தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-1.1-1.2

  • 1.1 புனைகதை

    புனையப் பெறும் கதைவடிவம் புனைகதை ஆகிறது. இது புதினம், சிறுகதை என்னும் இரு இலக்கிய வகைகளையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாகும். பாரம்பரிய வழிவரும் கதைகளிலிருந்து வேறுபட்டவை புனைகதைகள். சான்றாக, பாரம்பரிய வழிக் கதைகள் என்பவை தெனாலிராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள் போன்றன. இவற்றிலிருந்து வடிவம் போன்றவற்றால் வேறுபட்டவை புனைகதைகள் ஆகும்.

    மேல்நாட்டார் வருகைக்குப்பின்னரே படைப்பிலக்கியம் உரைநடை வடிவில் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்களிடையே தமது மதத்தைப்பரப்ப விரும்பிய கிறித்துவ பாதிரியார்கள், தமது கொள்கைகளைப் பரப்ப எளிதாக அமைந்த உரைநடையைக் கையாளத் தொடங்கினர்.

    மேல்நாட்டார் வருகையை அடுத்துத் தமிழ்நாட்டு அரசியல், சமூக அமைப்புகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. இம்மாற்றத்தால் இலக்கிய வகைகளிலும் மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்தன. அவ்வழியில் புனைகதைகள் உரைநடையின் இலக்கியமாக மலர்ந்தன.

    1.1.1 கதையும், புதினமும்

    கதை கூறுவதும், கேட்பதும் மனிதனிடத்தில் அமைந்து கிடக்கும் பண்புகள். மனித நாகரிகத்தின் அனைத்து மையங்களிலும் காணப்பட்ட தொன்மையான பொழுது போக்குச் செயலாக விளங்குவது கதை கூறும் நடைமுறையாகும்.

    அடுத்து நடக்கப் போவது என்ன என்று தெரிந்து கொள்ளவிரும்பும் ஆர்வம்தான் கதை தோன்றுவதற்கான காரணமாகிறது.

    புதினம் என்பது மனித உறவுகள், எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றை விளக்கிக் காட்டும் உரைநடையால் அமைந்த நீண்ட கதை என்று புதிய அகராதி விளக்கம் தருகிறது.

    1.1.2 புதினம்

    நாவல் (Novel) என்னும் சொல் ‘புதுமை' என்னும் பொருளைத் தருவது. ‘Novella' என்னும் ..இத்தாலி மொழிச் சொல்லிலிருந்தே இது பிறந்தது என்பர்.

    புதுமை என்னும் பொருளிலேயே நாவலைக் குறிக்கத் தமிழ் மொழியில் புதினம் என்றனர். நவீனம் என்றும் கூறுவதுண்டு.

    புதினம் பற்றிப் பல அறிஞர்கள் பல விதங்களில் விளக்கியுள்ளனர். உரைநடையில் கதைகூறும்பாங்கில் அமைந்த மனித வாழ்க்கையின் விளக்கமே புதினம். புதினம் என்பது மறுமலர்ச்சி யுகம் பெற்றெடுத்த ஒரு கலைவடிவம். புதினம் என்பது உலகானுபவத்திற்கு உட்பட்டது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:15:24(இந்திய நேரம்)