தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வட்டெழுத்து

  • வட்டெழுத்து

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை

    தமிழகத்தில் ஏறத்தாழ பொ.ஆ. 4ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை வழங்கத்திலிருந்த ஒரு வகை எழுத்தாகும்.

    பெயர்க்காரணம்:

    வட்ட வடிவமாக எழுதப் பெற்றதால் இவை வட்டெழுத்துக்கள் எனப் பெயர் பெற்றன. ஏறத்தாழ பொ.ஆ.மு. 500 முதல் பொ.ஆ. 300 வரை வழக்கிலிருந்த சங்ககாலத் தமிழ் எழுத்துக்களின் (தமிழி) வளர்ச்சி மாற்ற நிலையே வட்டெழுத்துக்களாகும். இவ்வெழுத்து எக்காலம் முதற்கொண்டு இப்பெயர் பெற்றது என அறிய முடியவில்லை. இருப்பினும் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராக்கிரம பாண்டிய தேவரின் திருக்குற்றால நாதர் கல்வெட்டு இவ்வெழுத்தை ‘வட்டம்’ என்று குறிப்பிடுகிறது. “திருமலையில் கல்வெட்டு வட்டமானதால் தமிழாகப் படியெடுத்து” என்று வாசகம் உள்ளது.

    வட்டெழுத்துக்கு வழங்கப்பெற்ற வேறு பெயர்கள்:

    தெக்கன் மலையாளம், நாநாமோன, கோலெழுத்து என்பன இதன் பிற பெயர்களாகும்.

    தோற்றம்:

    டி.ஏ.கோபிநாதராவ் என்பவரே தமிழ்-பிராமி எழுத்திலிருந்து வட்டெழுத்து தோன்றியது என முதன் முதலில் கருத்து தெரிவித்தவர் ஆவார். எனினும் இவர் கருத்தை நிரூபிக்கத் தேவையான சான்றுகள் அக்காலத்தில் கிடைக்காததால் ஹரிப்பிரசாத் சாஸ்திரி இதை கரோஷ்டி எழுத்திலிருந்து தோன்றியது எனவும், பியூலர் தமிழ்-பிராமியின் மாறுபட்ட வடிவம் என்றும் வணிகர் மட்டும் பயன்படுத்தும் எழுத்து என்றும், பர்னல் பொனிசியன் வரிவடிவத்திலிருந்து தோன்றியது எனவும் இதன் தோற்றம் தொடர்பாகப் பல மாறுபட்ட கருத்துக்கள் நிலவின. ஆனால் அண்மைக் காலச் சான்றுகளான அறச்சலூர், பூலாங்குறிச்சி, இந்தளூர், அரசலாபுரம், பெருமுக்கல், அம்மன் கோயில்பட்டி ஆகிய ஊர்களில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் தமிழி எழுத்துக்களிலிருந்தே வட்டெழுத்து வளர்ச்சி அடைந்துள்ளமையினை நன்கு அறியலாம்.

    வட்டெழுத்து கல்வெட்டுகள் காணப்பெறும் இடங்கள்:

    தமிழகத்தில் பொ.ஆ. 2ஆம் நூற்றாண்டு முதல் எழுத்துக்களில் படிநிலை வளர்ச்சி இருப்பினும் முதலில் “தமிழி” எழுத்துக்களிலிருந்து வட்டெழுத்து மாறும் நிலை நன்கு காணப்பெறுவது அரச்சலூர் கல்வெட்டிலேயே ஆகும். இதைத் தொடர்ந்து பூலாங்குறிச்சி, அரசலாபுரம், எடக்கல் (கேரளா - பழையத் தமிழகம்), இரெட்டிமலை, எழுத்துக்கல்லு (கேரளா), இந்தளூர் (காஞ்சிபுரம்), பறையன் பட்டு, பெருமுக்கல், திருநாதர் குன்று (விழுப்புரம்), பிள்ளையார்பட்டி (சிவகங்கை), சித்தன்னவாசல் (புதுக்கோட்டை), தமதஹள்ளு (கர்நாடகா) திருச்சிராப்பள்ளி போன்ற பல இடங்களிலும் வட்டெழுத்தின் துவக்க நிலையைக் காண இயலுகிறது.
    அதனையடுத்து தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் இருளப்பட்டியில் கிடைத்த நடுகற்களிலும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி திருநாதர் குன்று, அரிட்டாப்பட்டி, சமணர் கல்வெட்டிலும் வட்டெழுத்துக்களைக் காணலாம். தமிழகத்தில் பெரும்பாலான முற்கால வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் தமிழகத்தில் வட பகுதியிலேயே அதிகமாகக் கிடைத்துள்ளன.

    பயன்பாடு:

    இவ்வெழுத்து முறை பல்லவர்கள் காலத்தில் தொண்டை மண்டல நடுகற்களில் (நடுகற்கள் என்பது ஊரைக் காக்கவோ நாட்டைக் காக்கவோ உயிரிழந்த வீரர்களுக்கு எடுக்கப்பெறும் நினைவுக் கற்களாகும். இது சங்ககாலம் தொட்டே வழக்கிலுள்ளது) பெருமளவில் காணப்படுகிறது. இதனால் பல்லவர் காலத்தில் இவ்வெழுத்துக்கள் மக்கள் வழக்காக இருந்தமையை அறிய முடிகிறது. பொ.ஆ. 7ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த முற்காலப் பாண்டியர்கள் தங்களது அரசு ஆணைகளையும் வட்டெழுத்திலேயே பொறித்துள்ளனர் என்பதற்கு வேள்விக்குடி செப்பேடுகள் போன்ற செப்பேடுகளே சான்றாகும். இதன் மூலம் பாண்டிய நாட்டில் இவை அரசு வரிவடிவமாக இருந்ததை அறியலாம்.
    கற்களில் மட்டுமின்றி பானை ஓடுகளிலும் இவை காணப்பெறுகின்றன. கோவைக்கு அருகே நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள போளுவாம்பட்டியிலும் திருவண்ணாமலை மாவட்டம் ஆண்டிப்பட்டியிலும் மேற்கொண்ட அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகளில் வட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பொ.ஆ. 4-5ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே வட்டெழுத்து வழக்கத்திற்கு வந்துவிட்டதை உணரலாம்.

    வட்டெழுத்து வழக்கொழிந்தமை:

    இவ்வட்டெழுத்துக்கள் பொ.ஆ.10ஆம் நூற்றாண்டு வரை பாண்டிய நாட்டில் வழக்கில் இருந்துள்ளன. இதைப் பயன்படுத்துவதிலும் படித்துணர்ந்து கொள்வதிலும் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக இவ்வரிவடிவம் காலப்போக்கில் வழக்கிலிருந்து மறைந்தது. சமகாலத்தில் வாழ்ந்த மக்களாலேயே இவ்வெழுத்துக்களைப் படிக்க இயலாத நிலை இருந்துள்ளது. இதை 14ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றில் “புரியாத வட்டம்” என்ற குறிப்பினால் அறியலாம் இருப்பினும் வட்டெழுத்து மக்கள் வழக்காகக் குறிப்பாக நடுகற்களில் பொ.ஆ. 10ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்டது. தமிழகத்தில் பொ.ஆ. 13ஆம் நூற்றாண்டில் வட்டெழுத்து தனது செல்வாக்கை முற்றிலும் இழந்தது. இருப்பினும் கேரளத்தில் தொடர்ந்து இவ்வட்டெழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. கேரளாவில் வடமொழிச் சொற்களை அதிகமாகப் பயன்படுத்தியதன் காரணமாக வட்டெழுத்துடன் கிரந்தத்தின் பயன்பாடும் அதிகரித்தது. பின்னர் இவ்விரு எழுத்துக்களும் இணைந்து மலையாளம் என்ற புதிய வரிவடிவம் உருவானது.

    அறச்சலூர் கல்வெட்டு


    அரிட்டாப்பட்டி சமணர் குகைக் கல்வெட்டு(பொ.ஆ.8ஆம் நூற்றாண்டு)



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 18:38:14(இந்திய நேரம்)