன் தன்னை எறிந்ததுஎன்று ஏத்தி
சோழிக ஏனாதி தன்முகம் நோக்கி
யான்செயற் பாலது இளங்கோன் தன்னைத்
தான்செய் ததனால் தகவுஇலன் விஞ்சையன்
மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றுஎனின் இன்றால்
மகனை முறைசெய்த மன்னவன் வழிஓர்
துயர்வினை யாளன் தோன்றினன் என்பது
வேந்தர் தஞ்செவி உறுவதன் முன்னம்
ஈங்குஇவன் தன்னையும் ஈமத்து ஏற்றிக்
கணிகை மகளையும் காவல்செய்க என்றனன்
சிறைசெய்
காதை முற்றிற்று.