தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கரோஷ்டி

 • கரோஷ்டி

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை

  இது ஒரு வகையான எழுத்து ஆகும். இவ்வகை எழுத்துக்கள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டன. இவ்வெழுத்து பொ.ஆ. 1830இல் ஜெனரல் வென்சுரா என்பவரால் முதன் முதலில் படிக்கப்பட்டது. பொ.ஆ. 1886இல் டெர்ரைன் - டி - லாக்கோப்பெர்ரி என்பவர் இவ்வெழுத்துக்கு கரோஷ்டி என்று பெயரிட்டார்.

  கரோஷ்டி எழுத்துக்கள்:

  பெயர்க்காரணம் மற்றும் பிற பெயர்கள்:

  சமஸ்கிருத மொழியில் கர என்றால் கழுதை என்றும் ஒஷ்டி என்றால் உதடு என்றும் பொருள். இவ்வெழுத்துக்கள் கழுதையின் உதடை ஒத்திருப்பதால் இவற்றிற்கு இப்பெயர் வழங்கப் பெற்றிருக்கக்கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர். இவை கிடைக்கும் இடத்தின் அடிப்படையில் காபூல் பகுதியைச் சுற்றிக் காணப் பெறுவதால் காபூலியன் என்றும் காந்தாரியன் என்றும் அர்ரியனியன் என்றும் அழைக்கப் பெற்றது. கரோஷ்டி எழுத்துக்கள் இடம்பெறும் கல்வெட்டுகள் பாலி மற்றும் பிராகிருத மொழியில் உள்ளதால் இவை பாக்ட்ரோபாலி மற்றும் அர்ரியனோ பாலி என்றும் மொழியின் அடிப்படையில் பெயரிட்டு அழைக்கப் பெற்றுள்ளது.

  கரோஷ்டி எழுத்தின் காலம் (300 BCE - 300 CE):

  பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டாகும்.

  கரோஷ்டியின் தோற்றம்:

  கரோஷ்டி வலமிருந்து இடமாக எழுதப் பெற்றதன் அடிப்படையிலும் இன்னும் பல கருத்துக்களின் அடிப்படையிலும் அராமிக் எழுத்திலிருந்தே கரோஷ்டி தோன்றியுள்ளது என்று பியூலர் சந்தேகத்திற்கிடமின்றி 1895இல் நிரூபித்தார்.

  கரோஷ்டி எழுத்து காணப்பெற்ற இடங்கள்:

  இவ்வெழுத்து இந்தியாவிற்கு வடமேற்கில் அமைந்துள்ள பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பலுசிஸ்தான் போன்ற பகுதிகளில் பெரிதும் பயன்பாட்டிலிருந்தன. அசோகரது சபாஸ்கார்கி, மன்செகரா (பிரிவினைக்கு முந்திய இந்தியா) கல்வெட்டுகளில் தான் முதன் முதல் கரோஷ்டி எழுத்து காணப்பெறுகிறது. இந்தியாவில் டெல்லி மற்றும் மதுராவைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் குமாரகர் (பீகார்), பிரம்மகிரி, சித்தபுரா, ஜடிங்க ராமேஷ்வரம் (கர்நாடகா) போன்ற இடங்களில் இவை காணப்பெறுகின்றன.

  கரோஷ்டி எழுத்துக்கள் காணப்பெறும் பொருட்கள்:

  தென் ஆசியாவில் இவ்வெழுத்துக்கள் பெரும்பாலும் கல்வெட்டுக்களிலேயே காணப்பெறுகின்றன. இது தவிர மரம் உலோகம் மற்றும் காசுகள் போன்ற பிற பொருட்களிலும் இவை நூற்றுக்கணக்கில் காணப்பெறுகின்றன. பெரும்பாலான கரோஷ்டி ஆவணங்கள் புத்த மதத்திற்கு வழங்கப் பெற்ற கொடைகளைப் பற்றியே கூறுகின்றன. இந்தோ கிரேக்க மற்றும் இந்தோ சித்திய காசுகளில் இவை பெரும்பாலும் இடம்பெறுகின்றன. இவை மட்டுமின்றி அடும்பரர்கள், குனிந்தர்கள் மற்றும் இராஜன்யர்கள் போன்ற பழங்குடி குடியரசு வெளியிட்ட காசுகளிலும் இவை இடம்பெறுகின்றன. கரோஷ்டி எழுத்துக்கள் பிராமி மற்றும் கிரேக்கம் போன்ற இரு வரிவடிவ (bi-scriptual) மூன்று வரிவடிவம் (tri-scriptual) பொறிக்கப் பெற்றுள்ள காசுகளிலும் காணப்பெறுகின்றன. ஆனால் இவை அரிதாகவே கிடைக்கின்றன

  கரோஷ்டி வழக்கொழிந்தமை:

  இந்திய துணைக் கண்டத்தில் குறிப்பாக வடமேற்குப் பகுதியில் சுமார் 500 ஆண்டுகள் வழக்கிலிருந்தது. குஷானர் மரபினரின் வீழ்ச்சியுடன் இவ்வரிவடிவம் வழக்கொழிந்தது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2017 19:37:43(இந்திய நேரம்)