தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழ் எழுத்துக்கள்

 • தமிழ் எழுத்துக்கள்

  முனைவர் மா.பவானி
  உதவிப் பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை

  முன்னுரை :

  பொ.ஆ. 6ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழி எழுத்திலிருந்து தமிழ், வட்டெழுத்து என்னும் இரு வகை எழுத்துக்கள் தோன்றின. இவ்விரு எழுத்துக்களும் சில இடங்களில் ஒரே கல்வெட்டில் கலந்தும் காணப்படுகின்றன. தமிழ் எழுத்தின் வடிவத்தைத் தெளிவாக முதன் முதலில் பல்லவ மன்னன் சிம்மவர்மனுடைய பள்ளன் கோயில் செப்பேட்டில்தான் காணமுடிகிறது. இருப்பினும் இவற்றின் எழுத்தமைதி காலத்தால் பிற்பட்டதாக உள்ளது. கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே செங்கல்பட்டு மாவட்ட வல்லத்தில் உள்ள கல்வெட்டுத்தான் எழுத்தமைதியில் காலத்தால் முற்பட்ட தமிழ் கல்வெட்டாகக் கருதப்படுகிறது.

  பல்லவர் காலம் :

  முற்காலப் பல்லவரின் செப்பேடுகள் தெலுங்கு, கிரந்தம், கன்னடம் ஆகிய மூவகை வடிவில் எழுதப்பட்டன. சிம்ம விஷ்ணுவின் பள்ளன்கோயில் செப்பேடுகள் கிரந்த எழுத்திலும் தமிழ் எழுத்திலும் அமைந்துள்ளது. மகேந்திரவர்மனின் வல்லம் கல்வெட்டு முழுவதும் தமிழில் அமைந்துள்ளது. முதல் நரசிம்மவர்மனின் திருக்கழுக்குன்றக் கல்வெட்டில் சில வட்டெழுத்துக்கள் கலந்துள்ளன. பிற்காலப் பல்லவர் செப்பேடுகள் கிரந்தத்திலும், தமிழிலும் அமைந்துள்ளன. அவர்களின் கல்வெட்டுக்கள் தமிழ், கிரந்தம், நாகரம் ஆகிய 3 வடிவங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லவர் கால நடுகற்கள் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

  கி.பி. 743ஐச் சேர்ந்த இரண்டாம் நந்திவர்மனின் மேல்சாணர்குப்பத்தில் கிடைத்த நடுகல் கல்வெட்டே தமிழில் கிடைத்த நடுகல் கல்வெட்டுக்களுள் காலத்தால் முந்தையதாகும்.

  சோழர் காலம் :

  முற்காலச் சோழரின் தமிழ் எழுத்துக்கள் பெரிதாகவும் அழகாகவும் உள்ளன. கவனத்துடன் எழுதப்பட்டதால் பிழைகள் குறைவாக உள்ளன. முதலாம் இராசராசன் கால எழுத்துக்கள் ஒப்பற்ற வனப்பு உடையன. பிற்காலச் சோழரின் எழுத்துக்களில் அழகும் அமைதியும் இல்லை. 13 ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் எழுத்துக்களின் அழகு குறையத்தொடங்கியது.

  பாண்டியர் காலம் :

  கி.பி. 7,8,9 ஆம் நூற்றாண்டுகளில் கல்வெட்டுக்களில் தமிழ் கிரந்தமும், செப்பேடுகளில் கிரந்தம், வட்டெழுத்தும் பயன்படுத்தப்பட்டது. கி.பி. 12ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்தின் பயன்பாடு சிறிது சிறிதாக குறையத்தொடங்கியது. தமிழ் எழுத்தின் ஆதிக்கம் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தது.

  விஜயநகர நாயக்கர் காலம் :

  கி.பி. 14, 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் எழுத்தோடு கிரந்த எழுத்தும் கலந்து கல்வெட்டுகளும் செப்பேடுகளும் எழுதப்பட்டன. தமிழின் தனித்தன்மை மங்கத்தொடங்கியது. இவர்கள் தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். அத்தோடு சமஸ்கிருத ஈடுபாடுடையவர்கள். சமஸ்கிருதமும், தமிழும் கலந்து எழுதும் மணிபிரவாள நடை "விஜய நகர காலக்கல்வெட்டுக்களில் இடம்பெற்றது". நாயக்கர்களும், விஜய நகர அரசையே பின்பற்றினர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:49:34(இந்திய நேரம்)