தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • தாயங்கண்ணனார்

  முனைவர் இரா.காமராசு
  உதவிப்பேராசிரியர்
  இலக்கியத்துறை


  தாயங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். 11 பாடல்கள் இவர் பாடியனவாகக் காணக்கிடக்கின்றன. இவரது மனைவியார் தாயங்கண்ணியார் இவரும் புலவர்.

  வாய்வாய் வளுவன் எனப் போற்றப்படும் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.

  குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சங்ககாலச் சோழப் பெருவேந்தர்களில் ஒருவன் இவன் சிறந்த கொடைவள்ளல். இவன் போர்ப் பாசறையில் இருந்தபோது அப்பாசறை வாயிலில் இருந்து கொண்டு அவனைத் துயிலெழுப்பும் பாடலைத் தாயங்கண்ணனார் பாடினார். அப்போது அங்கே அவன் புலவருக்கு நெய்யில் பொறித்த கறித்துண்டுகள் மணிக்கலத்தில் தேறல் ஆகியவற்றைத் தந்து பசியைப் போக்கினான். பாம்புத் தோல் போன்ற ஆடைகளையும், அணிகலன்களையும் மழை பொழிவது போல் வாரி வாரி வழங்கினான் (புறம். 397).

  அறுதொழிலோர் அறம் புரிந்து எடுத்த தீ வயலில் பூத்த தாமரை போல் இருந்தது என்று இவர் கூறுவதால் இவர் பார்ப்பனப் புலவர் எனலாம். இவரது மனைவி தாயங்கண்ணியார் தம் பாடலில் கணவனை இழந்த கைம்பெண்ணின் தலைமயிர் கொய்யப்படும் பார்ப்பனரின் பழக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

  மனைவி கணவன் எரியும் சுடுகாட்டுக்குச் சென்று அழுவாள். சுடுகாட்டில் பகலிலும் கூகை குடிறும். பிணம் எரியும் ஈம விளக்கில் பேய் மகளிரோடு சேர்ந்து அழுவாள். கணவனின் எலும்பு எரியும் கனலை மனைவியின் கண்ணீர் அணைக்கும். இதனை முதுகாடு என்றும் கூறுவர். இந்த முதுகாட்டைத் தாண்டி வாழ்வோர் உலகில் யாரும் இல்லை. (புறம். 356).

  மகளை அவளது காதலனுடன் அனுப்பிவைத்த தாய் சொல்கிறாள். ஈனாத் தாய் (செவிலி) மணிக்கிண்ணத்தில் பாலை ஊட்டினாலும் உண்ணாத என் மகளை எழினி நாட்டுக்கு அனுப்பிவிட்டனே! 9அகம் 105).

  குதிரை வீரன் ‘பல்வேல் எழினி’ அவனது மறவர் பகைவர் நாட்டுக் கறவைப் பசுக்களைக் கவர்ந்து வருவர்.

  தலைவன் நாட்டு வண்டின் இயல்பைச் சாக்காக வைத்துக் கூறி தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொண்டு அவனுடைய ஊருக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று தோழி தலைவனிடம் சொல்கிறாள். தலைவன் நாட்டு வண்டுகள் சுனையில் பூத்த பூக்களைத் திறந்து பார்க்குமாம். அங்கிருந்து பறந்து சென்று வேங்கை மரத்திலுள்ள பூக்களை ஊதுமாம். அங்கிருந்து பறந்து சென்று காந்தள் பூவில் தேன் உண்ணுமாம். இவையெல்லாம் போதாது என்று யானையின் மதநீரைக் குடிக்கக் கனவு காணுமாம். வண்டுபோல் தலைவன் இருந்துவிடக்கூடாது என்பது தோழி கூறும் அறிவுரை.

  மேலும், தலைவன் தலைவியை அடையும் வாய்ப்பு இல்லை என்பதற்கும் காரணம் கூறுகிறாள். தினை விளைந்து அறுவடை செய்யப்பட்டு விட்டதாம். எனவே, தலைவி ஏங்குவதால் அவளது தோற்ற வேறுபாட்டைக் கண்டு ஊரார் பழி தூற்றுகின்றனராம். மேலும் இவளைப் பெற்ற கானவர் குடியினரோ களிற்று முகத்தில் பாய்ந்த கறையுடன் கூடிய அம்பும் கையுமாகத் திரிபவர்களாம் என்கிறாள். (அகம் 132),

  நிலம் பாலையாக மாறிய காலத்தில் அந்நில மறவர் தன் வில் வலிமையால் வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்தச் செயலைப் புலவர் தாயங்கண்ணனார் கடியத் தக்க செயல் என்று குறிப்பிடுகிறார். அவர்களைக் ‘கடுவினை மறவர்’ என்று குறிப்பிடுவது அவர் அவர்களைக் கடியும் வன்சொல்.

  மகளிர் மார்பகத்தின் நன்னிறத்தில் அவர்கள் தலைவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் தோன்றும் சுணங்கு என்னும் பொன்னிறம் பூத்து வேங்கைப் பூ கொட்டி கிடப்பது போல இருக்குமாம். (அகம்.319). முதலிய செய்திகளும், உவமைச் சிறப்பும் உடையனவாகத் தாயங்கண்ணனாரின் பாடலகள் அமைந்துள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:19:16(இந்திய நேரம்)