Primary tabs
1.3 புதின அமைப்பு
விழுது விட்டு நிற்கும் ஆலமரம் போலப் பல கிளை விட்டுக் கதையை வளர்த்துக் கூறுவது புதினம். பல மணிநேரம் படிக்கக் கூடியது.
களம் (கதை)
புதினத்தில் பல சிறுகதைகள் இருக்கலாம். இதனால் சிறுகதை பல சேர்ந்தால் புதினமாகும் என எண்ணலாகாது. புதினம் தனக்கென்றே அமைந்த ஒரு பெரிய களம் உடையது. சுருங்கக் கூறினால், புதினம் ஒரு பெரிய கதையையும், கதைமாந்தர் பலரையும் கொண்டது. தனிமனிதன் அல்லது சமுதாய வாழ்க்கையின் பல பகுதிகளையும் சித்திரித்துக் காட்டுவது. இங்ஙனம் சித்திரித்துக் காட்டுவதற்கு உரிய நிகழ்விடமே புதினத்திற்குக்களம் ஆகும். ஓவியத்திற்குத் திரை போலவும், நடனக்கலைக்கு அரங்கு போலவும் புதினத்திற்குக் களமாக அமைவது கதையே ஆகும்.
கரு
புதினம் பொதுவாக ஏதேனும் ‘கரு' (Theme) ஒன்றைக் கொண்டதாக அமையும். கதைக்கரு இயற்கையாக அமைதல் வேண்டும். புதினத்திற்கு எதுவும் கருவாக அமையலாம். அது நிகழ்ச்சிகளோடும், கதை மாந்தர்களின் உணர்ச்சிகளோடும், கற்பனையோடும், வருணனைத் திறத்தோடும் அமையும் போது அழகிய புதினமாக உருவம் பெறும்.
புதினம் கரு, கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, உரையாடல், நனவோடை உத்தி, காட்சி, வருணனை, நடை ஆகியவற்றைக் கொண்டதாக அமையும்.
1.3.1 புதினங்களில் கருப்பொருள்கள்
புதினங்களில் வேறு எது இருந்தாலும், இல்லாவிட்டாலும் கதை ஒன்று வேண்டும். முட்டையின் உள்ளே ‘கரு' ஒன்று இருப்பது போலப் புதினங்களிலும் கரு உண்டு. புதினத்திற்கு உரிய கருப்பொருள் இதுவாகத் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை.
கருப்பொருள் - விளக்கம்
ஹென்றி ஜேம்ஸ் என்ற எழுத்தாளர் ‘கதைக்கரு எந்த இடத்திலிருந்தும் வரக்கூடும்; எந்த நேரத்திலும் வரக்கூடும். ஊசி குத்துவது போல் ‘சுருக்கென்று தைக்கக் கூடியது அது' என்கிறார்.
கருப்பொருள் என்பது கலைக்கு இன்றியமையாதது. கலைஞன் உலகைப் பார்க்கின்ற பார்வை எது வெனக்காட்டுவது அதுதான். “எழுத்தாளன் எதையாவது சொல்ல வேண்டும். இல்லையென்றால் நெருப்பின்றியே அதனை அறிவிக்கும் மணியை விளையாட்டாக அடிக்கின்ற குழந்தையாக அவன் ஆகின்றான்” என்கிறார் சீன் ஓ பெலய்ன்.
கருப்பொருள்
மனித வாழ்க்கையில் நிகழ்ந்த ஏதேனும் ஒரு பெரிய நிகழ்ச்சி, வரலாற்றுத் தொடர்புடைய சில உண்மைகள், அன்றாடப் பொதுவாழ்க்கையில் நிகழும் சில நிகழ்ச்சிகள், உளவியல் தொடர்புடைய சில சிக்கல்கள் ஆகியன நாவலுக்குரிய கதைப்பொருளாக அமையலாம்.
எடுத்துக்காட்டுகள்
தி. ஜானகிராமனின் புதினங்களில் பொதுவாக இழையோடும் பிரச்சினை ஆண் - பெண் உறவுகள் பற்றியதாகும். அம்மா வந்தாள் கதை முழுவதும் அலங்காரம் என்ற பெண்ணின் பாலுறவுச் சிக்கலை மையமாகக் கொண்டு இயங்குகிறது. சென்னையில் ஓர் அச்சகத்தில் பிழைதிருத்தும் வேலை பார்ப்பவர் தண்டபாணி. இவர் ஓய்வு நேரங்களில் உயர்நீதிமன்ற நீதிபதி, கல்லூரி முதல்வர்கள் போன்ற பெரிய மனிதர்களுக்கெல்லாம் வேதம் சொல்லிக் கொடுப்பார். இவர் மனைவி அலங்காரம் அழகும், கம்பீரமும் நிரம்பியவள். இவள் ஆறு பிள்ளைகளுக்குத் தாய் என்றாலும் சிவசு என்னும் நிலப்பிரபுவோடு முறையற்ற தொடர்பு கொண்டிருக்கிறாள். தன் கடைசிப் பிள்ளை அப்புவை வேதபாடம் படிக்க வைக்கிறாள். அவன் கால்களில் விழுந்து வேத நெருப்பில் ‘எல்லாத்தையும் எரிச்சுடலான்ணு' அவள் எண்ணுகிறாள். வேதம்படித்துத் திரும்பிய அப்புவும் தன் தாயின் ஒழுக்கக் கேட்டை அறிந்து வெறுப்படைந்து திரும்பிப் போய்விடுகிறான். அலங்காரம் கடைசியில் தனிமையில் நிராதரவாகக் காசிக்குப் போய் விடுகிறாள். இதுதான் கதை.
சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்துப் போராடுவதைக் கருப்பொருளாகக் கொண்டவை ஐசக் அருமைராசனின் கீறல்கள், கு.சின்னப்பபாரதியின் தாகம், பொன்னீலனின் கரிசல் போன்ற புதினங்கள்.
“மனிதருள்ளும், மனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையேயும் தோன்றும் மோதலை அடிநிலையாகக் கொண்டதே நாவல் இலக்கியம்” என்பார் கைலாசபதி. க. நா. சுப்பிரமணியம், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன் ஆகியோர் புதினங்களில் தனிமனிதக் கோட்பாடுகள் வலியுறுத்தப்படுகின்றன.
கற்போர் தாமே எண்ணிப் பார்த்து உணர்ந்து கொள்ளும் வகையில் கதையில் கதைப்பொருளைப் பொதிந்து வைத்தலே சிறந்த உத்தியாகும்.
1.3.2 கதையும், கதைப்பின்னலும் (Plot)
கதை என்பது காலக்கிரமப்படி அமையும் நிகழ்ச்சிகளின் வரிசையேயாகும். ‘பிளாட்' (கதைப்பின்னல்) என்பது கிரமப்படி அமைந்த நிகழ்ச்சிகளிடையே காரண-காரியத் தொடர்பை ஏற்றி உரைப்பது என்பார் இ.எம்.பாஸ்டர்.
தமிழில் பிளாட் என்பதைக் கதைப்பின்னல் அல்லது கதைத்திட்டம் என்பார்கள். கதைக்கு வடிவ அழகைத் தருவது அது. கதையில் வரும் நிகழ்ச்சிகள் திடீரென்று வந்து குதிப்பது போல இல்லாமல் இயல்பாக நிகழ வேண்டும். கதைக்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகள் விரிந்து வளர்ச்சி அடைந்து பெருகி ஒரு நிறைவை அடைவது புதினங்களின் போக்கு ஆகும்.
கதைப்பின்னல் வகைகள்
கதைப்பின்னல், நெகிழ்ச்சிக்கதைப் பின்னல் (Loose plot), செறிவுக் கதைப்பின்னல் (Organic plot) என இருவகையாகப் பிரிக்கப்படும்.
நெகிழ்ச்சிக் கதைப்பின்னல் - சான்று
நெகிழ்ச்சிக் கதைப்பின்னல் என்பது கதையில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றதாகவோ அல்லது பொருத்தமுற அமையாததாகவோ இருக்கும். கதைத் தலைவன் எல்லா நிகழ்ச்சிகளிலும் மையப் பாத்திரமாக இருந்து அக்கதையின் மற்றக் கூறுகளை இணைப்பான். இந்த வகை புதினங்களில் பாத்திரப் படைப்புகளுக்குத் தான் மிக்க சிறப்புத் தரப்படும்.
நெகிழ்ச்சியுடைய கதைப்பின்னலுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக மு.வரதராசனார் எழுதிய கரித்துண்டு என்ற புதினத்தைக் கூறலாம். இக்கதைத் தலைவன் மோகன் கல்கத்தாவைச் சேர்ந்த சிறந்த ஓவியன். அவன் ஓவியத்தில் மயங்கிய நிர்மலா அவனை மணக்கிறாள். ஆடம்பர வாழ்க்கையில் ஆசை கொண்டவள் நிர்மலா. மோகன் ஒரு விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். செய்தி அறிந்த நிர்மலா மருத்துவமனை சென்று கணவனைப் பார்க்காமல் பம்பாய் சென்று விடுகிறாள். கால் இழந்த மோகன் சென்னை வந்து, பொன்னி என்பவளோடு ஒரு சேரியில் வாழ்ந்து கொண்டு, சாலைகளின் ஓரங்களில் இருந்து கொண்டு ஓவியம் தீட்டிப் பிழைப்பு நடத்துகிறான்.
பம்பாய் சென்ற நிர்மலா, கமலக்கண்ணன் என்பவரோடு சென்னை வந்து வாழ்கிறாள். எதிர்பாராத வகையில் ஒருநாள் ஓவியம் தீட்டிக் கொண்டிருந்த மோகனைக் காண்கிறாள். மனப்போராட்டத்திற்கு ஆளாகிச் சென்னையை விட்டுப்போய் விடுகிறாள். இதுதான் கதை. ஆனால் கதைத் தலைவன் மோகன் சென்னையில் ஒரு சாலையில் ஓவியம் தீட்டுவதிலிருந்து கதை தொடங்குகிறது. பின் மோகனின் மூலம் முன்பு நடந்த கதை கூறப்படுகிறது. இதில் இடம்பெறுகின்ற நிகழ்ச்சிகள் வரலாற்று முறையில் வரிசையாய் அமையாமல், இடையில் தொடங்கி பின்னோக்கிச் சென்று பிறகு திரும்புகிறது. இதிலும் இடையிடையே விளக்கப்படுகின்ற செய்திகள் கதைப் போக்கின் ஒருமைப்பாட்டுக்கு உகந்ததாக இல்லை.
செறிவுக் கதைப்பின்னல் (Organic plot)
இந்த வகைக் கதைத்திட்டத்தில் நிகழ்ச்சிகள் ஒன்றோடு ஒன்று காரண காரியத்தொடர்பு உடையனவாய் இருக்கும். ஒரு நிகழ்ச்சியின் முடிவு அடுத்த நிகழ்ச்சியின் தொடக்கத்திற்குக் காரணமாக அமையும். இத்திட்டத்தில் அமைந்த புதினங்கள் விறுவிறுப்பாக இருக்கும். இடம்பெறும் நிகழ்ச்சிகள் சில இடங்களில் செயற்கையாகவும், நம்பத் தகாதனவாகவும் அமைவதும் உண்டு. வரலாற்றுப் புதினங்களும், துப்பறியும் புதினங்களும் இக்கதைத் திட்டத்திற்குச் சிறந்த சான்றாகும்.
கதைப்பின்னல் இயற்கையாகத் தோன்றுவது போல் இயங்க வேண்டும். அதன்கண் எதுவும் செயற்கையாகத் தோன்றும்படி இருத்தல் கூடாது. கதைப்பின்னல் உருவாக்கப்பயன்படுத்தும் முறைகள் நம்பத்தக்கனவாகவும், ஏற்றுக் கொள்ளக் கூடியனவாகவும் இருத்தல் வேண்டும்.
சிறந்த கதைப்பின்னல் அமைப்புடைய புதினங்களில் ஈர்ப்பு, எதிர்பார்ப்பு நிலை (Suspense), குறிப்பு முரண் (Irony) முதலியன அமைந்திருக்கும். இவை கதைப்பின்னலை முன்னோக்கி இயக்கும் போது தான் புதினம் அழகு பெறுகிறது.
புதினத்தில் வேண்டுமென்றே எதிர்பாராத நிகழ்ச்சிகளை உண்டாக்குவதோ, அல்லது நிகழ்ச்சிகள் எல்லாம் திடீரென்று ஒருங்கே நிகழ்வதாய்க்காட்டுவதோ கூடாது. இவை விரும்பத்தக்கன அல்ல.
கதையில் பாத்திரங்கள் பேசும், ஆசிரியரும் பேசுவார். இந்தப் பேச்சுகளில் வெளிப்படையாய் ஒரு பொருள் இருக்கும். உள்ளே, மறைவாய் இன்னும் ஒரு பொருள் அமைந்திருக்கும். இதை, தொனி அல்லது குறிப்புப் பொருள் என்பார்கள். சில வேளைகளில் இந்த வெளிப்படைப் பொருள் ஒன்றாகவும், குறிப்புப் பொருள் அதற்கு நேர்எதிர்மறையான ஒன்றாகவும் அமையும்.
ஒரு பாத்திரத்தின் பேச்சோ, அல்லது ஆசிரியரின் பேச்சோ மேல் நிலையில் ஒரு பொருளையும், ஆழ்நிலையில் எதிர்மறையான பொருளையும் சுட்டவல்லதாக இருக்குமாயின் அதனைக் குறிப்பு முரண் என்பர்.
புதினத்தின் பல்வேறு உறுப்புகளுள் சூழல் அமைப்பு என்பதும் ஒன்று. அதாவது புதினம் நடைபெறும் காலமும், இடமும் சூழல் ஆகும். இப்பகுதியில் தான் மக்கள் வாழ்க்கை, அவர்கள் பழக்க வழக்கங்கள் முதலியன இடம் பெறுகின்றன. எந்த இடத்தில் கதை நடைபெறுவதாகக் கூறப்படுகிறதோ அதற்கு ஏற்றபடியே இச்சூழ்நிலை அமைக்கப்படல் வேண்டும்.
கிராமங்களில் கதை நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகக் கூறவந்த ஒரு புதின ஆசிரியன் பழைய தல புராண முறையில் மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும் வருணிக்கப் புகுதல் கூடாது.
இருவகை அமைப்பு
சூழ்நிலை அமைப்பை (1) சமுதாயப் பின்னணி (Social setting), (2) காட்சிப் பின்னணி (Material setting) என இருவகைப் படுத்தலாம். சில புதினங்களில் சமுதாயத்தின் ஒரு பகுதி மட்டும் பின்னணியாக விளங்கும். மேல் மட்ட வாழ்க்கை, நடுத்தர மக்கள் வாழ்க்கை, அடித்தள மக்கள் வாழ்க்கை, தொழிலாளர் வாழ்க்கை என இவற்றுள் ஏதேனும் ஒன்று புதினத்தின் பின்னணியாக அமையும். பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் முதலியவை சமுதாயப் பின்னணியின் வகைப்பட்டன ஆகும்.
சில புதின ஆசிரியர்கள் வீதிகள், வீடுகள், உள்ளிடங்கள் முதலியவைகளைப் பற்றி மிக விரிவாகவும், நுட்பமாகவும் வருணிப்பார்கள். வேறு சிலரின் புதினங்களில் இயற்கைக்காட்சி பின்னணியாக அமையும். இவ்வாறு புதினங்களில் இயற்கை பல வகையாகப் பயன்படுத்தப் படுகின்றது. அவை வருமாறு;
(1) மனிதச் செயலோடு தொடர்பு படுத்தாமல் வெறும் அழகுக்காட்சியாக இயற்கையைப் பயன்படுத்தப்படுதல்.
(2) நேரடியாக மனிதச் செயலோடு தொடர்புபடுத்தி இயற்கை பயன்படுத்தப்படுதல். (இதில் இயற்கை மனித உணர்வுக்கு வேறுபட்டோ, இயைந்தோ இருக்கும்.)