Primary tabs
-
1.5 உத்திகள்
வாசகன் புதினத்தைச் சுவைபடப் படித்து மகிழும் வகையில் பல உத்திகளைப் படைப்பாளன் கையாள்வான். அதில் குறிப்பிடத்தக்கது நனவோடை உத்தி.
1.5.1 நனவோடை உத்தி (Stream of consciousness)
நனவோடை என்ற புதிய உத்தி மூலம் பாத்திரப் பண்புகள் சித்தரிக்கப்படுவதைப் புதினங்களில் காண முடிகிறது. உள்மனத்திலிருந்து, ஒன்றிலிருந்து ஒன்றும், அதிலிருந்து மற்றொன்றும் தொடர்ந்து எழுவதாக எண்ணங்களை அமைக்கும் முறையே நனவோடை முறையாகும். இவ்வெண்ணங்களிடையே பொருத்தம் இருக்காது. உள்மனத்தினின்று எண்ணங்களை அவை எழும் முறையிலேயே அமைப்பதே நனவோடைப் புதினத்தின் உத்தியாகும்.
இரண்டு வகையில் காலத்தையும், இடத்தையும் கடந்தவர்களாகப் பாத்திரத்தைப் படைக்க இந்த உத்தி பயன்படுகிறது. உடலின் உள்ளுறுப்புகளை எக்ஸ்ரே படம் புலப்படுத்துவது போல, மனத்தின் உள்நிலையை நனவோடைப் புதினங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
ஜேம்ஸ் ஜாய்ஸ் என்பவர் (James Joyce) எழுதிய யூலிசெஸ் (Ulysses) என்ற ஆங்கிலப் புதினம் மிகச் சிறந்த நனவோடைப் புதினமாகப் போற்றப் பெறுகிறது.
தமிழ் நாவல்களில் சி.சு. செல்லப்பாவின் ஜீவனாம்சம், லா. ச. ராவின் புத்ர, அபிதா, நீல. பத்மநாபனின் உறவுகள் போன்ற படைப்புகள் நனவோடை உத்தியில் அமைந்தவை.
க.நா.சுப்பிரமணியத்தின் அசுரகணம் விசித்திரப் பாங்கு நிறைந்த ஒருமனிதனின் மனப்பிரமையை அழகுறச் சொல்கிறது. ஹேமா என்ற பெண்ணின் தாயைக் காணும்போது, அவள் நிழலிலே சூர்ப்பனகை ஒளிந்திருப்பதாக நினைப்பதும், அவளைத் தானே தன் கையால் கொலை செய்து விட்டதாக அஞ்சுவதும் வேடிக்கையாக இருக்கிறது. சம்பவங்களோ, அவற்றின் நிழல்களோ கூடத் தெரியாமல் கதாநாயகனின் உள்ள நிழல்களை மட்டுமே வார்த்தைகளில் சொல்ல முயன்றுள்ளார் ஆசிரியர்.
ஜெயகாந்தனின் ரிஷி மூலம் என்ற குறுநாவல் ராஜாராமனுக்கு அவன் தாய் சாரதா மீது ஏற்பட்ட பால்கவர்ச்சியைப் பேசுகிறது. மனநோயாளியான ராஜாராமனின் அடிமனச் சலனங்களை ஜெயகாந்தன் திறம்படக் காட்டுகிறார்.