தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • நம்பிநெடுஞ்செழியன்

  முனைவர் இரா.காமராசு
  உதவிப்பேராசிரியர்
  இலக்கியத்துறை

  ஓருர் குறுநில மன்னன். ஆடவரிற் சிறந்தோன் என்ற பொருளையுடைய நம்பி என்பது இவன் இயற்பெயர். பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தே அவனாட்டில் குறுநில மன்னாய்த் திகழ்ந்து அவனுக்குப் படைத்துணை புரிந்தமையால் அவன் பெயரைச் சிறப்புப் பெயராய்க் கொண்டு இவன் நம்பி நெடுஞ்செழியன் என்று வழங்கப்பெற்றனன் என்பர் ஔவை.துரைசாமிப்பிள்ளை. இந்நம்பி நெடுஞ்செழியன் வாழ்வாங்கு வாழ்ந்து இயற்கையெய்திய காலத்துப் பேரெயின் முற்றுவலார் பாடியதொரு பாடலால் (புறம். 239) இவனுடைய பண்புகளும், செயல்களும் விளங்குகின்றன. இளமகளிரது தோளை முயங்கினான், இளமரக்காக்களில் பூச்சூடினான், சாந்து பூசினான் பகைத்தோரைக் கிளையொடும் கெடுத்தான். நட்புக்கொண்டோரை மிகுத்துக் கூறினான். வலியரென யார்க்கும் தான் வழிபாடு கூறியறியான். மெலியரென யாரையும் தாழ்த்துத் தன்னை மிகுத்துச் சொல்லியறியான். பிறரிடத்தே தான் இரந்தறியான் தன்னிடத்து வந்து இரந்தோர்க்குத் தான் மறுதலையறியான்.

  வேந்தருடைய அவைக்களத்தின் கண் தனது உயர்ந்த புகழை வெளிப்படுத்தினான். தன்மேல் வரும் படையைத் தன்னெல்லையுள் புகாமல் எதிர் நின்று தடுத்தான். தனக்கு ஆற்றாது புறங்கொடுத்துப் பெயர்ந்த படையின் புறக்கொடை கண்டு அதன்பின் செல்லாது நின்றான். விரைந்த செலவையுடைய குதிரையைத் தன் மனத்தினும் விரையச் செலுத்தினான். நெடுந்தெருவில் தேரைச் சூழ இயக்கினான். உயர்ந்த இயல்புடைய களிற்றை ஏறிச் செலுத்தினான். மதுக்குடங்களைப் பலர்க்கும் வழங்கினான். பாணர் உவப்ப அவர் பசியை மாற்றினான். நடுவு நிலைமையிற் பிழையாதபடி மயக்கம் தீர மொழிந்தான் என்று இன்பமும், பொருளும், அறனும் இயல்புற இயந்துவர இவன் வாழ்ந்த வாழ்க்கையை அப்புலவர் அடுக்கிப் பாடுவர். இவ்வாறு செய்யத்தகுவனவெல்லாம் செய்து முடித்தானாகலான் புகழை விரும்புவோனாகிய இவன் தலையை வாளால் அறுத்துப் போகடினும் போகடுக. (இட்டுப் புதைப்பினும் புதைக்க) அன்றிச் சுடினும் சுடுக. யாதாயினும் செய்க என இவனுக்குரிய ஈமச்சடங்கினைக் குறித்துக் கூறும் முறையில் அவற்றால் ஒன்றும் இவனது மறுமைநிலைக்கு மாற்றமில்லை என்பதை அவர் உணர்த்துவார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:16:58(இந்திய நேரம்)