தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 5.6 தொகுப்புரை

    இஸ்லாமிய மெய்ஞ்ஞான நெறி சூஃபி என்னும் பெயரைக் கொண்டது. இதற்குப் பரிசுத்தம் என்று பொருள் கொள்ளலாம். சூஃபி மெய்ஞ்ஞானியர்கள் பரிசுத்த வாழ்வை மேற்கொண்டனர். இறைத்தியானம், மறைத்தியானம், விருந்தோம்பி வேளாண் செய்யும் வகையில் இருந்தோம்பி இல் வாழ்வும் மேற்கொண்டனர். துறவறத்தையும் வெறுத்தனர்; கண்டித்தனர். இவ்வகையில் அமைந்த சூஃபித்துவம் அறபு நாட்டில் பிறந்து பாரசீக நாட்டில் வளர்ந்தது. வளர்ச்சிக்கும் மெய்ஞ்ஞானம் பரப்புவதற்கும் என்று ஜாவியா, தக்கியா, கான்கா எனப் பல்வேறு பெயர்களில தியானக் கூடங்கள் தோன்றின. அவைகள் சூஃபி மெய்ஞ்ஞான நெறியை முறையாகப் பயிற்சி அளித்தன. முறையான பயிற்சி இல்லாத பலர் அக்காலத்தில் தோன்றி மெய்ஞ்ஞானம் பேசினர். அவர்களிடம் இறைத்தியானமோ, மறைத்தியானமோ இல்லை. பெண்மையைப் பழித்தனர்; இழித்துப் பேசினர். அக்காலத்திலிருந்த சூஃபி மெய்ஞ்ஞானியர்கள் இவர்களை சூஃபியாகக் கொள்ளவில்லை. தர்வேஷ் என்றழைத்தனர்.

    சூஃபி மெய்ஞ்ஞான நெறி கி.பி 12ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் வித்திடப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் நகரில் தலம் கொண்டு துயிலும் காஜா முஜனுதீன் சிஸ்தி என்னும் ஆன்ற பெயர் கொண்ட ஞானியரே வட இந்தியாவில் சிஸ்தியா என்னும் சூஃபி நெறியை வித்திட்ட நல்லார் ஆவார். சாதி ஒருமை, சமய ஒருமை, கலாச்சார சங்கமங்களை சிஸ்தியா நெறி ஊக்குவித்தது. அதே சமயம் சிஸ்தியாக்களால் இஸ்லாமியம் போற்றப்பட்டது. சூஃபி மெய்ஞ்ஞான நெறி சூஃபி மெய்ஞ்ஞான நெறியாகவே போற்றப்பட்டது. வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்தியது.

    கி.பி 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சூஃபி மெய்ஞ்ஞான நெறி தமிழகத்தில் தூவப்பட்டது. இக்காலத்தில் இந்நாட்டில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால் சைவ சித்தாந்தம் மேலோங்கி இருந்தது. சிவவாக்கியர் முதலான பதினெண் சித்தர்கள் சாதி ஒருமை, சமய ஒருமையை மக்களிடையே போதித்து வந்தனர். இந்நிலையில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான நெறியை இஸ்லாமிய ஆன்ம ஞானிகள் பலரும் வரவேற்றனர். ஒப்பு நோக்கினர். நோக்கில் வேறுபட்டிருந்தாலும் பல்வேறு வகைப் போக்கில் ஒன்றுபட்டிருப்பதை உணர்ந்தனர். எழுச்சி பெற்றனர். தமிழ் மக்களிடையே வேற்றுமையைக் களைந்து ஒற்றுமைப் படுத்தும் யோகம் முதலான நெறிகளைத் தன்வயப்படுத்தினர். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நிலையில் இஸ்லாமிய மெய்ஞ்ஞானம் தன் தனித் தன்மை இழந்து விடாத வகையில் மெய்ஞ்ஞான இலக்கியங்கள் இயற்றினர். இவைகள் யாவும் இஸ்லாம் தமிழ் ஆகிய இரு இன மக்களின் சங்கமச் சிகரமே என்றும் வேற்றுமையில் ஒற்றுமையின் சின்னமே என்றும் வகுக்கலாம்.

    1.

    தமிழகத்து இஸ்லாமிய ஞானியர்கள் சூஃபி மெய்ஞ்ஞான நெறியை எவற்றுடன் - எவ்வகையில் - ஒப்பு நோக்கினர்?

    2.

    தமிழகத்து இஸ்லாமிய மெய்ஞ்ஞானியர்கள் எவ்வகை ஒப்பாய்வுச் சிந்தனை வயப்பட்டு எழுச்சியுற்றனர்?

    3.

    தமிழகத்து இஸ்லாமிய மெய்ஞ்ஞானியர்கள் யோக நிலையை எவ்வகையில் கொள்கின்றனர்?

    4.

    காயசித்தியாவது யாது?

    5.

    சுழுமுனை யாவது யாது?

    6.

    இஸ்லாமிய மூலக்கொள்கைகளான தொழுகை கலிமா ஆகியவற்றை எங்ஙனம் வழங்குவர்?

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-10-2017 18:18:26(இந்திய நேரம்)