தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • நல்லியக்கோடன்

  முனைவர் இரா.காமராசு
  உதவிப்பேராசிரியர்
  இலக்கியத்துறை

  இவனை ஒய்மானாட்டு நல்லியக்கோடன் எனக் கூறுவர். சிலர் இவனை ஏறுமா நாட்டு நல்லியக்கோடன் எனவும் வழங்குதலுண்டு. இவன் ஒரு குறுநில மன்னனாவான், பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி என்னும் ஏழு வள்ளல்கள் மாய்ந்த பின் வாழ்ந்த பெருவள்ளல் இவன். இவனைப் புகழ்ந்து பாடியவர் சிறுபாணாற்றுப்படை பாடிய இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரும் புறநானூறு (176, 376) பாடிய புறத்திணை நன்னாகனாரும் ஆவர். ‘நல்லியக்கோடன் பெருமா விலங்கைத் தலைவன்’, பாணரின் புகழ்மாலை சூடியவன், அவனைத் துணையாக உடைமையால் என்னைப் பொருந்திய விதி வாழ்வதாகுக. அது எந்தக் குறையும் உடையதன்று, அவனது மென்சாயலைக் காண்டொறும் அவனுடைய நட்பு இடையறாது செல்ல வேண்டும் என நினைந்து என் நெஞ்சம் பின் வரு நாள்களுக்கு இரங்குகின்றது எனப் புறம்.176 கூறுகிறது. புறம். 376 இல் நன்னாகனார் தமக்கு நல்லியக்கோடன் அரவு வெகுண்டன்ன தேறலையும் உணவையும் நல்கி வறுமைத்துயர் துடைத்ததையும் அவன் நல்கிய வளத்தால் அன்று தொட்டு இன்று வரை இரத்தல் தொழிலை நினைக்கவில்லை. புரவலர் கடை வாயிலிற் சென்று புகழ்ந்து பாடவும் நினைக்கவில்லை என்பதையும் கூறி அவனது கைவண்மையைப் புகழ்ந்துள்ளார்.

  சிறுபாணாற்றுப்படை இவனை ஓவியர் பெருமகன் எனப் பாராட்டும் ஓவியர் பெருமகன் என்பது ஒய்மான் என மருவியிருக்கலாம் என கலைக்களஞ்சியம் கூறும் (தொகுதி 2 .பக்கம் 724) நல்லியக் கோடன் தோன்றிய ஓவியர் குடி நாகர் வகுப்பினுள் ஒரு பிரிவு என்பர். இவன் ஊராகச் சிறுபாண் குறிப்பிடும் கிடங்கில் திண்டிவனத்தைச் சார்ந்ததென்றும் இப்பொழுது கிடங்கால் என வழங்குகிறதென்றும் கூறுவர். இவ்வூரில் தூர்ந்த அகழியும் சிதைந்த கோட்டையும் உள. மற்றோர் ஊராகிய மாவிலங்கை, அருவா நாடும் அருவா வடதலை நாடும் சேர்ந்த இடமாம், மற்றை ஊர்களாய எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் என்பவை தொண்டை நாட்டிலுள்ள 24 கோட்டங்களில் மூன்று கோட்டங்களின் தலைநகரங்களாகும். வேலூர் இப்போது உப்பு வேலூர் எனவும் குறிக்கப்படுகிறது. இவன் போரில் களிநறைச் செலுத்துதலால் தழும்பு கிடந்த வீரக்கழல் அணிந்த அடியினையும் பிடிக் கூட்டத்தைப் பலர்க்கும் கொடுக்கும் மாரி வண்கையினையும் உடைய கோடியர் புரவலன் ஆவான், பொருநர்க்கும் புலவர்க்கும் அருமறை நாவின் அந்தணர்க்கும் அடையா வாயிலையுடையவன். இவனுடைய பாண்டி நாட்டினைப் பல நிலையினரும் பாராட்டுவதாகச் சிறுபாணாற்றுப்படை வகுத்துக் கூறுவது சிறப்பாக உள்ளது.

  செய்ந்நன்றியறிதல், சிற்றினம் சேராமை, இன்முகம் உடைமை, இனியனாதல் ஆகிய இயல்புகளை அறிந்தோர் பாராட்டுவர். அஞ்சினார்க்கு அளித்தல், வெஞ்சினமின்மை, வீரர் அணிக்குள் சென்று அதனைக் குலைத்தல், அழிபடை தாங்குதல் ஆகியவற்றை வீரர் புகழ்வர். கருதியது முடித்தல், காமுறப்படுதல், ஒருவழிப்படாமை, ஓடியது உணர்தல் ஆகிய பண்புகளை மகளிர் ஏத்துவர். அறிவு மடம்படுதல், அறிவு நன்குடைமை, உயிரைப் பறித்தல், வரையாது கொடுத்தல் ஆகிய இயல்புகளைப் பரிசிலர் போற்றுவர் “முதியோர்க்கு வழங்கும் கையினன், இளையோர்க்கு மலர்ந்த மார்பினன், ஏரோர்க்கு செங்கோலினன், தேரோர்க்கு நிழல் வெம்மை செய்யும் வேலினன்” என நல்லியக்கோடனின் நல்லியல்புகளைச் சிறுபாணாற்றுப்படை சிறப்பித்துக் கூறுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:15:39(இந்திய நேரம்)