Primary tabs
-
1.4 கதைமாந்தர்
கதையில் இடம் பெறுகின்றவர்கள் பாத்திரங்கள் அல்லது கதைமாந்தர் எனப்படுவர். புதினக் கூறுகளுள் சிறந்தது பாத்திரப்படைப்பே ஆகும். வாழ்க்கையில் காணும் மாந்தர்களைப் புதினத்தில் படைக்கின்ற போது, உண்மையான மாந்தர்களைப் போலப் படைப்பது புதின ஆசிரியரின் திறனாகும்.
கதைத்திட்டத்தை எலும்புக்கூடு என்றால் அக்கூட்டுக்கு உயிரையும், பொருளையும், பொலிவையும் தருவது பாத்திரமேயாகும். ஆகவே புதினங்களின் வெற்றி ஆசிரியர் தேர்ந்து படைக்கும் பாத்திரங்களைப் பொறுத்தே அமைகிறது எனலாம். சிறந்த புதின ஆசிரியர்கள் படைத்த புதினங்களை நாம் படிக்கும் போது, அவற்றின் பாத்திரங்கள் நம் கற்பனையில் உயிருள்ளவை போல் இயங்கும். இவ்வாறு உயிருள்ளவை போலத் தோன்றும் பாத்திரப்படைப்பு உடைய புதினமே சிறப்புடையதாய் மதிக்கப் பெறும்.
பொதுவாக நாவலில் இடம் பெறும் பாத்திரங்களை (மாந்தர்களை)
(1) தலைமை மாந்தர்கள்
(2) துணைமை மாந்தர்கள்
(3) பிற மாந்தர்கள்
(4) பெயர் சுட்டாக் கதைமாந்தர்கள்
என்று நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
கதைத்தலைவன், கதைத் தலைவி ஆகிய இருவரே தலைமை மாந்தர் என்று கூறலாம். இவர்களுக்குத் துணைபுரியக் கூடியவர்கள் துணைமாந்தர்கள் எனலாம். கதையில் பங்கேற்றுக் கதையோட்டத்திற்குத் தொடர்புடையவர்கள் பிற மாந்தர்கள் என்றும், கதையில் பெயர் சுட்டிக் கூறாத கதை மாந்தர்களைப் பெயர் சுட்டாக் கதைமாந்தர்கள் என்றும் வகைப்படுத்தலாம்.
ஒவ்வொரு நாவலாசிரியரும் சமுதாயத்தைத் தாங்கள் புரிந்து கொண்ட கோணத்தில் நின்று அதற்கேற்பப் பாத்திரங்களைப் படைக்கின்றனர். தமிழ் நாவல்களில் இடம்பெறும் தலைமை மாந்தர்கள் பலர் ஒருநிலைப் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். உயர்ந்தபண்பு உடையவரையே கதைத்தலைவராக ஏற்கும் தமிழ் இலக்கிய மரபு, தமிழ்ப் படைப்பாளர்களின் உள்ளங்களில் பதிந்திருப்பதே இதற்குக் காரணம் ஆகும்.
புதினத்தில் இடம்பெறும் பாத்திரங்களை ஒருநிலைப் பாத்திரம் (Flat character) என்றும், வளர்நிலைப் பாத்திரம் (Round character) என்றும் இருவகையாகப் பிரிக்கிறார் ஈ.எம். ஃபாஸ்டர்.
நடைமுறை வாழ்க்கையில் காணும் மனிதர்கள் எல்லோரும் குறையும், நிறையும் உடையவர்கள் என்பது உண்மை. அதுபோலவே புதினப்படைப்பில் இடம்பெறும் பாத்திரங்களும் குறைநிறைகளுடன் படைக்கப் பெறுகின்றன. ஆயினும் நாவலில் இடம்பெறும் பாத்திரங்களில் தொடக்கம் முதல் இறுதிவரை, தன் பண்புகளில் எந்த மாற்றமும் அடையாமல் இருக்கும் பாத்திரம் ‘ஒருநிலைப் பாத்திரம்' ஆகும்.
ஒருநிலைப் பாத்திரம்
நா. பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சி மலர் என்ற புதினத்தின் தலைவனாகிய அரவிந்தனை ஒரு நிலைப் பாத்திரத்திற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
அச்சுக்கூடத்தில் பிழை திருத்திக் கொண்டிருக்கும் அரவிந்தன் கதைத் தலைவி பூரணி தெருவில் மயங்கி விழுந்ததைக் காண்கிறான். அவன் பூரணியின் தந்தையினுடைய நூல்களைப் பதிப்பிக்கும் உரிமையைக் கேட்கப் பூரணியிடம் செல்லும்போது தன் நாட்குறிப்பை மறந்து அங்கேயே விட்டுவிட்டு வந்து விடுகிறான். அந்த நாட்குறிப்பின் மூலமாக அரவிந்தன் ஒரு சிறந்த கவிஞன் என்பதைப் பூரணி உணர்கிறாள்.
அரவிந்தன்-பூரணி ஆகிய இவர்களிடையே அன்பு வளர்ந்து காதலாக மலர்கிறது. ஆதரவற்ற பூரணியின் குடும்பத்திற்கு அரவிந்தன் பெருந்துணையாக அமைகின்றான். பூரணியின் திறமையை உணர்ந்து அவள்பால் தான் கொண்ட காதலைத் தியாகம் செய்து, அவன் அவள் தொண்டு முழுமையும் நாட்டிற்கே பயன்படுமாறு தேர்தலில் போட்டியிடச் செய்கிறான். பூரணியைத் தேர்தலில் எதிர்த்து நின்ற செல்வனின் பகையால், அரவிந்தன் அச்சகத்தினின்றும் வெளியேற்றப்படுகின்றான்.
அருகில் உள்ள ஊரில் நச்சுக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவிசெய்யும் பணியில் அவன் ஈடுபடுகிறான். முடிவில் அக்காய்ச்சல் அவனையும் பற்றிக் கொள்ள, அதனாலேயே இறக்கிறான். இவ்வாறு இப்புதினத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை சீரிய பண்புள்ளவனாகவே படைக்கப்பட்டுள்ளதால் ஒரு நிலைப் பாத்திரத்திற்கு இப்பாத்திரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.
வளர்நிலை அல்லது முழுநிலைப் பாத்திரம்
தொடக்கத்தில் ஒரு பண்புடைய பாத்திரம், கதைநிகழ்ச்சிகளின் போது மாறுகின்ற பண்பினை உடையதாய் அது வளர்ச்சி எய்துமாயின் அது வளர்நிலைப் பாத்திரம் ஆகும். மு.வரதராசன் அவர்கள் எழுதிய அகல் விளக்கின் கதைத் தலைவனை இத்தகைய பாத்திரத்திற்குச் சிறந்த சான்றாகக் கொள்ளலாம்.
புதினத்தின் தொடக்கத்தில் சந்திரன் மிக நல்லவனாகவும், அழகு மிகுந்தவனாகவும் விளங்குகிறான். உயர்நிலைப் படிப்பை வாலாஜாப் பேட்டை என்ற நகரத்தில் தொடங்குகிறான். பாக்கியம் அம்மையாரின் தொடர்பு சந்திரனின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உயர்நிலைப் படிப்பின் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறினும், ஒரு பாடத்திலும் முதன்மையான எண்கள் பெறாமையால் அவன் உள்ளத்தில் மாற்றம் ஏற்படுகிறது.
கல்லூரிப் படிப்பு சென்னையில் தொடங்குகிறது. படிப்பில் அவன் சிறந்து விளங்கவில்லை. இமாவதி என்ற பெண்ணைக் காதலிக்கிறான். இது ஒரு பக்கக் காதல். அவளுக்குத் திருமணம் என்று கேள்விப்பட்டதும் படிப்பில் ஈடுபாடின்றி விடுதியை விட்டு எங்கோ சென்று விடுகிறான்.
சாந்தலிங்கம் என்ற மாணவன் மூலமாகச் சந்திரனைப் பற்றிய செய்திகள் புதினத்தில் அறிவிக்கப்பெறுகின்றன. நீலகிரி மலையில் தாயம்மா என்ற பெண்ணைச் சந்திரன் திருமணம் செய்து கொள்கின்றான். அவனே சிறிது நாள் கழித்து ஊர்திரும்பி வள்ளி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். சந்திரன்-வள்ளி வாழ்க்கை சுவையாக அமையவில்லை. தோட்டக்காரனுடைய பெண்ணோடு உறவு கொண்டு அவள் கணவனோடு வாழாதபடி சந்திரன் செய்கிறான். அவனுக்குத் தோல் நோய் தொடங்குகிறது.
அவனது கொடுமையைப் பொறுக்க முடியாமல் வள்ளி தற்கொலை செய்து கொள்கிறாள். வீட்டை விட்டு வெளியேறிய சந்திரன் இறுதியில் தொழுநோய் பிடித்து இறக்கும் தறுவாயில் தன் தவறுக்கு வருந்துகிறான். உடல், உள்ளம் ஆகிய இரண்டிலும் உடனுக்கு உடன் மாற்றத்தைச் சந்திரனின் பாத்திரப் படைப்பில் காண முடிகிறது.