தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-1.2-புதினத்தின் தோற்றம்

  • 1.2 புதினத்தின் தோற்றம்

    புதினம் முதன் முதலில் இத்தாலி நாட்டில் தோன்றியது. அது பெரும்பாலும் காதல் நிகழ்ச்சிகளையே சித்தரிப்பதாய் இருந்தது. எனவே ‘நாவல்' எனும் சொல் ஆதியில் Romance என்னும் பொருளிலேயே வழங்கப்பட்டது. பின்னரே, மனித வாழ்க்கையைச் சுவைபடக் கூறும் வடிவமாயிற்று எனலாம்.

    சாமுவேல் ரிச்சட்சன் என்பவர் 1741-ஆம் ஆண்டு ‘பமிலா' என்ற புதினத்தை எழுதினார். இதுவே உலகின் முதல் புதினமாகக் கருதப்படுகிறது. ஆங்கிலேயரின் வருகையால் இந்திய நாட்டுக்குக் கிடைத்த நன்மைகளுள் ஒன்று, அவர்களால் அறிமுகப்படுத்திய அச்சு இயந்திரத்தின் உதவியால் உரைநடைவளர்ச்சியடைந்தமை. அதன் வெளிப்பாடு புதினம் என்னும் இலக்கிய வடிவம்.

    1.2.1 புதின இலக்கிய முன்னோடிகள்

    தமிழில் முதல் புதினம் பிரதாப முதலியார்சரித்திரம். இது 1876-இல் வெளிவந்தது. இதன் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை ஆவார். பின்னர் 1893-இல் குருசாமி சர்மா என்பவர் பிரேம கலாவதீயம் என்னும் புதினத்தை வெளியிட்டார். அடுத்து 1896-இல் ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம் வெளிவந்தது. இதுவே தமிழில் வெளிவந்த முதல் தொடர் புதினமாகும். 1898-இல் மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் வெளிவந்தது. பண்டித நடேச சாஸ்திரியார், திக்கற்ற இரு குழந்தைகள் என்ற புதினத்தை எழுதினார். பொன்னுசாமி பிள்ளை என்பவர் கமலாட்சி என்ற புதினத்தை எழுதினார். இவர்களைப் புதிய இலக்கிய முன்னோடிகள் என்று தமிழ் உலகம் போற்றுகின்றது.

    1.2.2 தமிழ்ப் புதின வளர்ச்சி

    தமிழ் புதின உலகத்தில் கல்கி, (ரா.கிருஷ்ணமூர்த்தியின்) வருகை இளஞாயிற்றின் உதயம் போன்றது. புதினத்தைப் பொதுமக்கள் எல்லார்க்கும் உரியதாக ஆக்கிய பெருமை இவர் ஒருவர்க்கே உண்டு. அடுத்த நிலையில், அகிலனின் வருகை தமிழ் மக்களின் கவனத்தையும் கவனிப்பையும் ஒருங்கே பெற்றது. கல்கி, அகிலன் ஆகிய இரு ஆசிரியர்களின் புதினங்கள் குறித்தும், தமிழ்ப் புதின வளர்ச்சி குறித்தும் இதன் பின்வரும் பாடங்களில் விரிவாகக் காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:15:27(இந்திய நேரம்)