தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஆதிச்சநல்லூர்

  • தூங்கலோரியார்

    முனைவர் இரா.காமராசு
    உதவிப்பேராசிரியர்
    இலக்கியத்துறை


    தூங்கல் ஓரியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். மூன்று பாடல்கள் இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளன. அவை குறுந்தொகை 151, 235, நற்றிணை 60 ஆகியன ஓரி என்பது சிக்கு இல்லாமல் படிந்து தொங்கும் தலைமயிர் இப்புலவரது தலைமுடி அழகாகப் படிந்து தொங்கியதால் மக்கள் இவரைத் தூங்கல் ஓரியார் என்று அழைத்தனர்.

    பொருள் தேடச் செல்ல எண்ணிய தலைவன் தன் மறப்பருங் காதலியை விட்டு விட்டுச் செல்லுதல் தன் இளமைக்கு முடிவாக அமைந்துவிடும் என்று எண்ணுகிறான்.

    ஆண் வங்காவை அடித்துச் சென்று பருந்து தின்றுவிட்டதை எண்ணிப் பெண் வங்கா குழல் போலக் குரல் கொடுத்துக் கொண்டு அழும் காட்டு வழியில் பொருள் தேடச் செல்வது தன் இளமைக்கு மட்டுமல்லாது தன் காதலியின் இளமைக்கும் முற்றுப்புள்ளியாய் அமைந்துவிடும் என்று காதலன் எண்ணுகிறான் என குறுந்தொகையில் இவர் பாடுகின்றார்.

    வங்கா: வங்காப் பறவை குரல் எழுப்பினால் அது புல்லாங்குழல் ஊதுவது போல இருக்கும். பருந்து இதனை அடித்துச் சென்று உண்ணும்.

    எழால் : பருந்து, கழுகு.

    ஓரான் வல்சி: ஒரே ஒரு பசுவை வைத்துக் கொண்டு அதன் வருவாயில் வாழ்க்கை நடத்தும் வாழ்க்கைதான் ஓரான் வல்சி. தலைவி இத்தகைய சிற்றில்லில் பிறந்து வாழ்பவள்.

    தழையாடை: தழையாடையை மகளிர் இடையில் உடுத்திக்கொள்வர். மேலாடையாக மாட்டித் தொங்கவிட்டுக் கொள்வர். அணிகலன் போலப் பூண்டு கொள்வர். தம் நூலாடையின் மேல் செருகிக்கொள்வர்.

    நற்றிணையில் தலைவன் விடியல் வேளையில் வரால் மீனும் பொங்கல் சோறும் வயிறாரத் தின்றுவிட்டு நாற்று மகளிரிடையே சென்று பார்வையிடுகிறான். நாற்று நடுவோர் வயலிலுள்ள சாய் என்னும் கோரையையும், நெய்தல் பூக்களையும் களைந்து சேற்றில் அழுத்திவிட்டு நாற்று நடுகின்றனர்.

    சாய்க்கோரையும் நெய்தலும் தலைவனின் மனைவி அணிவன. எனவே அவற்றைக் களைய வேண்டாம் என்று தோழி சொல்கிறாள். புதுப்பெண்களோடு பழகும்போது பழைய மனைவியைத் தலைவன் மறந்துவிடக்கூடாது என்பது தோழியின் வேண்டுகோள். இப்பாடல் ஊடலுக்கு ஏதுவான நிகழ்ச்சியின் மேல் வந்த மருதத்திணை. இவ்வாறு உவமைச் சிறப்பும் சுவையுமிக்கப் பாடல்களைத் தந்து தூங்கலோரியார் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுகின்றார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:16:09(இந்திய நேரம்)