தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்

  முனைவர் இரா.காமராசு
  உதவிப்பேராசிரியர்
  இலக்கியத்துறை

  இவன் சங்ககால மன்னர்களுள் பெயர் விளக்கம் பெற்ற பாண்டிய மன்னன் இலவந்திகைப் பள்ளியில் இறந்ததால் நன்மாறன், பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறன் என்று வழங்கப்பட்டான். இவனைப் பாடிய புலவர்கள் மதுரை மருதனிளநாகனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்,காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார், ஆவூர் மூலங்கிழார், வடம வண்ணக்கன்பேரி சாத்தனார் ஆவர். இவனைப் பாடிய புலவர்கள் அனைவரும் இவனின் பேராண்மையையும் போர் வன்மையையுமே பெரிதெடுத்துப் பாராடியுள்ளனர்.

  மருதனிளநாகனார் பாடுகையில் சிவனின் நெற்றிக்கண் எனச் சுடர்விடும் மாற, மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம் என உணர்ந்து உறவுக்கென நடுநிலைமை பிறழாதும், பகைவர் எனக் குணங்கொல்லாதும் வாழ்க என வலியுறுத்தி, ஞாயிறு போல வெந்திறலும் நிலவெனத் தண்மையும் போல வெந்திறலும் நிலவெனத் தன்மையும், வானம் என வண்மையும் கொண்டு திருச்செந்தில் கடல் மணலினும் பல்லூழி வாழ்கென வாழ்த்துகின்றார். நக்கீரனார், நன்மாறன், சீற்றத்தால் கூற்றுவன், வலிமையில் பலராமன், புகழால் மாயோன், முன்னியது முடிப்பதில் முருகன் எனத் தெய்வங்களுக்கு நிகரான வல்லாண்மை படைத்தான் என்று பாராட்டி இரவலருக்குக் கொடுத்து மகிழும் கொடையோனெனப் பாடி வாழ்த்துக்கிறார். யவனர் மரக்கலம் கொணர்ந்த மதுவை உண்டு இன்புற்று வாழ்க என வாழ்த்துவதன் வாயிலாக அயலாருடன் தமிழர் கொண்ட வணிகத் தொடர்பினைச் சுட்டுவார். மருதனிளநாகனார் போல இவரும், நன்மாறனன் கதிரவன் போலவும், நிலவு போலவும் நின்று நிலவ வாழ்த்துகின்றார்.

  காரிக் கண்ணனார், மாயோன் அன்ன புகழ்க்குரிய நன்மாறன், பகைவர் நாட்டில் போரிடுகையில் அவர் நாட்டுக் காவல் மரத்தை வெட்ட வேண்டாம் என அறிவுறுத்துகின்றார். ஏனெனில் அவன் நாட்டு யானைகளுக்குக் கட்டுத்தறியாகும் வன்மை அதற்கு இல்லை எனப் பாடுகின்றார்.

  நன்மாறன் பரிசில் நீட்டித்த காலை ஆவூர் மூலங்கிழார் இயலுமாயின் ஈதலும், இயலாதாயின் இல்லாமை உணர்த்தலும் சான்றோர்க்கு அழகு அதுவன்றி இரப்போரைக் காக்க வைத்து நீட்டித்தல் அழகன்று எனவும், நின் புகழ் சிறக்க, நோயிலராக நின் புதல்வர என்றும் வெகுண்டு பாடிச் சென்ற காலை, தவறுணர்ந்து நன்மாறன் அவர்க்கு வேண்டுவென நல்கி விடுத்தான்.

  பேரி சாத்தனாரும் அவன் பரிசு நீட்டித்த காலை வருந்திப் பாடுகின்றார். ஆலமர் கடவுளன்ன நின் செல்வம் கண்டு வாழ்த்துகின்றேன். புதல்வர் பொலிக புகழோடு நீடு வாழிய நெடுந்தகை, ‘சேய் நாடு செல்வோம் யாம்’ எனவும் நின் அடி நிழற்கண் பழகிய யான் வானம் பாடி போல நின்புகழை நச்சியிருப்பேன் என்னை மறவாதொழிவாயாக எனவும் உருக்கமாகப் பேசுவது குறிக்கத்தக்கது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:20:15(இந்திய நேரம்)