தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 5.0 பாட முன்னுரை

    இஸ்லாமிய மெய்ஞ்ஞான (தத்துவ) இலக்கியங்கள் என்பன இஸ்லாம் சமயம் கண்ட மெய்ஞ்ஞான நெறியாகிய சூஃபிச் சித்தாந்தங்களைச் சொல்லும் இலக்கியமாகும், இவ்வகை இலக்கியங்கள் அறபு நாட்டில் அரும்பிப் பாரசீக நாட்டில் வளர்ந்து, தன் தனித்தன்மை குன்றாமல் உலகளாவிய நிலையில் மணம் பரப்பிய இலக்கியங்கள் ஆகும். இந்தியத் திரு நாட்டிற்குச் சூஃபி மெய்ஞ்ஞான நெறி கி.பி 12ஆம் நூற்றாண்டில் வருகை தந்தது. ஆனால் இந்நாட்டுக் கலாச்சார சங்கமங்களை ஏற்றது. இந்நாட்டுச் சித்தர்களின் இயல்புத் தத்துவங்களையும், சைவசித்தாந்தக் கோட்பாடுகளையும் தன்வயமாக்கிக் கொண்டது. வேற்றுமையில் ஒற்றுமை, சமய நல்லிணக்கம், சமுதாயத் தொண்டு போன்றவைகளை மெய்ஞ்ஞான நெறியில் ஓர் அங்கமாகக் கொண்டு மலர்ச்சி பெற்றது. சூஃபி மெய்ஞ்ஞானம் கடிந்துரைக்கும் துறவு நெறியை இம்மெய்ஞ்ஞானியர்கள் பலர் மேற்கொண்டனர். சீராடையின்றி மானம் மட்டும் மறைக்கும் வகையில் - இடையில் - ஓராடையுடன், சடைமுடியும், முகமுடியும் வளர்த்துக் கொண்டு தவமிருந்தனர். சூஃபி மெய்ஞ்ஞான நெறியின் முதற்படியான ஷரீஅத்தைப் புறக்கணித்து, உள்வணக்கம் எனக் கூறிக்கொண்டு மலை முகட்டிலும் பிலத்திலும் (பிலம் = குகை) மரத்திலும் தொங்கிக் கொண்டு மெய்ஞ்ஞானம் அருளினர்.

    துறவுக் கோட்பாட்டை அவர்களாகவே
    தோற்றுவித்துக் கொண்டனர். இறைவன்
    அதனை அவர்கள் மீது கட்டாயமாக்க வில்லை.
    இறைவனின் திருப்தியைப் பெறும் முயற்சியில்
    அவர்கள் தாமாகவே இந்த முறையைத்
    தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

    என இஸ்லாமியத் திருமறையாகிய அல்குர் ஆனின் திருவசனம் (57 : 27) கூறுகிறது. இந்த ஞானியர் உலகத்தைக் கண்டும் காணா முகத்தினராக இருந்து கொண்டனர். பெண்மையைப் போற்றக் கூறும் இஸ்லாமியத்திற்குப் புறம்பாக பெண்மையைப் பழித்தனர்; இழித்துரைத்தனர்; மாயை என்றனர். இவர்களிடம் இருந்ததெல்லாம் சமய மீறலே என்றாலும் தமிழ் மரபைத் தன்வயமாக்கும் துணிபே எனலாம்.

    இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மெய்ஞ்ஞானத் தமிழிலக்கியங்கள் தனிப்பிரிவாக அமைந்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மெய்ஞ்ஞானியர் பல்லாயிரக் கணக்கான இஸ்லாமிய மெய்ஞ்ஞானச் சித்தாந்தங்களைச் செய்யுட்களாக அருளிச் செய்துள்ளனர். தமிழகத்தில் இவர்களுடைய வரலாறு கி.பி 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தக்கலை பீர்முகம்மது அப்பாவிலிருந்து தொடங்குகின்றது. இஸ்லாமிய மெய்ஞ்ஞான நெறியின் படித்தரங்களான ஷரீஅத், தரீக்கத், ஹகீகத், மாரிஃபத் என்னும் நான்கு நெறிகளும் இறைவனை அறியும் நெறிகளாகும். இதனை,

    ஆதியை அறிய வேண்டில் அழகிய நிலைமை நாலாம்
    ஓதிய ஷரீஅத் தென்றும் உவந்திடும் தரீக்கத் தென்றும்
    நீதிசேர் ஹகீகத் தென்றும் நெறியுளார் மாரி பத்தால்
    ஆதியைக் காண லாமென்று அகுமதார் அருளிச் செய்தார்

    (ஞானமணி மாலை, செய்யுள் - 11)

    எனத் தக்கலை பீர்முகம்மது அப்பா குறிப்பிடுகின்றார்.

    ஆதி என்பது இறைவனையும், அகுமதார் என்னும் பெயர் நபிகள் பெருமானாரையும் சுட்டும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-10-2017 15:18:07(இந்திய நேரம்)