தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • நச்சினார்க்கினியர்

  முனைவர் இரா.காமராசு
  உதவிப்பேராசிரியர்
  இலக்கியத்துறை

  புகழ்வாய்ந்த உரையாசிரியர்களுள் ஒருவர் நச்சினார்க்கினியர். இவர் மதுரையைச் சேர்ந்தவர் என்பதும், பிராமணர் வகுப்புகளுள் ஒன்றாகிய பாரத்துவாசப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதும், மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் என இவர் உரைவரைந்த நூல்களின் பகுதிகள் தோறும் இடம்பெற்றுள்ள தொடரால் இனிது விளங்கும்.

  வரலாறு

  ‘நச்சினார்க்கினியர் போலும் நாக வீச் சரவ னாரே’ எனத் தேவாரத்திலும் (திரு நா.திருநாகேச்சரம்) நச்சினார்க்கினியாய் போற்றி, எனக் காஞ்சிப் புராணத்திலும் (சத்ததான. 11) வரும் தொடர்களால் சிவபெருமானை, நச்சினார்க்கினியனாகக் கூறப்பட்டுள்ளமை விளங்கும். இத்தொடர்க் குறிப்புக்கு ஏற்றவாறு, இவர் சைவ நெறி சார்ந்தவர் என்பதற்கு இவருரையில் சான்றுகள் பல உள்ளன. அன்றியும், சீவக சிந்தாமணி உரைச் சிறப்புப் பாடலில் நவின்ற வாய்மை நச்சினார்க்கினியன் என முடியும் பகுதியால் இச்செய்திகள் விளங்குமாம்.

  உரைகண்ட நூல்கள்

  நச்சினார்க்கினியர் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை சிந்தாமணி ஆகிய நூல்களுக்கு உரை கண்டுள்ளார். குறுந்தொகையில் பேராசிரியர் எழுதாமல் விடுத்த இருபது பாடல்களுக்கு உரை கண்டார் என்பர். அவ்வுரை கிடைக்கவில்லை.

  பத்துப்பாட்டு, கலித்தொகை ஆகிய இரண்டற்கும் இவருரை முழுமையாகக் கிடைத்துள்ளன. இவ்வாறே சிந்தாமணிக்கும் முழுவுரை கிடைத்துள்ளது.

  மூல நூலாசிரியர்க்கு ஒப்பான பெருமை உரையாசிரியர்க்கும் உண்டு. மூல நூலை விளக்கம் செய்து பரப்புநராக உரையாசிரியர்கள் இருந்ததுடன் மூல நூல்களை அழியாமல் காத்தவராகவும் இருந்தனர். பத்துப்பாட்டின் மூலத்தை, உரையிலிருந்து பிரித்தெடுத்தே, அமைத்துக் கொள்ள நேர்ந்தது என்பதை அறிந்தால் மூல நூலை உரையாசிரியர்கள் காத்த காவற் கடமை இனிது விளங்கும். உரை காணப்பட்ட நூல்களே பெரும்பாலும் அழிவினின்றும் காக்கப்பட்டுள்ளன என்பதை அறிபவர் உரையாசிரியர்களின் தொண்டினைக் குறைத்து மதிப்பிடார்.

  தனிப்பெருந்தொண்டு

  நச்சினார்க்கினியர் முற்றாகத் தம் வாழ்வைக் கல்விக்கென ஒதுக்கிய உயர்வாளர். வடமொழியும் தேர்ந்தவர். தமிழ் நூற் கடற்பரப்பில் ஒரு கலம் செலுத்திக் கரைகண்ட உரவோர். அவர் காலம் வரையில் தோற்றமுற்று நின்ற நூல்களையெல்லாம் முழுமையாகக் கற்று நெஞ்சக் களஞ்சியத்தில் அல்லது கருவூலத்தில் வைத்துக் கொண்டு வேண்டியவற்றை வேண்டிய இடத்தெல்லாம் தப்பின்றி வழங்கிய தனிப்பெரு வள்ளல். இவரால் அறியப்பட்ட நூல்களும், வரலாற்றுக் குறிப்புகளும், பழக்கவழக்கங்களும் எண்ணற்றவை. உரையெழுதுவதையே பிறவி நோக்கமாகவும், தகவார்ந்த தவமாகவும் கொண்ட தனிப்பெருந் தன்மையர் என்பது இவர் எழுதியுள்ள உரைப்பரப்பைக் காண எளிதில் தெளிவாகும். இதனாலேயே ‘உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’ எனப் புகழ் பெற்றார். ‘நச்சினார்க்கினியன் நாவின் நல்லுரை கொள்வர் நல்லோர்’ என்று பாராட்டி, இவர்தம் உரைக்கொடையைக் கைம்மாறு வேண்டாக் கடப்பாடுடைய மழைக் கொடையுடன் புலவர்கள் ஒப்பிட்டு உரைத்தனர்.

  வரலாற்றுக் குறிப்புகள்

  ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர்செல்லாது தன் மதிற்புறத்து வருந்துணையும் இருப்பின் அது உழிஞையின் அடங்கும். “சேரமான் செல்லுழித் தகடூரிடை அதியமான் இருந்ததாம்’ என்றும் (புறத். 7) இது, ‘அதியமானாற் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில் கிழார் கூறியது’ எனக் ‘கையகந்தமரும்’ என்னும் தகடூர் யாத்திரைப் பாடலைக் காட்டுவதும் (புறத். 8) ‘இராமன் இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது’ என்று ‘கொள்ளார் தோங் குறித்த கொற்றம்’ என்பதை விளக்குவதும் (புறத். 12) குருகுல வேந்தனைக் குறங்கறுத்த படுத்த முடியும் எனக் கருதுகின்றனர். காற்றில் வாழும் ஒரு வகை ஆவியே தீய நோய்களுக்குக் காரணமாக உள்ளது என்றும், அதனை விரட்டுவதற்கு மூலிகைகள் கலந்த நீரில் குளித்துவிட்டுச் சில சடங்கு நிகழ்ச்சிகளை நடத்தி அந்த ஆவியை அமைதிப்படுத்தலாம் என்றும் கூறுவர் என்பன போன்ற செய்திகள் இவரால் தரப்படுகின்றன.

  உரைகண்ட வகை

  தொல்காப்பிய உரையில் ‘சிந்தாமணியுள் யாம் கூறிய உரைகள் பலவற்றாலும் உணர்க’ (தொல், செய். 210, 211, 238) என்று கூறுவதால் தொல்காப்பியத்திற்கு உரை செய்யும் முன்னரே, சிந்தாமணிக்கு உரை செய்தார் என்பது விளங்கும். சிந்தாமணி உரையில் (72, 892, 1913, 2690) ‘தொல்காப்பியத்தில் கூறினாம்’ என்று கூறுவதால் சிந்தாமணிக்கு முன்னர் தொல்காப்பியத்திற்கு உரை கண்டமை விளங்கும். இதனை ஆய்ந்த பதிப்பாசிரியர் டாக்டர் உ.வே. சாமிநாதையர், தொல்காப்பியத்திற்கு உரை இயற்றுமுன் சிந்தாமணிக்கு முதன்முறை உரை இயற்றியதையும், இரண்டாம் முறை இவர் அந்நூலுக்கு உரை இயற்றிய பிறகு இயற்றியதையும் ஒருவகையாகப் பார்த்தால் மேற்கூறிய வரலாற்றை வலியுறுத்தி நிற்றல் காண்க என்பார். மேற்குறித்த வரலாறு என்பது இவர் இருமுறை சிந்தாமணிக்கு உரை கண்டமை ஆகும்.

  மேற்கோள்

  இன்றைய நாளில் வழக்கில் இல்லாத பல நூல்களை உரைகளில் ஆங்காங்கு எடுத்துக்காட்டியுள்ளார். அவிநயம், கடகண்டு, குணநாற்பது, கூத்தநூல், சிறுகுரீஇயுரை, தந்திரவாக்கியம், திருவுலாப்புறம், பெரும்பொருள் விளக்கம், மாபுராணம், மோதிரப்பாட்டு, யாழ்நூல், வசைக்கடம், வசைக்கூத்து, வளையாபதி, விளக்கத்தார் கூத்து என்பவை சில.

  ஒரு நூலுக்கு ஈருரை

  நச்சினார்க்கினியர் சமணப் பெருங்காப்பியமாகிய சிந்தாமணிக்கு உரை கண்டமை அவர்தம் சமயச் சால்பை நன்கு விளக்கும். ‘சமயங் கடந்தது மொழித்தொண்டு’ என்பதைத் தம் சொல்லால் காட்டியவர் நச்சினார்க்கினியர். முதற்கண் சிந்தாமணிக்கு ஓர் உரை கண்டார் என்றும், அவ்வுரை அச்சமயக் கோட்பாடுகள் சிலவற்றுக்குப் பொருந்தி வாராமல் இருந்ததென்றும், அதனால் சமண சமயம் சார்ந்து அச்சமயச் சான்றோர் பாராட்டுமாறு வழங்கினார் என்றும் அறிய வரும் செவிவழிச் செய்தியால், ஒரு நூலுக்கு மரபுப்படி உரை கண்டதற்காக அவர் எடுத்துக் கொண்ட இனிய முயற்சிகள் விளங்கும். இவற்றை நினைவார் நல்ல பல பாடங்களைப் பயில்வார் எனலாம்.

  தமிழ் உரையாசிரிய மரபில் உச்சிமேல் வைத்து மெச்சத்தரும் சிறப்பிக்குரியவராய் நச்சினார்க்கினியர் திகழ்கிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:16:28(இந்திய நேரம்)