தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஸ்லாமிய மெய்ஞ்ஞானி

  • 5.4 இஸ்லாமிய மெய்ஞ்ஞானி

    இஸ்லாமிய மெய்ஞ்ஞான நெறியை யோகம் முதலான கலாச்சார சங்கமங்களுடன் அருளியவர்களுள் பெரிய  நூகுலெப்பை ஆலிம் முன்னோடியாகிறார். அவர் அருளிய வேதபுராணம் என்னும் இலக்கியமே இந்த வகையில் முதல் நூலாக அமைகிறது.

    • பெரிய நூகுலெப்பை ஆலிம்

    நெல்லை மாவட்டத்திலுள்ள காயல்பட்டினத்தில் நூகுலெப்பை ஆலிம் பிறந்தார். இவருடைய தந்தை அப்துல்காதிர் ஆலிம் ஆவார். இவர் சில காலம் மஞ்சக்கொல்லையில் தங்கி இருந்து அங்கேயே இறப்பெய்தினார். இளைய நூகுலெப்பை, மஞ்சுக் கொல்லையில் இருந்த சதக்கத்துல்லா அப்பாவின் உடன் பிறந்தாரான அஹமதொலி என்பாரிடம் மார்க்கக்கல்வியைக் கற்றார். (மார்க்கக் கல்வி = இஸ்லாம் சமயக் கல்வி) பின் பரங்கிப் பேட்டைக்குச் சென்று மஹ்மூது தீபியிடம் காதிரியா மெய்ஞ்ஞான நெறியினைப் பயின்றார். கற்று வல்ல பெருஞானியாகப் பல்வேறு இடங்களுக்குச் சென்று மெய்ஞ்ஞானம் போதித்தார். பின் பூவாறு என்னும் ஊருக்கு வந்து நங்கை நல்லார் ஒருவரை மணந்து நன்மக்களை ஈன்று தவ வாழ்வை மேற்கொண்டார். நிரந்தரமாக அவ்வூரிலேயே தங்கி வேதபுராணம் அருளினார்.

    வேதபுராணம் சமயச் சார்பான கருத்துக்ளையே முதன்மையாகக் கொண்டுள்ளது. திருமறையாகிய அல் குர்ஆனின் கருத்துகள் இலக்கியத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளன. அதேசமயம் சைவச் சித்தாந்தச் சாயலும் கொண்டுள்ளது. இந்நூல் 26 படலங்களும் 910 செய்யுட்களையும் பெற்றுள்ளது. இவர் கி.பி 1741இல் பூவாற்றில் சமாதி பெற்றார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-10-2017 17:09:39(இந்திய நேரம்)