தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எழுத்துக்களின் தோற்றம்

 • எழுத்துக்களின் தோற்றம்

  முனைவர் மா.பவானி
  உதவிப் பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை

  முன்னுரை :

  பேச்சின் மறுவடிவமே எழுத்து. பழங்காலத்தில் எழுத்துக்கள் இருந்துள்ளன என்பதற்குத் தமிழ் இலக்கியங்கள் நடுகல் வழக்கத்தைக் குறிப்பிடுகின்றன. எழுத்து என்றால் ஓவியம் என்ற பொருளில் “கூருழிக்குயின்ற கோடுமாவெழுத்து” என்ற குறிப்புள்ளது. இலக்கியங்களில் நடுகல் பற்றிய குறிப்புக்கள் இடம்பெறுகின்றன. பகைவருக்கு அஞ்சாது எதிர்த்து நின்று போரிட்டு வென்று இறந்த வீரர்களுக்கு நடுகல் அமைத்துப் போற்றி வருவது தமிழர் பண்பாடாகும். அவ்விதம் நடுகல் அமைக்கும் பொழுது அதில் அவரது பெயரையும் , அவரது பெருமையையும் எழுதுவதாக இலக்கியங்கள் 'மறவர் பெயரும் பீடும் எழுதிய பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்' - (அகநானூறு:67) என்று குறிப்பிடுகின்றன. தொல்காப்பியமும் இவ்வழக்கை, "காட்சி, கால்கோள், நீர்படை, நடுகல், பெரும்படை வாழ்த்தல்" என்று குறிப்பிடுகின்றது. இதிலிருந்தே பின்பு படிப்படியாக எழுத்துக்கள் வளர்ச்சிப் பெற்றுள்ளன. கையால் எழுதப்படுவதாலும், வாயால் ஓலி எழுப்படுவதாலும் அவற்றுக்கு எழுத்து என்று பெயர் வந்தது. இது வரிவடிவ எழுத்து, ஓலி எழுத்து என இருவகை எழுத்துக்கும் பொருந்தும். ஒலி எழுத்துப் பெரும்பாலும் மாறுதலின்றி ஒரு படித்தாக இருக்கும். ஆனால் வடிவெழுத்து, காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டேயிருக்கும். இன்று எழுதும் வடிவில் முற்கால எழுத்துக்கள் எழுதப்படவில்லை. இன்றைய வரிவடிவில் முற்கால எழுத்துக்கள் எழுதப்படவில்லை. ஆயினும், இன்றைய வரிவடிவ எழுத்திற்கு முற்கால எழுத்துக்களே அடிப்படையாகும். இங்ஙனம் அடிப்படையாய் அமைந்த முற்கால எழுத்துக்களை ஆராயும் ஆராய்ச்சியே தொல்லெழுத்தியல் (Palaeography) எனப்படும். எழுத்துக்களுக்கு அடிப்படையாக அமைந்தது ஓவியங்களே என்ற அடிப்படையில் எழுத்துக்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.
  1. ஓவிய எழுத்து
  2. கருத்தெழுத்து
  3. ஓலியெழுத்து

  ஓவிய எழுத்து: pictography :

  எழுத்துக்களின் தோற்றத்திற்கு முதல் அடிப்படை ஓவியங்களேயாகும். வேட்டையாடித் திரிந்த தொல்பழங்கால மக்கள் தமது கருத்துக்களை ஓலி யெழுப்பி அவற்றை வெளிப்படுத்த சில கிறுக்கல்களைப் பயன்படுத்தினர். நாளடைவில் ஓவியங்களாக வரைய ஆரம்பித்தனர். அத்தகைய ஓவியங்கள் பிரஞ்சு, ஸ்பெயின் நாடுகளில் குகைகளில் இன்றும் காணப்படுகின்றன. இவை பல வாக்கியங்களின் தொகுப்பு. அவை சின்னஞ்சிறு ஓவியமாகப் பிரிந்து ஓவ்வொரு ஓவியமும் ஓவ்வொரு சொல்லின் அறிகுறியாக வளர்ச்சியடைந்தன. எழுத தெரியாத பழங்காலத்தில் ஓரு கோயிலுக்குப் பல மாடுகள் இனாமாக வழங்கப்பட்டன என்றால், கோயிலார் சுவரில் ஓரு மாட்டின் தலையை ஓவியமாக எழுதி எத்தனை மாடுகள் வந்தனவோ அத்தனைப் புள்ளிகளைப் பக்கத்தில் இட்டனர். இங்ஙனம் மாட்டின் தலையை எழுதி அது மாடு என்பதன் அறிகுறி என்று கருதப்பட்ட காலமானது, ஒரு சொல்லுக்கு ஒரு ஓவியம் என்று எழுதப்பட்ட காலமாகும். சீனம், ஜப்பானியம் போன்ற மொழிகளில் ஒரு சொல்லுக்கு ஒரு வடிவம் என்ற ஓவிய எழுத்து முறை இன்றும் இருந்து வருகிறது.

  கருத்து எழுத்து: Ideography :

  ஓவிய எழுத்துக்கள் நாளடைவில் கருத்தெழுத்தாக வளர்ச்சியுற்றன. சூரியனின் ஓவியத்தை எழுதி இது சூரியன் என்று சொல்லப்பட்டால் அது ஓவிய எழுத்து எனப்படும். அந்தச் சூரியனின் ஓவியம் சூரியனோடு தொடர்புடைய பகற்காலத்தையோ சூரிய வெப்பத்தையோ குறிக்கிறதாகக் கொள்ளப்பட்டால் அது கருத்தெழுத்து எனப்படும்.

  ஒலி எழுத்து: Phonography :

  ஒரு சொல்லுக்கு ஒரு அடையாளமாக எழுதிய ஓவியம், நாளடைவில் அச்சொல்லின் முதல் ஒலிக்கு உரிய அடையாளமாக ஏற்பட்டது. இங்ஙனம் ஒரு ஒலிக்கு ஒரு அடையாளம் என்று ஏற்பட்ட நிலையே ஒலி எழுத்தாகும். அதாவது ஓவிய எழுத்திலிருந்து ஒலி எழுத்துத் தோன்றிய மாற்றம் புரட்சிகரமானமதாகும். கிரேக்க மொழியில் காளை மாட்டை ஆல்பா என்பர். எனவே காளை மாட்டின் தலையை எழுதி முதலில் ஆல்பா என்று கூறிவந்தனர். பிறகு அதே ஓவியம் ஆல்பா என்ற சொல்லின் முதல் ஒலியாகிய “அ அல்லது a” என்பதன் அறிகுறியாக கொள்ளப்பட்டது.

  எழுத்து வகை :

  ஒலி எழுத்துக்கள் அகர வகை (Alphabets) என்றும் உயிர்மெய் ( Vowel Consonants) வகை என்றும் இரு வகைப்படும். ஒரு உயிர்மெய் வகை எழுத்தை ஒரே வடிவமாக எழுதாமல் மெய் வடிவமும் உயிர் வடிவமுமாகப் பிரித்து எழுதும் முறையே அகர வகையாகும். தமிழில் எழுதும் "க" என்ற மெய்யை ஆங்கிலத்தில் "ka" என்ற உயிரும் மெய்யுமாகப் பிரித்து எழுதுவர். இங்ஙனம் எழுதுவதே அகர வகையாகும். அவ்விதம் பிரித்து எழுதாமல் "க" என்றே எழுதுவது உயிர்மெய் வகையாகும்.

  உயிர் மெய் வகை :

  ஓவிய எழுத்திலிருந்து ஒலி எழுத்துத் தோன்றிய போது முதலில் உயிர்மெய் வகை தான் தோன்றியிருக்கும். இந்த வகையில் எழுத்துக்கள் எண்ணற்றனவாகப் பல்கிப் பெருகி இருக்கும். இவற்றை நினைவில் வைப்பது மிகவும் கடினமாகவே இருந்திருக்கும்.

  அகர வகை :

  சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும் வாழ்ந்த வடசெமிட்டிக் மக்கள் கி.மு. 1500ல் அகர வகை எழுத்தைக் கண்டுப்பிடித்தனர். தமிழ் மொழிக்குப் பயன்படுத்துவது “உயிர் மெய் வகை” எழுத்தாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 19:00:10(இந்திய நேரம்)