Primary tabs
2.3 கலிப்பாவின் வகைகள்
கலிப்பா அடிப்படையாக (1) ஒத்தாழிசைக்கலி (2) வெண்கலி (3) கொச்சகக்கலி எனும் மூன்று வகைப்படும். இவை ஒவ்வொன்றுக்கும் உள்வகைகள் உள்ளன. கீழ்க்காணும் அட்டவணையில் அவற்றைக் காணலாம். கலிப்பா, அதில் உள்ள உறுப்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப் படுகிறது.
தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம் போன்ற உறுப்புகளின் அடிப்படையில் இவ்வகைமை அமைந்திருப்பதைக் காணுங்கள். இனி, இவற்றின் இலக்கணங்களைத் தனித்தனியே காணலாம்.
2.3.1 ஒத்தாழிசைக் கலி
தாழிசை என்பதற்கான விளக்கத்தை முன்பு அறிந்து கொண்டீர்கள். தாழிசை என்பது பாக்களிலும் பா இனங்களிலும் ‘ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி’ வருவதே வழக்கம். அதாவது ஒரு தாழிசை இரண்டு அடிமுதல் நான்கடி வரை பெற்றுவரும். அத்தகைய தாழிசைகள் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று அடுக்கி வருவது ‘ஒத்தாழிசை’ எனப்படும். மூன்று தாழிசைகளும் ஒரு பொருள் பற்றியதாகவே இருக்கும். சொற்களும், சொல்லும் முறையும் மூன்று தாழிசைகளிலும் ஒரே மாதிரித் திரும்பத்திரும்ப வரும்.
இவ்வாறு வரும் தாழிசைகளைக் கொண்ட கலிப்பாவையே ஒத்தாழிசைக்கலி என்பர். அது மூவகைப்படும் (பார்க்க. அட்டவணை) இனி இவற்றின் இலக்கணத்தை எடுத்துக்காட்டுகளுடன் காணலாம்.
- நேரிசை ஒத்தாழிசைக் கலி
நேரிசை எனப் பாவகைக்குப் பெயர் அமைவதை முன்னரே பார்த்திருக்கிறீர்கள் அல்லவா! நேரிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா என்பவை அவை. ‘நேரிசை’ என்பது இயல்பாக அமைவது எனப் பொருள்படும் எனவும் அறிந்திருக்கிறீர்கள். அடிப்படையான உறுப்புகளாகிய தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகிய நான்கு உறுப்புகளை மட்டும் கொண்டு அமையும் கலிப்பாவை, இயல்பான கலிப்பா எனும் பொருளில் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா எனக் குறித்தனர். இப்பாவின் இலக்கணம் வருமாறு:
(i) முதலில் ஒரு தரவு வரும். தரவு குறைந்த அளவு மூன்றடி பெறும். அதிக அளவுக்கு வரம்பு இல்லை. எத்தனை அடியும் வரலாம்.
(ii) தரவைத் தொடர்ந்து மூன்று தாழிசைகள் ஒரு பொருள்மேல் மூன்றாக அடுக்கி வரும். தாழிசையின் அடிச்சிறுமை இரண்டடி; அதிக அளவு நான்கடி. தரவை விடத் தாழிசை ஓரடியாவது குறைந்துவர வேண்டும். அதாவது தரவு மூன்றடி வந்தால் தாழிசை இரண்டடி ; தரவு 5 அல்லது அதற்கு மேற்பட்ட அடிகள் வந்தால் தாழிசை நான்கடிக்கு மிகாமல் வரவேண்டும்.
(iii) தாழிசைகளைத் தொடர்ந்து ஒரு தனிச்சொல் வரும்.
(iv) தனிச் சொல்லுக்குப் பின் சுரிதகம் வரும். அது ஆசிரியச் சுரிதகமாகவோ வெள்ளைச் சுரிதகமாகவோ இருக்கலாம்.
- அம்போதரங்க ஒத்தாழிசைக் கலி
‘அம்போதரங்கம்’ என்னும் கலி உறுப்பின் விளக்கத்தை முன்பு அறிந்து கொண்டிருக்கிறீர்கள். அம்போதரங்க உறுப்பு அமைந்த ஒத்தாழிசைக் கலிப்பா அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும். இப்பாவின் இலக்கணம் வருமாறு :
(i) முதலில் தரவு வரும் அத்தரவு ஆறு அடியாக வரும். (சிறுமை, பெருமை இல்லை)
(ii) தரவைத் தொடர்ந்து மூன்று தாழிசைகள் ஒரு பொருள்மேல் அடுக்கி வரும். தாழிசையின் அடிச்சிறுமை இரண்டடி ; அடிப்பெருமை நான்கடி.
(iii) தாழிசைகளுக்குப் பின்னர் அம்போதரங்க உறுப்பு வரும். அம்போதரங்க உறுப்பு அடிஅளவில் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கி வருவது என்பதை முன்பு தெரிந்து கொண்டீர்கள். முதலில் நான்கு சீர்களைக் கொண்ட இரண்டடிகள் பொருள் தொடர்ச்சியுடன், ஒரே எதுகை அமைப்புப் பெற்று, இரண்டு எண்ணிக்கையில் வரும். இது நாற்சீர் ஈரடி இரண்டம்போதரங்கம் எனப்படும். இது பேரெண் எனவும் வழங்கப்படும். எடுத்துக்காட்டுக் கொண்டு இதனை நன்கு புரிந்து கொள்ளலாம்.
(எ.டு)
(1) இலங்கொலி மரகத மெழில்மிகு வியன்கடல்
வலம்புரித் தடக்கை மாஅல் நின்னிறம்
(2) விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும்
பொருகளி றட்டோய் புரையும் நின்னுடைஇதுவே பேரெண் இதனைத் தொடர்ந்து நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம் வரும்.
(எ.டு)
கண்கவர் கதிர்முடி கனலும் சென்னியை ;
தண்சுடர் உறுபகை தவிர்த்த ஆழியை ;
ஒலியியல் உவணம் ஓங்கிய கொடியினை ;
வலிமிகு சகடம் மாற்றிய அடியினை.நாற்சீரடிகள் நான்கு தனித்தனியே முடிந்து வந்துள்ளன. அது அளவெண் ஆகும்.
இதைத் தொடர்ந்து சிந்தடிகள் எட்டு வரும்.இது இடையெண் எனப்படும். சிந்தடிகள் நான்காக வருவதும் உண்டு.
(எ.டு)
போரவுணர்க் கடந்தோய் நீ
புணர்மருதம் பிளந்தோய் நீ
நீரகலம் அளந்தோய் நீ
நிழல்திகழ்ஐம் படையோய் நீஇடையெண்ணைத் தொடர்ந்து இறுதியாகக் குறளடிகள் பதினாறு வரும். இது சிற்றெண் எனப்படும். சிற்றெண் எட்டடியாக வருவதும் உண்டு.
(எ.டு)
ஊழி நீ
உலகு நீ
உருவும் நீ
அருவும் நீ
ஆழி நீ
அருளும் நீ
அறமும் நீ
மறமும் நீ
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)
(iv) இவ்வாறு வரும் அம்போதரங்க உறுப்பிற்குப் பின் ஒரு தனிச்சொல் வரும்.
(v) தனிச்சொல்லைத் தொடர்ந்து ஆசிரியச் சுரிதகமோ வெள்ளைச் சுரிதகமோ கொண்டு அம்போதரங்க ஒத்தாழிசைக்கலிப்பா முடியும்.
இனி நேரிசை, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாக்களின் இலக்கணம் கூறும் காரிகை நூற்பாவைக் காணலாம்.
தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொல் சுரிதகமாய்
நிரலொன்றின் நேரிசை ஒத்தா ழிசைக்கலி நீர்த்திரைபோல்
மரபொன்றும் நேரடி முச்சீர் குறள்நடு வேமடுப்பின்
அரவொன்றும் அல்குல தம்போ தரங்கஒத் தாழிசையே.
(யாப்பருங்கலக் காரிகை, 30)பொருள் :
ஒரு தரவு, மூன்று தாழிசை, தனிச்சொல், சுரிதகம் கொண்டு வருவது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா ஆகும். தாழிசைக்குப்பின் அளவடி, சிந்தடி, குறளடிகளால் ஆன அம்போதரங்கம் வருவது அம்போதரங்க ஒத்தாழிசைக்கலி ஆகும்.
- வண்ணக ஒத்தாழிசைக் கலி
அம்போதரங்க உறுப்புடன் அராகம் என்னும் உறுப்பும் சேர்ந்து வரும் கலிப்பா வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும். இக்கலிப்பா கலியின் உறுப்புகளாகிய தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறும் கொண்டு அமைவது.
(i) முதலில் தரவு வரும். அதன் அடி எண்ணிக்கை ஆறு(சிறுமை, பெருமை இல்லை).
(ii) தரவைத் தொடர்ந்து ஒரு பொருள் மேல் அடுக்கிய மூன்று தாழிசைகள் வரும். தாழிசைகளின் அடி எண்ணிக்கை முன்பு சொல்லப்பட்டதுபோல இரண்டு முதல் நான்கடி ஆகும்.
(iii) தாழிசைகளைத் தொடர்ந்து அராக உறுப்பு வரும். அராகம் இசைத்தன்மை கொண்ட உறுப்பு என்பது முன்னரே கூறப்பட்டது. நாற்சீரடி மட்டுமன்றி நெடிலடி, கழிநெடிலடிகளாலும் அராகம் வரும் என்பதை அறிவீர்கள். அராகம் நான்கடிச் சிறுமையும், எட்டடிப் பெருமையும் கொண்டது.
(எ.டு)
தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன
பொழில்
போதுறு நறுமலர் புதுவிரை தெரிதரு கருநெய்தல்
விரிவனகழி
தீதுறு திறமறு கெனநனி முனிவன துணையொடு பிணைவன துறை
மூதுறு மொலிகலி நுரைதரு திரையொடு கழிதொடர்
புடையது கடல்
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)
மேற்கண்ட அராகம் இசைத்தன்மை கொண்டதாக, விரைந்து செல்லும் ஓசையுடையதாக அமைந்திருப்பதைப் பாருங்கள்
(iv) அராக உறுப்பைத் தொடர்ந்து பேரெண், அளவெண், இடையெண், சிற்றெண் எனும் வரிசையில் அம்போதரங்க உறுப்பு வரும்.
(v) அம்போதரங்கத்தின் பின் தனிச்சொல் வரும்.
(vi) தனிச்சொல்லின் பின் ஆசிரியச் சுரிதகமோ வெள்ளைச் சுரிதகமோ வந்து வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா முடிவடையும்.
ஒத்தாழிசைக் கலிப்பாவின் மூன்று வகைகளுக்குமென இலக்கணத்தைப் புரிந்து கொண்டீர்கள்.தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் எனும் அமைப்பு மூவகை ஒத்தாழிசைக் கலிக்கும் பொதுவானது. அவற்றுடன் அம்போதரங்கம் இணைவது அம்போதரங்க ஒத்தாழிசைக்கும், அராகம் அம்போதரங்கம் இரண்டும் இணைவது வண்ணக ஒத்தாழிசைக்கும் சிறப்பானது.
எடுத்துக்காட்டுப் பாடல்களின் நீளம் கருதி நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கு மட்டும் முழுமையான எடுத்துக்காட்டுத் தரப்பட்டுள்ளது. பின் அம்போதரங்கம், அராகம் ஆகிய உறுப்புகளுக்கு மட்டும் எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன. அம்போதரங்க ஒத்தாழிசை, வண்ணக ஒத்தாழிசை ஆகியவற்றின் முழுமையான எடுத்துக்காட்டுப் பாடல்களைக் காண வேண்டுமென்றால் தமிழ் இணையப் பல்கலைக் கழக நூலகத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்
2.3.2 வெண்கலி
‘வெண்கலி’ என்னும் பெயரைக்கொண்டே கலிப்பாவுடன் வெண்பாவின் இயல்புகள் கலந்தமைந்தது இக்கலிப்பா என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
(i) கலித்தளை அமைந்து கலியோசை (துள்ளல் ஓசை) கொண்டும், வெண்டளை அமைந்து வெள்ளோசை (செப்பல் ஓசை) கொண்டும் வருவது வெண்கலிப்பா ஆகும்.
(ii) இது வெண்பாவைப் போல ஈற்றடி சிந்தடியாகவும் ஏனைய அடிகள் அளவடிகளாகவும் ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு வாய்பாடு எனும் சீர்களுள் ஒன்று கொண்டும் முடியும்.
(iii) கலித்தளை, வெண்டளைகளுடன் அருகி வேறுதளைகள் கலந்து வருவதும் உண்டு.
(iv) அடிச்சிறுமை நான்கடி ; அடிப்பெருமை புலவன் உள்ளக் கருத்தைப் பொறுத்தது. வெண்கலிப்பாவை வெண்கலிப்பா, கலிவெண்பா என இரு வகைகளாகக் குறிப்பிடுவதுண்டு.
- வெண்கலிப்பா
கலித்தளைகள் மிகுந்து சிறுபான்மை வெண்டளைகள் கலந்து வருவது வெண்கலிப்பா. இவைகளன்றி வெண்கலிப்பாவில் வேறு தளைகள் கலந்து வருவதும் உண்டு.
(எ.டு)
ஏர்மலர் நறுங்கோதை எருத்தலைப்ப இறைஞ்சித்தன்
வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு வருந்தியவென்
தார்வரை அகன்மார்பன் தனிமையை அறியுங்கொல்
சீர்மலி கொடியிடை சிறந்து
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)இப்பாடலில் நறுங்கோதை - எருத்தலைப்ப; எருத்தலைப்ப - இறைஞ்சித்தன் ; தடங்கண்ணார் - வலைப்பட்டு ; வலைப்பட்டு - வருந்தியவென் ; அகன்மார்பன் - தனிமையை - எனும் சீர் இணைப்புகளில் கலித்தளை வரக் காணலாம். இறைஞ்சித்தன் - வார்மலர் ;வருந்தியவென் - தார்வரை; அறியுங்கொல் - சீர்மலி என்பவற்றில் வெண்சீர் வெண்டளை அமைந்துள்ளது - ஏர்மலர் - நறுங்கோதை ;தார்வரை - அகன்மார்பன் ;சீர்மலி - கொடியிடை போன்றவற்றில் நிரையொன்றாசிரியத் தளை அமைந்துள்ளது. இவ்வாறு கலித்தளையுடன் பிறதளைகளும் கலந்தமைந்து ஈற்றடி வெண்பாப்போல முடிவதால் இது வெண்கலிப்பா ஆகும்.
- கலிவெண்பா
வெண்டளைகளால் அமைந்து, வெள்ளோசை கொண்டு பல அடிகள் வந்து, ஈற்றடி சிந்தடியாக வருவது கலிவெண்பா ஆகும். பல அடிகளால் வரும் வெண்பா, பஃறொடை வெண்பா என முன்பு அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் கலிவெண்பாவுக்கும் பஃறொடை வெண்பாவுக்குமிடையே உள்ள வேறுபாடு யாது? காரிகை இலக்கணத்திலோ உரையிலோ தெளிவான வேறுபாடு சொல்லப்படவில்லை. தொல்காப்பியர் வெண்பாவுக்குக் கூறிய இலக்கணத்தின்படி பஃறொடை வெண்பா 12 அடிகளுக்குள் அமையும். அதற்கு மேல் அடிகள் பெற்று வருவது கலிவெண்பா என்று கொள்ளலாம்.இது ஒரு கருத்து. ஒரே பொருள் பற்றியதாக வருவது கலிவெண்பா என்றும், அவ்வாறு வராதது பஃறொடை வெண்பா என்றும் வேறுபாடு காட்டுவது மற்றொரு கருத்து. எவ்வாறு இருப்பினும் கலித்தளைகளோ, பிறதளைகளோ கலக்காமல் முழுமையும் வெண்டளைகளால் மட்டுமே அமைந்து ஈற்றடி சிந்தடியாக அமையும் பாவைக் கலிப்பாவுடன் தொடர்புபடுத்துவது எப்படி என்ற ஐயத்திற்குத் தெளிவான விளக்கம் காண்பது இயலாததாகவே உள்ளது. இந்த அளவுக்கு நீங்கள் அறிந்து கொள்வது போதுமானது.
(எ.டு)
சுடர்த்தொடீஇ! களோய்! தெருவில்நாம் ஆடும்
மணற்சிற்றில் காலில் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி
நோதக்க செய்யும் சிறுபட்டி மேல்ஓர்நாள்
அன்னையும் யானும் இருந்தேமா ‘இல்லிரே
உண்ணுநீர் வேட்டேன்’ எனவந்தாற்கன்னை
அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்
உண்ணுநீர் ஊட்டிவா’ என்றாள் எனயானும்
தன்னை அறியாது சென்றேன்மற் றென்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு
‘அன்னாய் இவனொருவன் செய்ததுகாண்’ என்றேனா
அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்
உண்ணுநீர் விக்கினான் என்றேனா அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவமற்றென்னைக்
கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டம்
செய்தானக் கள்வன் மகன் (கலித்தொகை, 51)மேற்காட்டிய பாடல் முழுமையும் வெண்டளைகள் அமைந்து, வெண்பாப்போல முடிவுற்றிருப்பதைக் காணுங்கள். கலித்தொகையில் இப்பாடலுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ‘ இது பன்னீரடியின் இகந்து ஒரு பொருள் நுதலி வந்த கலிவெண்பாட்டு’ என்று குறிப்பிட்டிருப்பது அறியத்தக்கது. வெண்பாவின் இலக்கணம் அமைந்து பன்னிரண்டடிகளைத் தாண்டி வந்ததனால் இதனைக் கலிவெண்பா எனக் குறிப்பிட்டனர் எனக் கொள்ளலாம்.
இனி வண்ணக ஒத்தாழிசைக்கலி, வெண்கலி ஆகியவற்றின் இலக்கணம் கூறும் நூற்பாவைக் காணலாம்.
அசையடி முன்னர் அராகம்வந்து எல்லா உறுப்புமுண்டேல்
வசையறு வண்ணக ஒத்தா ழிசைக்கலி வான்தளை தட்
டிசைதன தாகியும் வெண்பா இயைந்தும்இன் பான்மொழியாய்
விசையறு சிந்தடி யாலிறு மாய்விடின் வெண்கலியே
(யாப்பருங்கலக்காரிகை - 37)பொருள் :
அம்போதரங்க உறுப்புக்கு முன்னர் அராகம் வந்து, ஆறு உறுப்புகளும் கொண்டு அமைவது வண்ணக ஒத்தாழிசை, கலித்தளை அமைந்து கலியோசையுடனும் வெண்டளை அமைந்து வெள்ளோசையுடனும் வந்து சிந்தடியாய் முடிவது வெண்கலிப்பா.
2.3.3 கொச்சகக் கலி
புடவை உடுத்தலில் உள்ள மடிப்பைக் கொசுவம் என்கிறோம். இச்சொல்லின் பழைய வடிவம் கொச்சகம் என்பது. தரவு, தாழிசை போன்ற உறுப்புகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் அடுக்கி மடிந்து வருவதன் காரணமாகக் கொச்சகக் கலிப்பா என இந்தப் பா பெயர் பெற்றது. இது ஐந்து வகைப்படும். (பார்க்க. அட்டவணை)
- தரவு கொச்சகக் கலிப்பா
ஒரு தரவு மட்டும் வந்து தனிச்சொல், சுரிதகம் பெற்று முடிவது தரவு கொச்சகக் கலிப்பா ஆகும். இப்பாவிற்குத் தரவின் அடிச்சிறுமை நான்கடியாகும்.
பிரிந்திசைத் துள்ளல் ஓசைக்கு எடுத்துக் காட்டாகத் தரப்பெற்ற ‘குடநிலைத் தண்புறவில் ......’ எனத் தொடங்கும் பாடலைப் பாருங்கள் [கலிப்பாவுக்குரிய ஓசை,(iii)] அதில் தரவு நான்கடி வந்து ஒரு தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் கொண்டு முடிவது காண்க.
தனிச்சொல்லும் சுரிதகமும் இல்லாமல் வெறும் தரவு மட்டும் வரும் தரவு கொச்சகக் கலிப்பாவும் உண்டு. இதன் அடிச் சிறுமையும் நான்கடியே யாகும். ஏந்திசைத் துள்ளல் ஓசைக்கு எடுத்துக் காட்டாக நீங்கள் படித்த ‘முருகவிழ்தா மரைமலர்மேல்’ எனத் தொடங்கும் பாடலும் [கலிப்பாவுக்குரிய ஓசை.(i)] அகவல் துள்ளல் ஓசைக்கு எடுத்துக் காட்டாகக் கண்ட ‘செல்வப்போர்க் கதக்கண்ணன்’ எனத் தொடங்கும் பாடலும் [கலிப்பாவுக்குரிய ஓசை.(ii)] இத்தகைய தரவு கொச்சக் கலிப்பாக்கள் ஆகும்.
- தரவிணைக் கொச்சகக் கலிப்பா
இணை = இரண்டு. இரண்டு தரவுகள் வரும்.அவற்றுக்கிடையே ஒரு தனிச்சொல் வரும். அதன்பின் மீண்டும் தனிச்சொல்லும் சுரிதகமும் வந்து முடியும்.சுரிதகம் இல்லாமலும் வரலாம். இவ்வாறு வருவது தரவிணைக் கொச்சகக் கலிப்பா.இந்தப் பாவுக்குத் தரவின் அடிச்சிறுமை மூன்றடியாகும்.
(எ.டு)
வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய
கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்கும் காவலனாம்
கொடிபடு மணிமாடக் கூடலார் கோமானே
(இது தரவு)
எனவாங்கு
(இது தனிச்சொல்)
துணைவளைத்தோள் இவள்மெலியத் தொன்னலம்துறப்புண்டாங்
கிணைமலர்த்தார் அருளுமேல் இதுவிதற்கோர்
மாறென்று
துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரோ
(இது தரவு)
அதனால்
(இது தனிச்சொல்)
செவ்வாய்ப் பேதை இவள்திறத்து
தெவ்வா றாங்கொலிஃ தெண்ணிய வாறே
(இது சுரிதகம்)
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)(கடி = வாசனை ; துணை = இரண்டு ; நலம் = அழகு ; தார் = மாலை ; மாறு = மாற்று, ஏறுதல் ; இவள்திறந்து = இவளைக் குறித்து)
- சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
சில் + தாழிசை = சிஃறாழிசை. தரவு, தரவிணைக் கொச்சகக் கலிப்பாக்களில் தாழிசை வருவதில்லை எனப் பார்த்தீர்கள். தரவுடன் சில தாழிசைகள் வந்து தனிச்சொல், சுரிதகம் பெற்று முடிவது சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவிலும் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் எனும் வரிசையில் உறுப்புகள் வருவதை முன்பு கண்டோம். அதற்கும் சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவுக்கும் சிறுவேறுபாடு மட்டுமே உண்டு. சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவில் மூன்று தாழிசைகள் வரும் போது,ஒவ்வொன்றுக்கும் இடையே ஒரு தனிச்சொல் வரும். நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவில் தாழிசைகளுக்கிடையே தனிச்சொல் வராது. மற்றபடி தாழிசைகள் ஒருபொருள் மேல் அடுக்கி வருவதிலும் சொல்லும், சொல்கின்ற முறையும் ஒத்து வருவதிலும் மாற்றம் இல்லை. இப்பாவுக்குத் தரவின் அடிச் சிறுமை மூன்றடி, தாழிசை இரண்டு முதல் நான்கடி வரை வரும். இப்பாடலுக்கான எடுத்துக் காட்டை இணைய நூலகத்தி்ல் யாப்பருங்கலக் காரிகையில் கண்டு கொள்க. (‘உச்சியார்க் கிறைவனாய்’ எனத் தொடங்கும் பாடல்)
- பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
பல + தாழிசை = பஃறாழிசை. தரவுக்குப் பின் மூன்றுக்கும் மேற்பட்ட பல தாழிசைகளைக் கொண்டது இது. பலதாழிசைகள் வருவதானால் தாழிசைகளிடையே தனிச்சொல் வராது. எத்தனை தாழிசைகள் வந்தாலும் அவை ஒருபொருள்மேல் அடுக்கியே வரும். தாழிசைகளின் பின் தனிச்சொல்லும் சுரிதகமும் வரும். இப்பாவுக்குத் தரவின் அடிச்சிறுமை மூன்றடி. தாழிசை அடி எண்ணிக்கை இரண்டு முதல் நான்கு ஆகும்.
- மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
மயங்குதல் - கலத்தல், மாறி வருதல். கலியுறுப்புகளாகிய ஆறும் அவற்றுக்குச் சொல்லப்பட்ட அளவைவிட மிகுந்தும், குறைந்தும், இடம் மாறியும், ஓசை மாறியும், அடி மாறியும், கலிப்பாவில் வாரா என்று விலக்கப்பட்ட நேரீற்று இயற்சீரும் நிரைநடுவாகிய வஞ்சி உரிச்சீரும், ஐஞ்சீரடியும் வந்தும் - இவ்வாறு முன்பு சொல்லப்பட்ட கலிப்பா வகைகளிலிருந்து வேறுபட்டு வருவது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I1.ஏட்டுச் சுவடிகளில் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்கும் பாக்களில் சீர், அடி ஆகியவற்றைப் பிரித்துப் பார்ப்பது எப்படி?