தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிராமி எழுத்துக்கள்

  • பிராமி எழுத்துக்கள்

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை

    இந்திய எழுத்து வகை ஒன்றின் பெயர் பிராமி என்பதாகும்.

    காலம்:

    பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தைத் தவிர்த்த இந்தியாவில் வழக்கிலிருந்துள்ளது. வட இந்தியாவில் குப்தர்கள் கால முடிவுடன் இவ்வெழுத்து வழக்கொழிந்தாக அறிஞர்கள் கருதுவர். பின்பு இவ்வெழுத்து அந்தந்த வட்டார மொழிகளின் அடிப்படையில் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. “சித்தமாத்திரிகா” என்பது இவ்வரிவடிவத்தின் வளர்ச்சி நிலைக்கு இடப்பெற்ற பெயராகும்.

    வழங்கப்பெற்ற பெயர்கள்:

    19-ஆம் நூற்றாண்டு வரை பிராமி பலவாறாகப் பெயரிட்டு அழைக்கப் பெற்றது. அவை லத், லாட், தென் அசோகன், இந்தியன் பாலி, மௌரியன், அசோகன் பிராமி என்பதாகும்.

    பெயர்க்காரணம்

    கி.மு. 2500யைச் சேர்ந்த சிந்துவெளி எழுத்துக்கள் படித்துணரப் பெறாததால் கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி என்ற எழுத்தும் கரோஷ்டி என்ற எழுத்தும் இந்தியாவின் முதல் அறிந்த எழுத்துக்கள் (Known Scripts) என்ற பெருமையைப் பெற்றுள்ளன.

    கி.பி.1837ஆம் ஆண்டு ஜேம்ஸ்பிரின்ஸெப் என்ற ஆங்கிலேய நாணய பரிசோதகரே (Assay Master) இவ்வெழுத்துக்களை முழுமையாகப் படித்து வெளி உலகிற்கு கொண்டு வந்தார். இவருக்கு முன்பே இவ்வெழுத்துக்களை இரு மொழி காசுகள் கொண்டு கிறிஸ்டியன் லேசர் என்ற பிரெஞ்சு அறிஞர் படித்தாலும் முந்திக்கொண்டவர் ஜேம்ஸ் பிரின்ஸெப்பே ஆவார். இவர் அசோகரது கல்வெட்டெழுத்துகள் அனைத்தையும் படித்து வெளியிட்டார்.

    இவ்விதம் படித்துணரப்பட்ட எழுத்துக்களுக்குப் பெயரிடுவதில் எழுத்துக்கள் பற்றி கூறிய புத்த, சமண சமய நூற்கள் உதவி புரிந்தன. புத்தமத நூலான லலித விஸ்தாராவில் 63 எழுத்து வகைகளும் சமண நூலான பண்ணவானசுதா, சமாவயங்க சுதா போன்ற நூற்களில் 18 வகையான லிபிக்களும், (எழுத்துக்களும்) குறிப்பிடப்பட்டிருந்தன. “லிபி” என்ற சமஸ்கிருத சொல்லிற்கு எழுத்து என்று பொருள்.இவ்விரு நூற்களிலும் முதலாவதாக “பம்மி” (பிராமி) என்ற லிபியும் இரண்டாவதாக “கரோட்டி” (கரோஷ்டி) என்ற லிபியும் குறிப்பிடப்பட்டிருந்தன. பிராமி இடமிருந்து வலமாக எழுதப்பட்டதால் “இந்தோபாலி” என்றும் கரோஷ்டி வலமிருந்து இடமாக எழுதப்பட்டதால் “பாக்ட்ரோ பாலி” என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இந்நூற்களின் அடிப்படையிலும், சீன நாட்டின் புத்தமத களஞ்சியமான பா-யுவா-சுலின் என்ற நூலின் அடிப்படையிலும் இந்தியாவின் அறிந்த எழுத்துகளுக்கு 1886-87ஆம் ஆண்டு “பிராமி”, “கரோஷ்டி” என்று பெயர் வைத்தவர் டெர்ரைன் - டி - லாக்கோபெர்ரி என்ற அறிஞர் ஆவார்.

    “பிராமி” என்ற பெயர் சமயத்தின் அடிப்படையிலும் பெயரிடப்பட்டுள்ளது. பிரம்மனிலிருந்து உதித்தால் பிராமி என இந்து மதத்தினர் கூறுகின்றனர். சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபதேவருக்கு இரு மகள்கள். ஒருவர் பெயர் சுந்தரி, மற்றொருவர் பெயர் பிராமி. சுந்தரி என்றால் மொழி என்றும் பிராமி என்றால் எழுத்து என்றும் பொருள் எனக் கணேசன் கூறுகின்றார். இது தவிர இப்பெயரிடப் பெற்றதற்கு ஆதாரப்பூர்வமான சான்றுகள் ஏதுமில்லை.

    ஆயினும் பிராமி என்ற சொல்லாட்சி பொருத்தமானது தானா என்று இன்றுவரை அறிய இயலவில்லை. இச்சொல் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. இருப்பினும் அன்று முதல் கி.பி. 5, 6ஆம் நூற்றாண்டு வரை வட்டார மொழியின் அடிப்படையில் வரிவடிவம் அழைக்கப்படும் வரையில் இவ்வரிவடிவம் “பிராமி” என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

    பிராமி வரிவடிவம் காணப்பெறும் பொருட்கள்:

    இவ்வரிவடிவம் அசோகரது கல்வெட்டுகளில் பெரும்பாலும் கற்பாறைகளிலும், தூண்களிலும் காணப்பெறுகின்றன. இவற்றில் மட்டுமின்றி பட்டிபுரோலுவில் (ஆந்திரா) கற்பேழையிலும், மஹாஸ்தானில் (உ.பி) துண்டுக் கல்வெட்டிலும், பிப்ரவாவில் (மஹாராஷ்டிரா) ஜாடியிலும், சோகவுராவில் (மஹாராஷ்டிரா) வெண்கலத் தகட்டிலும் இவ்வெழுத்துக்கள் பொறிக்கப் பெற்றுள்ளன. இவை அனைத்தும் அசோகர் காலத்திற்கு முந்தையது என்பது அறிஞர்கள் கருத்து.

    அசோகருக்கு முற்பட்ட எழுத்துக்கள்

    இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டுக்கள் அசோகர் காலத்திலிருந்தே காணக்கிடைக்கின்றன. இருப்பினும் அதற்கு முன்பிருந்தே எழுத்துக்கள் இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன. பொ.ஆ.மு. 325இல் வடமேற்கு இந்தியாவில் பயணம் மேற்கொண்ட நியர்கோஸ் இந்தியர்கள் துணிகளில் எழுதும் வழக்கம் கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். பொ.ஆ.மு. 305இல் வாழ்ந்த மெகஸ்தனிஸ் இந்தியர்களுக்கு எழுதும் வழக்கமில்லை என்கிறார். இதை நுணுகி ஆராய்ந்த அறிஞர் ஹினோபர் அப்போது கிரேக்கத்திலிருந்த அளவிற்கு முறையான நெறிமுறைப்படுத்தப்பட்ட எழுத்து வழக்கு இந்தியாவில் இல்லை என்பதால் மெகஸ்தனிஸ் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்2. பாலி மொழியில் எழுதப்பட்ட புத்த ஜாதக கதைகளில் வரிவடிவங்கள் பற்றிய தெளிவான சான்றுகள் உள்ளன. முன்பே கூறியது போல் எழுத்துகள் லிபி என்ற சொல்லாட்சியின் மூலம் சுட்டப் பெற்றுள்ளன. அவற்றின் பெயர்களும் இடம் பெறுகின்றன. இது மட்டுமின்றி பிப்ரவா, சோகரா, மகாஸ்தான் ஆகிய 3 இடங்களில் கிடைத்த எழுத்துப்பொறிப்புகள் (inscriptions) பொருண்மையின் அடிப்படையில் அசோகர் காலத்திற்கும் முந்தையது எனக் கருதப் பெறுகிறது. ஆந்திரா மாநிலம் பட்டிபுரோலுவில் கிடைத்த ஈமப்பேழைக் கல்வெட்டும் (relic casket) வரிவடிவத்தில் அசோகர் காலத்திற்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது.


    பிப்ரவா

    பிராமியின் தோற்றம்

    இந்தியாவில் தோன்றியமை

    பிராமியின் தோற்றம் குறித்து ஆய்வாளர்களுக்கிடையில் ஒருமித்த கருத்துக்கள் நிலவவில்லை. இவ்வெழுத்து இந்தியாவிலேயே தோன்றியுள்ளது என ஒரு சில அறிஞர்கள் கூறுகின்றனர். வெளிநாட்டிலிருந்து இங்கு வந்ததாக ஒரு சில அறிஞர்கள் கூறுகின்றனர். அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம், ஜான் மார்ஷல், ஜி.ஆர்.ஹண்டர், டி.சி.சர்க்கார் போன்றோர் சிந்துவெளி குறியீடுகளிலிருந்தே இவ்வெழுத்துக்கள் தோன்றியிருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர்.
    ஓஜா, தி.நா.சுப்ரமணியன் போன்றோர் திராவிடரால் தோற்றம் பெற்றதென்றும் ஜார்ஜ்டாவ்ஸன் ஆரியரால் தோற்றம் பெற்றதெனவும் கருதுகின்றனர்.

    வெளிநாட்டில் தோன்றி இந்தியாவில் வழங்கியமை

    கிரேக்கத்திலிருந்து தோற்றம்

    பிராமி எழுத்தைக் கண்டறிந்து படித்த ஜேம்ஸ் பிரின்ஸெப்பும், முல்லரும் இது கிரேக்கத்தின் தோற்றமே என்று உரைக்கின்றனர். ஹால்வே, பால்க், ரிச்சர்ட் சாலமென் போன்றோர் இக்கருத்தை மறுக்கின்றனர்.

    தென் செமிட்டிக்கிலிருந்து தோற்றம்

    பிரன்சுவா லினோர்மா, டபிள்யு டிக்கே போன்ற அறிஞர்கள் இவ்வெழுத்து தென் செமிட்டிக்கிலிருந்து தோன்றியதாகக் கூறுகின்றனர்.

    வட செமிட்டிக் தோற்றம்

    பினிசிய (வட செமிட்டிக்) எழுத்துகளிலிருந்தே இது தோற்றம் பெற்றிருக்கவேண்டும் என உல்ரிச் பிரெடெரிக்கோப் தற்போதுள்ள இந்திய எழுத்துக்களை ஒப்பீடு செய்து முதலில் கூறினார். இதனை வலியுறுத்தி ஆதாரங்களை நிலை நிறுத்தியவர் ஜார்ஜ் பியூலர் ஆவார். பிராமியின் தோற்றம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருப்பினும் பியூலரின் கருத்துக்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப் பெற்றதாகக் கருதப்படுகிறது.

    பிராமி வழக்கொழிந்தமை

    பிராமியிலிருந்து அந்தந்த வட்டார வரிவடிவங்கள் தோற்றம் பெற்று பிராமி வழக்கொழிந்தது. முன்பே கூறியது போல் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரை இது இந்தியாவில் வழக்கிலிருந்துள்ளது. வட இந்தியாவில் குப்தர்கள் ஆட்சியுடன் வழக்கொழிந்துள்ளது.

     

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 18:30:18(இந்திய நேரம்)