தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-1.6-உரையாடலும் மொழிநடையும்

  • 1.6 உரையாடலும் மொழிநடையும்

    உரையாடல், மொழி நடை வாயிலாக ஆசிரியர் தம் தனித்தன்மையை வெளியிடுகின்றனர்.

    1.6.1 உரையாடல்

    புதினத்தில் இடம்பெறும் உரையாடல்கள் கதைமாந்தரின் இயல்புகளையும், பண்புகளையும் நன்கு வெளிப்படுத்த வேண்டும். உரையாடலின் எந்த ஒரு பகுதியும் கதையின் விளக்கத்திற்கோ, வளர்ச்சிக்கோ துணை செய்வதாய் இருத்தல் வேண்டும். புதினத்தைப் படிப்போர்க்குச் சலிப்பு ஊட்டக் கூடிய வகையில் உரையாடல் இடம் பெறலாகாது.

    கதைமாந்தரின் உள்ளப்பாங்கு, நடைமுறை, அவர்கள் வாழும் இடம், செயற்படும் சூழ்நிலை, நிகழ்ச்சியின் போக்கு முதலியவற்றிற்கு ஏற்ற வண்ணம் உரையாடல் அமைய வேண்டும்.

    உரையாடல்களின் மூலம் பாத்திரங்களைக் காட்டுவதில் ஜெயகாந்தன் பெரிய வெற்றி பெற்றுள்ளார் எனலாம். சான்றாக அவரது சினிமாவுக்குப் போன சித்தாளு என்னும் புதினத்தில் ஒருவர் பேசுவதைக் காண்போம்:

    ‘ராத்திரி ஒன்பது மணி எப்படா வரும்னு நெனைச்சிகினு வௌக்கு வெக்கிற நேரம் வரைக்கும் காத்துகினு இருந்த கம்சலை கொஞ்சம் பொயுது இருட்டினப்ப குளிக்கிறதுக்குப் போனா. பழுப்பாண்ட தான் பொம்பளைங்க எல்லாம் ராத்திரியிலே பொயுது இருட்டினத்துக்கப்புறம் வந்து குளிப்பாங்க.'

    பாத்திரங்களின் தரத்திற்கேற்ப உரையாடலை அமைப்பதில், அதிலும் குப்பத்துப் பேச்சு, ரிக்ஷாக்காரன் பேச்சு, அக்கிரகாரத்துப் பேச்சு இவற்றைப் படைப்பதில் கைதேர்ந்தவர் ஜெயகாந்தன்.

    இராஜம் கிருஷ்ணன், வட்டார மொழியைப் பாத்திரங்களின் மூலம் வெளிப்படுத்துவார். இதனால், அவரது புதினங்கள் ஓர் உண்மைத்தன்மையும்(எதார்த்தம்), ஆழமும் பெற்று விளங்குகின்றன. இராஜம் கிருஷ்ணன், குறிஞ்சித் தேனில் நீலகிரியின் பழங்குடி மக்களான படகர்களின் வாழ்க்கை முறைகளை நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். சுற்றுச்சூழ்நிலைகளை இயற்கையாக அவர் வர்ணிக்கும் திறன் சிறப்புடையதாக இருக்கிறது.

    சின்னப்ப பாரதி, செல்வராஜ், பொன்னீலன், சு.சமுத்திரம் போன்றவர்களின் நாவல் பாத்திரங்கள் பேச்சு நடையில் எல்லை கடந்து போகாமல் இயல்பாகப் பேசுகின்றன. இன்றைய புதிய நாவலாசிரியர்கள் ஆங்கிலச் சொற்களை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

    1.6.2 மொழி நடை (Style)

    ஒரு நல்ல நாவலாசிரியரை அவரது நடையின் மூலமாகவே நாம் இனங்கண்டு கொள்ள முடிகிறது. மனித உணர்ச்சிகளைத் தெளிவாகப் புலப்படுத்துவது மொழியேயாகும்.

    ‘நடை' என்பதற்குத் தமிழ்ப் பேரகராதி இருபத்திரண்டு பொருள்களைத் தருகிறது. மேலை நாட்டார் நடைபற்றிப் பல்வேறு கருத்துகளைத் தந்துள்ளனர். நடை என்பது ஒரு கருத்தின் உடை என்பார் போப். ஆனால் கார்னலஸ் என்பார் ‘அது எழுத்தாளரின் தோல்' என்கிறார்.

    தமிழ் நாவலாசிரியர்கள் சிலரின் நடைக்குச் சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம். இராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரத்தில் வருகிற பகுதி இது:

    “கடலோசை விடபுருஷர்களின் விளையாட்டரவமல்ல; வாலிப ஸ்திரீகளின் வம்புக் கூப்பாடல்ல; இனிய வீணையாதிகளின் கானம் அல்ல; வெற்றித் தம்பட்டத்தின் ஓசையுமல்ல; அந்தக் குரலில் களியாட்டத் தொனி கிடையாது. சோகம் உண்டு.

    கற்பனை இன்பமும், ஓசை நயமும் உடைய கவித்துவ நடையாய் இப்பகுதி அமைந்திருக்கிறது.

    நாவலில் புதிய நடையை உருவாக்கியவர் கல்கி. கேலி, கிண்டல், நகைச்சுவை, கற்பனை முதலிய அனைத்தும் கலந்த எளிய, இனிய நடையே கல்கியின் நடை. தமிழ் நாவல் உலகில் தனித்த முத்திரையோடு இனம் காணக்கூடிய மற்றொரு நடை மு.வ. வின் நடை. சின்னஞ்சிறு வாக்கியங்கள்; உள்ளத்தில் இருக்கும் சிந்தனைத் தெளிவை அப்படியே பிரதிபலிக்கும் தொடரமைப்புகள் உடையது. இவையே மு.வ. நடையின் தனிச்சிறப்பாகும்.

    உயிர்த்துடிப்பான நடையைக் கையாண்டு பெரும் பரபரப்பையும், பாதிப்பையும் உண்டாக்கியவர் அறிஞர் அண்ணா. அவரின் எழுத்தில் மோனையும் எதுகையும் போட்டி போட்டுக்கொண்டு வந்து நிற்கும்; தென்றலின் இனிமையும், புயலின் வேகமும், எரிமலையின் குமுறலும் மாறிமாறி வந்து மறையும்; உணர்ச்சி நாதத்தை மீட்டுகிற இனிய நடை அண்ணாவின் நடை. அடுக்கடுக்கான சொல்லலங்காரங்கள் படிப்போரை மயக்கித் தன்வசப்படுத்தும். அண்ணாவின் ரங்கோன் ராதாவில் இருந்து ஒரு சிறு பகுதி பின்வருமாறு: ‘ராதா என்ற பெயரே ரசமாகத் தோன்றிற்று! ரங்கோன், ரசமான இடமாமே! பாவம்! அவள் யாரோ! குண்டுகளுக்குப் பயந்து, இங்கு வருகிற அவள் மீது பாணம் பூட்ட நான் கிளம்புவதா? ச்சீ! கெட்ட நினைப்பு நமக்கு ஏன்? என்றும் எண்ணினேன்'.

    ஆர். சண்முக சுந்தரத்தின் நடை எளிய, இனிய, உணர்ச்சிகரமான தமிழ்நடை என்று சொல்லலாம். இவரது நடையில் கொங்கு மண்ணின் மணம் கமழுவதையும் காணமுடிகின்றது. நாகம்மாள் புதினத்திலிருந்து அவரது தமிழ் நடைக்கு ஒரு எடுத்துக்காட்டு: ‘அடைமழைக் காலம் வந்து சேர்ந்தது. புரட்டாசி கழிந்து ஐப்பசி ஆரம்பம். வான வீதியில் எந்நேரமும் சாயை படிந்து கருமுகில்கள் கவிழ்ந்த வண்ணம் இருந்தன.'

    நீல. பத்மநாபனின் தலைமுறைகள் ஒரு தனிச் சிறப்புடைய நாவல். நாஞ்சில்நாட்டு இரணியல் என்ற ஊரில் கீழைத்தெரு வாசிகளான செட்டிமார்களின் கதை இது. அவர்களின் பேச்சுமொழி, இவரது புதினத்திற்குச் சிறப்புத் தருகிறது.

    நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் நாஞ்சில் நாட்டு வேளாளர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்ற புதினம். இதில் அந்த மக்கள் மொழி ஆசிரியரின் நடைக்கு அழகு சேர்க்கிறது.

    குறிப்பிட்ட வட்டாரத்திற்கே உரிய பிரச்சனைகளைக் கலைத் தன்மையுடன் காட்டும் இவ்வகை நாவல்களுடன், நிகழ்கால வாழ்க்கைச்சிக்கல்களை அறிவுபூர்வமாக ஆராயும் நாவல்கள் பலவும் தமிழில் தோன்றி வளர்ந்து வருகின்றன.

    கி. ராஜநாராயணனின் கோபல்லபுரம், சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை, சூரிய காந்தனின் மானவாரி மக்கள் முதலியன நடையால் சிறப்புப் பெற்றப் புதினங்கள். ஜெயமோகனின் ரப்பர் என்ற புதினம், "குறியீட்டு நோக்கில்" வாழையை விட்டு வணிக நோக்கோடு ரப்பர் பயிரிடுவதையும் அதன் விளைவையும் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. குமரி மாவட்டம் தேங்காய்ப் பட்டணம் என்னும் கடற்கரைக் கிராமத்தைச் சேர்ந்தவர் தோப்பில் முகமது மீரான். ஒரு கடலோரக் கிராமத்தின் கதை, துறைமுகம், சாய்வு நாற்காலி போன்ற புதினங்கள் இவருக்குப் பரிசுகளைப் பெற்றுத் தந்துள்ளன. இவர் தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிச்சொற்களையும் கலந்து எழுதுகிறார்.

    நடை என்பது இலக்கியத்தின் ஓர் இன்றியமையாத கூறாகக் கருதப்பட்டு வருவதை அறியலாம். நல்ல நடை என்பது படிப்பவரைக் கடைசி வரை சலிப்பூட்டாமல் தன்னோடு இழுத்துச் செல்ல வேண்டும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:15:43(இந்திய நேரம்)