தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • நக்கீரர்

  முனைவர் இரா.காமராசு
  உதவிப்பேராசிரியர்
  இலக்கியத்துறை

  நக்கீரர் என்னும் பெயருடையார் தமிழ் நூற்பரப்பில் பலர் விளங்குகின்றன். அவருள் முன்னவர் பத்துப்பாட்டு எட்டுத்தொகைகளில் இடம்பெற்றுள்ள நக்கீரர் ஆவர்.

  • நக்கீரர், சங்கப்புலவர்

  • நக்கீரர்,களவியல் உரையாசிரியர்

  • நக்கீரர், திருவள்ளுவமாலைப் பாடல் பாடியவர்

  • நக்கீரதேவ நாயனார்

  • நக்கீரர் கதை

  சங்கப்பாடல்கள் சிலவற்றில் சங்ககாலப் புலவர் நக்கீரரின் பெயர் நக்கீரன், நக்கீரனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 37 பாடல்கள் நக்கீரர் பாடியனவாகச் சங்க நூல் தொகுப்பில் உள்ளன.

  பத்துப்பாட்டு தொகுப்பில் உள்ள 10 பாட்டுகளில் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை ஆகிய இரண்டு பாட்டுகளையும் பாடியவர் நக்கீரர்.

  அகநானூறு – 36, 57, 78, 93, 120, 126, 141, 205, 227, 249, 253, 290, 310,

  340, 346, 369, 389 (17 பாடல்கள்)

  குறுந்தொகை – 75, 105, 131, 161, 266, 280, 368 (7 பாடல்கள்)

  நற்றிணை – 31, 86, 197, 258, 340, 358, 367 (7 பாடல்கள்)

  புறநானூறு – 56, 189, 395 (3 பாடல்கள்) இவரால் பாடப்பெற்றவை.

  இவர் பாடிய புறப்பாடல்களில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய பாண்டியன் நன்மாறனையும், சோழ நாட்டுப் பிடவூர் கிழான்மகன் பெருஞ்சாத்தனையும் பாடியுள்ளார். பெருஞ்சாத்தன் “பொன் போன் மடந்தையைக் காட்டி இவனை, என்போற் போற்று” என்ற அருமையை நினைத்து உருகுகின்றார் (395). நாட்டு வேந்தனுக்கும் காட்டு மாந்தனுக்கும் “உண்பது நாழி உடுப்பவை இரண்டே, பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே” என்று பொருண்மொழிக் காஞ்சித் துறையில் கூறி அனைவரும் சமம் என்பதை உணர்த்துகின்றார் (185).

  இவர் பாடும் அகப்பாடல்களில் சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களையோ சிற்றரசர்களையோ குறித்த வரலாற்றுச் செய்திகளை ஆங்காங்குக் குறிப்பிடுதலால் இவர் பாடல்களின் வழியே அறியவரும் பெருமக்களும் புலவர்களும் பலராவர். அவ்வாறே ஊர்ப்பெயர்களும் பலவாகும்.

  பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், கிள்ளிவளவன், அக்னி, திதியன், கடவுள், எருமை, குட்டுவன் சேரல், திரையன், பழையன்மாறன், அருமன் முதலியோர் இவரால் பாடப்பட்டுள்ளனர். இவர் தூங்கல் ஒரியார், கபிலர் ஆகிய புலவர்களைப் புகழ்ந்து பாடியிருக்கிறார். காவிரிப்பூம்பட்டினம், மருங்கூர்ப் பட்டினம், தொண்டி, மதுரை, ஊனூர், பவத்திரி, சிறுகுடி ஆகிய ஊர்கள் இவர் பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளன.

  பாரியின் பறம்பு மலையை மூவேந்தரும் முற்றுகையிட்டிருந்த போது கபிலர் கட்டளையால் கிளிகள் தினைக்கதிர் கொய்து கொண்டு வரக் கோட்டைக்குள் இருந்தோர் உண்டு வாழ்ந்த செய்தியைக் கூறுவதும் (அகம். 78). கார்த்திகை மாதத்துக் கார்த்திகையில் புதுமண மகளைப் பக்கமுயர்ந்த பெரிய அடுப்பில் பால் காய்ச்சச் செய்வதும், கார்கால நெல்லைப் பதத்துனுடன் இடித்துப் பொரித்துப் படைப்பதும், வீடுகளிலும், தெருக்களிலும் விளக்கேற்றி வைத்து வழிபடுவதுமாகிய செய்திகளை (அகம் 141) இவர் பாடல்கள் கூறுகின்றன.

  சங்ககால வரலாற்றுச் செய்திகள் பலவற்றை இவர்தம் அகத்திணைப் பாடல்களில் இணைத்துப் பாடியுள்ளார். இவரது உள்ளுறை உவமங்களில் வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்லாது மக்களின் பண்பாடுகளும், ஆளி (சிங்கம்) வாவல், வரால் மீன் போன்ற உயிரினங்களும் சுட்டப்படுகின்றன.

  கடவுள்கள் குறித்து பல பதிவுகளை நக்கீர்ர் செய்துள்ளார்.

  • நெடுவேள் மார்பில் ஆரம் (அகம். 120) (நெடுவேள் = திருமால், முருகன்)

  • முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் அவனது அருளைப் பெறலாம் என்று தம்

  திருமுருகாற்றுப்படையில் குறிப்பிட்டுள்ளார்.

  நான்கு கடவுள்கள் தோலா நல்லிசை நால்வர் (புறம். 56)

  1. சிவன் – ஏறு என்னும் காளைமாட்டை ஊர்தியாகக் கொண்டவன். செஞ்சடை கொண்டவன். கணிச்சி என்னும் சூலம் ஏந்தியவன். ‘கூற்று’ என்றும் இவனைக் கூறுவர். இவனது சீற்றத்துக்கு இணை இல்லை.

  2. வலியோன் – சங்கு போன்ற மேனியை உடையவன். நாஞ்சிலை ஏந்தியவன். பனை மரத்தைக் கொடியில் கொண்டவன். இவனது வலிமைக்கு இணை இல்லை.

  3. மாயோன் – கழுவிய மணி போன்ற மேனியை உடையவன். கருடக் கொடையை உடையவன். விறல் என்னும் புகழில் இவனுக்கு இணை இல்லை.

  4. செய்யோன் – சிவந்த மேனியை உடையவன். மயில் கொடி உடையவன். இவனது ஊர்தியும் மயில். நினைத்ததை முடிப்பதில் இணை இல்லாதவன்.

  கணங்கெழு கடவுள்: (நற்றிணை 358)

  • பல கடவுள்கள் இருக்கும் கோயிலில் உயர்பலி தூவி மகளிர் வழிபடுவர்.

  குடிமக்கள் குறித்தும் பலவற்றை நக்கீரர் கூறுகின்றார்.

  • உமணர் – உப்பை வண்டியில் ஏற்றிக்கொண்டு ஒழுகையாக (சாரி சாரியாகச்) செல்வர் (அகம் 310).

  • கொங்கர் – இவர்களை ஓட்டி விட்டுப் பசும்பூண் பாண்டியன் தனதாக்கிக்
  கொண்டான் (அகம் 253).

  • மழவர் – மயில்தோகையைத் தொடையாக்கித் தலையில் அணிந்திருப்பர்.
  (கோடை = கோடைக்கானல்) பகுதி மக்கள் (அகம் 249).

  • வடுகர் – அயிரியாறு பாயும் எருமை நன்னாட்டு (மைசூர்) மக்கள் (அகம் 253).

  தமிழ் மக்கள் தம் வாழ்வில் தம் மழலைச் செல்வங்களுக்கு ‘நக்கீரன்’ எனப் பெயர் சூட்டுவது பெருவழக்கு. இதிலிருந்து நக்கீரனின் செல்வாக்கை அறியலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:17:18(இந்திய நேரம்)