தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி்

    முனைவர் இரா.காமராசு
    உதவிப்பேராசிரியர்
    இலக்கியத்துறை

    ஒரு பாண்டிய வேந்தன். குடுமி என்பதே இவன் இயற்பெயராகும். பல வேள்விகளை இயற்றிய சிறப்பினால் பல்யாக சாலை என்ற அடையும் முதுமை பெற்றபின் முது என்ற அடையும் சேர்த்து பல்யாக சாலை முதுகுடுமி என்றும், குடிமை பற்றி பெருவழுதி என்றும் இவன் பெயர் நீண்டு அமைந்தது.

    காரிக்கிழார் (புறம், 6) நெட்டிமையார் (புறம், 9, 12, 15) நெடும் பல்லியத்தனார் (புறம், 64) ஆகிய மூவரும் இவனை நேரில் பாடியுள்ளனர். மாங்குடிமருதனார், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அறமுரைக்கையில் நீ பல்யாக சாலை முதுகுடுமி போல, நல்வேள்வித் துறைகளில் முயல்வாயாக (மது, 759, 760) தன்னாட்சியற்பட்ட பரந்த நிலவெல்லையின் கண் தன்னைக் குறித்த அச்சமும், புகழும் பரவ நடுநிலை கோடாமலும், படை, குடி முதலிய கூறுபாடுகள் சிறக்கவும் ஆண்டு, பகைவரை வென்று கொண்ட நல்லணிகளைப் பரிசிலர்க்கு வரிசையின் நல்கி முக்கட்செல்வராகிய சிவபெருமான் கோயிலை வலம் வருதற்குக் கொற்றக்குடையணியவும் நான்மறை முனிவராகிய அந்தணரின் வாழ்த்துக்கெதிரே முடிவணங்கவும், பகைவரது நாட்டைச் சுடும் புகைப்பட்டுத் தலைமாலை வாடவும், உரிமை மகளிரின் ஊடல் கொண்ட முகத்தின் முன் சினம் தணியவும் பெற்றுத் தன் கதிர் மதியம் போலவும் ஒண்கதிர் ஞாயிறு போலவும், நிலமிசை நிலைபெறுமாறு இவனை வாழ்த்துவார் காரிக்கிழார்.

    தான் பகைவரை வென்று பெற்ற வெற்றி முழுவதையும் வியவாது தன்னகத்தே உட்கொண்டவனென்றும், தணியாத வன்மையமைந்தவனென்றும், தகுதி மாட்சியமைப்பட்டவனென்றும் இவனை அவர் பாராட்டி விளிப்பர். ஆவும், நோயுடையீரும் பிள்ளைகளைப் பெறாதீரும், ஆகிய நீவிர் நுமக்கு அரணாகிய இடத்தை அடைவீராக. யாம் எம் அம்புகளை விரையச் செலுத்துவேம் என்று அறிவித்துப் பின் அறப்போர் செய்யும் மேற்கோளினையும் அதற்கேற்ற மறத்திறனையுமுடைய எம்வேந்தனாகிய குடுமி பஃறுளியாற்றின் மணலினும் பலகாலம் வாழ்வானாக என்று இவன் பண்புகளைப் பாராட்டி வாழ்த்துவார் நெட்டிமையார் (புறம், 9).

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:20:24(இந்திய நேரம்)