தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • பல்யானைச் செல்கெழுகுட்டுவன்

  முனைவர் இரா.காமராசு
  உதவிப்பேராசிரியர்
  இலக்கியத்துறை

  ஒரு சேர வேந்தன். இவன் உதியஞ்சேரலுக்கு வெளியன் வேள் என்பானின் மகளாகிய நல்லினி (வெளியன்வேண்மான் நல்லினி) ஈன்ற மகன். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி. இவனைப் பாலைக் கௌதமனார் பாடிய பத்துப்பாடல்கள் பதிற்றுப்பத்தினுள் மூன்றாம் பத்தாக அமைந்துள்ளது. அவற்றால் அறிய வரும் செய்திகள் பலவாகும். இவன் பெயர் பல்யானைக் குட்டுவன் எனவும் குறுகி வழங்கும் (பதி. 29) எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யக் கருதாது விளங்கிய கொள்கையோடும், கதிரவனையொத்து எப்போதும் தப்பாத சிறப்பமைந்த உண்மையோடும் கடவுளைப் பேணும் பொருட்டுச் சொல் இலக்கண நூல், பொருளிலக்கண நூல், சோதிட நூல், வேதம், நெஞ்சம் என்ற ஐந்திணையும் ஒருங்கே போற்றி, அவற்றின் துணையோடு இவன் பல வேள்விகளைச் செய்தான். தன் செல்வமனைக் கண் வருவோர் யாரும் வரையாது வாரியுண்டு வேற்றிடம் செல்லாது தன்னிடமே தங்குதலை விரும்பி விருந்து புறந்தருதலையும் ஒரு வேள்வியாகச் செய்தான். அவ்வாறு செய்த வேள்விப் புகையும், அட்டிற் புகையும் கலந்து கமழும் மணத்தோடு வானத்துக் கடவுளரும் விரும்பச் செல்வ வளம் முதிர்ந்த சிறப்பினையுடைய இவன் முரசம் ஒலிக்க ஆரவாரம் மிக்க பகைவர் நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று அங்குள்ள சிறந்த அணிகலன்களைக் கவர்ந்து வருங்கால் பகை நாடுகளின் மண்ணெல்லாம் படும் மார்பனாகச் சிறப்பிக்கப் பெற்றான். மலையையுடைய பூழி நாட்டை தன்னடிப்படுத்தி ஆண்டமையால் ‘பூழியர் கோவே’ என்றும், மழவர் என்னும் மரபினரைத் தன் படையில் கொண்டிருந்தமையால், ‘மழவர் மெய்ம்மறை’ எனவும், அயிரை மலைக்குத் தலைவனாதலால் ‘அயிரைப் பொருந’ எனவும் குறிக்கப் பெறுவான். நாட்டிலே மழை வளம் சிறந்து மாந்தர் யாவரும் நோயின்றி ஊழியளவும் வாழுதற்கு நீ நின் தேவியுடன் ஆயிரவெள்ளம் காலம் வாழிய என்று நாடு காத்தற் சிறப்பினால் வாழ்த்தவும் பெற்றான். கொங்கரது நாட்டினைவென்று தன்னடிப்படுத்தியதும், அகப்பா என்னும் அரணத்தை எறிந்ததும் உம்பற்காட்டைத் தன்னாட்சியில் நிறுத்தியதும் இவன் வெற்றிச் செயல்களாகும்.

  மாறுபட்டோரை வென்று இவன் அழித்த அம்மாற்றார் நாடுகள் கவினழிந்து காடுகளாயின. கோடை, நீடக் குன்றம் பொலிவழிய அருவிகளற்ற பெரிய வற்கடக் காலத்தும் இவன் ஆட்சியினால் நாடு திருவொடும் திகழ்ந்தது. நிலம் பசுமையற்று வாடி விளை நிலங்கள் கெட்ட காலத்தும் இவன் பரிசிலர்க்குப் பசி நீங்க உணவளித்துப் பெருங்கலன்களை வழங்கினான்.

  ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறினையும் விரும்பியொழுகும் அறம்புரி அந்தணர், மொழிப்படித் தான் பணிந்தொழிகித் தன்வழியில் உலகம் ஒழுகப் புகழுடன் திகழ்ந்தான். நிலம், நீர், தீ, வளி, வெளி என்ற ஐந்தையும் அளந்து தன் குலத்தில் தனக்கு முதியராய் உள்ளோரைத் தன் அருட்பண்பினால் தழுவிக் கொண்டு அவர்க்கும் தன்னாட்டைப் பகுத்தளித்தான். தன்னாட்டின் மேல் கடலும் தான் வென்று தன்னாடாக்கிய நாட்டினதான கீழ்க்கடலும் என்ற இருகடல் நீரையும் ஒரு பகலிலே வரும்படி யானைகளை வரிசையாய் நிறுத்தியழைப்பித்து நீராடினான். தன்னாட்டு அயிரை மலைக் கொற்றவையைத் தன் குலத்து முன்னோர் பராவிய முறைப்படித் தானும் பராவினான். தன்னைப் பத்துப் பாடல்களால் பாடிய பாலைக் கௌதமனார்க்குப் பரிசிலாக அவர் வேண்டியபடி பார்ப்பாரில் பெரியோரைக் கேட்டறிந்து ஒன்பது பெருவேள்வி வேட்பித்துப் பத்தாம் பெருவேள்வியில் அவரையும், மனைவியையும் துறக்கம் புகச் செய்தான். அரசாட்சியில் இருபத்தைந்து ஆண்டு வீற்றிருந்த இவன் குறையாத நற்புகழையும், உயர்ந்த கேள்வியறிவையுடைய தன் மறையோராகிய நெடும்பாரதாயனார் தனக்கு முன்னே துறந்து காடு போகக்கண்டு தானும் துறவுள்ளம் கொண்டு ஆற்றல் சான்ற நெஞ்சுறுதியோடு துறந்து காடு சென்றான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:18:26(இந்திய நேரம்)