Primary tabs
-
1.0 பாட முன்னுரை
தமிழிலக்கியம் பழைமையும், புதுமையும் கொண்டது. இதனுள் பழைய இலக்கிய வடிவங்களான காப்பியங்கள், நெடும்பாடல்கள், பக்திப் பாடல்கள் முதலியன இன்றளவிலும் கற்போருக்கு நிறைவைத் தந்துள்ளன. அதே நேரத்தில் புதிய வடிவங்களான சிறுகதை, புதினம், தன்வரலாறு முதலியனவும் சுவை தருவன. காலத்தால் முன்பு தோன்றியன பழைய இலக்கியங்கள்; பின்பு தோன்றியன புதிய இலக்கியங்கள் என இவற்றைப் பிரித்தாலும் சுவையால், பயனால் இவை ஒரே தன்மையன என்பதில் ஐயமில்லை.
முன்பு இலக்கியங்கள் செய்யுள் வடிவில் படைக்கப் பெற்றன. இக்காலத்தில் உரைநடை வடிவில் தரப் பெறுகின்றன. முன்பு நெடும்பாடலாக எழுதப் பெற்றன சிலப்பதிகாரம் முதலியன. தற்போது நெடுங்கதையாகப் படைக்கப் பெறுவன புதினங்கள். இரண்டிலும் கதை, கூறும் முறை, பாத்திரங்கள் ஆகியன கலைப்படைப்பாக அமைக்கப் பெற்றுள்ளன என்பது கருதத்தக்கது.
இவ்வகையில் ஏற்றமுடைய தற்கால இலக்கிய வடிவங்களுள் ஒன்றான புதினத்தை இப்பாடம் அறிமுகம் செய்கின்றது. அதன் அமைப்பை, வரையறையை, பாத்திரப் படைப்பை, உத்திமுறையை, வெளிப்பாட்டுத் திறத்தைப் பொதுவான நிலையில் இப்பாடம் உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறது.