தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஸ்லாமியத் தமிழ் மெய்ஞ்ஞானம்

  • 5.3 இஸ்லாமியத் தமிழ் மெய்ஞ்ஞானம்

    இஸ்லாம் சமயம் கண்ட மெய்ஞ்ஞான நெறி இந்தியத் திருநாட்டிற்கு வெளியே தோன்றியது; என்றாலும் அந்நெறி இந்நாட்டில் மகத்தான வெற்றியைக் கண்டிருக்கிறது. அதற்குக் காரணம் இந்நாட்டு மக்களிடம் இருந்த இயல்பான மனோநிலையும் மத சகிப்புத் தன்மையுமேயாம். அடிக்கடி தோன்றிய அரசியல் மாற்றமும் ஒரு காரணம் எனக் கூறலாம். இந்திய இஸ்லாமிய மெய்ஞ்ஞான நெறி ஒரு புறம் ஷரீஅத்திலிருந்து வழுவி இந்நாட்டு யோகம் முதலான நியமங்களைக் கைக் கொண்டு தரீக்கத்தை வளர்த்தால், மறுபுறம் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட்டது. இத்தகைய நிலையில் தான் இஸ்லாமிய மெய்ஞ்ஞான நெறி தமிழகத்தில் வித்திடப்பட்டது.

    தமிழகம் மிகப் பழங்காலம் முதலே சித்தர்களின் இயல்புத் தத்துவங்களில் ஊறித் திளைத்திருந்தது. இஸ்லாமிய மெய்ஞ்ஞானச் சித்தாந்தங்களைப் பயின்ற தமிழகத்து இஸ்லாமிய மெய்ஞ்ஞானியர்கள் அவற்றை ஒப்பீட்டு முறையில் நோக்கினர். இஸ்லாமியம் கூறும் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மாரிஃபத் என்னும் நெறிகளைச் சரியை, கிரியை, ஞானம், யோகம் என்பவற்றுடன் ஒப்பு நோக்கினர். அந்நெறி தரும் பேறுகளாக இஸ்லாமியம் குறிக்கும் நாசூத்து, மலக்கூத்து, லாகூத்து, ஜபறூத்து என்பவற்றைச் சைவ சித்தாந்தம் சொல்லும் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுஜ்ஜியம் என்னும் பேறுகளுடன் ஒப்பு நோக்கினர். சைவம் காட்டும் போதம் இஸ்லாமியம் காட்டும் இல்ம் (கல்விஞானம்) ஆகும். ஆலமே மீதால் எனப்படும் மூலமாதிரி உலகு வேதாந்தத் தத்துவத்தில் உள்ள மாயாவோடு ஒப்பிடத்தக்கது. இவ்விரு நெறிகளும் அறிவின் துணையின்றி ஆத்தும விடுதலை பெற இயலாது என்பதை மிக அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகின்றன என்பர். இவ்வகை ஒப்பாய்வுச் சிந்தனை வயப்பட்ட இஸ்லாமிய மெய்ஞ்ஞானியர்கள் பலரும் எழுச்சி பெற்றனர். இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பாடல்கள் அருளிச் செய்துள்ளனர். ஷரீஅத், தரீகத், ஹகீகத், மாரிஃபத் என்னும் நான்கு நெறிகளையும் அருளியுள்ளனர். ஆனால் அவற்றில் சைவச் சித்தாந்தச் சாயலோ சித்தரியல்புத் தத்துவ மணமோ வீசாமல் இல்லை.

    5.3.1 யோக நிலை (Gnosis)

    மனிதன் இறைவனிடம் தொடர்பு கொள்வதில் உள்ளம் முதலிடம் வகிக்கிறது. உள்ளம் என்றால் உடலில் உள்ள தசைக்கட்டி அல்ல. எல்லாப் பொருட்களிலும் உள்ள உண்மைத் தன்மையை உணரும் உணர்வே உள்ளம் எனப்படும். மெய்ஞ்ஞானத்தால் அஃது ஒளி பெற்று விட்டால் இறை உள்ளத்தின் பிம்பமாக விளங்கும். இத்தகைய ஒளியைப் பகுத்தறிவால் பெற முடியாது. தஜல்லி எனப்படும் ஞானஒளி (Illumination of Heart), இல்ஹாம் எனப்படும் தெய்வ வெளிப்பாடு (Inspiration) ஆகிய இரண்டின் மூலமாகத்தான் அடையமுடியும். மெய்ஞ்ஞானி எய்தப்பெறும் இத்தகைய அறிவே மாரிபஃத் என்கிறோம். இதனை இர்ஃபான் (Irfan) என்றும் கூறுவர். இர்ஃபான் என்பதே யோகநிலை ஆகும்.

    யோகம் என்பது நெடுநாள் உயிர் வாழ்தலாகிய காயசித்தியைக் கருவியாகக் கொண்டு இறைவனை நினைந்து வழிபடும் முறையாகும். மூலாதாரத்திற்கு மேலுள்ள அனலை நுண்ணிய சுழுமுனை என்னும் நாடியின் வாயிலாகச் சிரசில் சேர்த்து அதன்கண் நின்றொழுகும் அமுதத்தை உலகெங்கும் பரவச் செய்வதே காயசித்தியாகும்.

    யோகத்தில் ஆறு ஆதாரமும் மூன்று மண்டலமும் இன்றியமையாதன.

    5.3.2 நாடிகள்

    நாடிகள் மூன்று வகைப்படும். அவை சுழுமுனை, இடகலை, பிங்கலை என்பனவாகும்.

    ஆறு ஆதாரங்களையும், மூன்று மண்டலங்களையும் இம்மூன்று நாடிகளும் ஊடுருவிச் செல்வனவாகும்.

    இடகலை என்பது இடது நாசியினால் உள்ளே செல்லும் மூச்சு ஆகும்.

    பிங்கலை என்பது வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் மூச்சு ஆகும்.

    சுழுமுனை என்னும் நாடியை இஸ்லாமிய மெய்ஞ்ஞானியர் அபுல் என்பர். உடம்பிற்குள் ஒரு குழல் இருக்கிறது. இது மூக்கிலிருக்கும் இருதுவாரங்களுக்கும் அடிமூலம் வழியாகும். அதற்குள் ஒரு நரம்பு இருக்கிறது. அது பொற்கம்பி போல் பிரகாசித்துக் கொண்டிருக்கும். அதனை தத்தியா என்றும் பிரம்ம நாடி என்றும் கூறுவர்.

    • மண்டலங்கள் மூன்று

    நெருப்பு மண்டலம், ஞாயிறு மண்டலம், திங்கள் மண்டலம் என மண்டலம் மூன்றாகும். நெருப்பு மண்டலம் மூலாதாரத்திற்கு இருவிரற்கிடைக்குமேல் நாற்கோணமாய் நடுவே ஒரு முக்கோணமுடையதாய் நாலிதழ்ப் பூப்போல் இருக்கும்.

    ஞாயிறு மண்டலம் உந்திக்கு நாலு விரற் கிடைக்குமேல் இதய கமலத்திற்கு அருகில் அறுகோணமாய் எட்டிதழ்ப் பூப்போல் இருக்கும்.

    திங்கள் மண்டலம் தலை நடுவில் மிகுந்த ஒளியோடு அமுதக் கலை உள்ளதாய் விளங்கும்.

    இவ்வகையில் அமைந்த யோக நிலையைத் தமிழில் அருளிய இஸ்லாமியத் தமிழ் மெய்ஞ்ஞானியர்கள் பலரும் தம்வயப்படுத்தி, இஸ்லாமியத் தமிழ் மெய்ஞ்ஞான இலக்கியம் அருளியுள்ளனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-10-2017 17:04:13(இந்திய நேரம்)