தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • நல்லந்துவனார்

    முனைவர் இரா.காமராசு
    உதவிப்பேராசிரியர்
    இலக்கியத்துறை

    இவர்தம் இயற்பெயர் அந்துவன் என்பது நல் என்னும் முன்னடையும் ஆர் என்னும் பின்னடையும் பெருமை கருதிச் சேர்க்கப்பெற்று இவர் நல்லந்துவனார் என வழங்கப்பெற்றார். இவர் மதுரை ஊரினர் ஆதலாலும் ஆசிரியத் தொழில் புரிந்ததாலும் மதுரை ஆசிரியன் நல்லந்துவனார் என்றும் குறிக்கப்பட்டார். எட்டுத்தொகையுள் இவர் பாடல்கள் அகநானூற்றிலும் (43) நற்றிணையிலும் (88) கலித்தொகையிலும் (நெய்தற் கலி. 32) பரிபாடலிலும் (6, 8, 11, 20) இடம்பெற்றுள்ளன. சங்கப் புலவர்களுள் ஆசிரியம் கலி, பரிபாடல் என்னும் பல்வேறு வகை பாக்களைப் பாடியவர் இவரே. ‘சாற்றிய பல்கலையும்’ எனத் தொடங்கும் திருவள்ளுவமாலை வெண்பாவின் ஆசிரியர் அந்துவனார் என்னும் கருத்தை அறிஞர்கள் உடன்படுதலில்லை. பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கலித்தொகையும் பரிபாடலும் கி.பி 8 ஆம் நூற்றாண்டு என்னும் கருத்தினராதலின் நற்றிணை (88) அகநானூறு (43) பாடிய அந்துவனார், கலித்தொகை, பரிபாடல் பாடிய அந்துவனாரினும் வேறாவர் என்பர். அகநானூற்று 59 ஆம் பாடலில், சூரனைக் கொன்ற முருகன் தங்கியுள்ள பரங்குன்றத்தைப் பாடிய அந்துவனைப் பற்றி மதுரை மருதனிள நாகனார் குறிப்பிட்டிருத்தலின் பரிபாடலில் பரங்குன்ற முருகனைப் புகழ்ந்து பாராட்டிய அந்துவனாரும் சங்ககாலத்தவரே என்பது உறுதியாகின்றது. அந்துவன் என்னும் பெயர் சங்ககாலத்தில் அந்துவன் சாத்தன் (புறம். 71), அந்துவன் சேரல் (பதிற்றுப்பத்து, பதிகம், 7), அந்துவன் கீரன் (புறம் 359) என்று வேறு பெயர்களோடும் சேர்ந்து வழங்கியது.

    நல்லந்துவனார் கலித்தொகைக் கடவுள் வாழ்த்தில் சிவனையும், பரிபாடலில் (8)செவ்வேளையும், நெய்தற் கலியில் (2, 6, 28) திருமாலையும் புகழ்ந்து பாடியிருத்தலின், அவர்தம் சமயப் பொதுமையையுணரலாம். கால ஆய்வுக்குப் பயன்படும் இவர்தம் பதினோராம் பரிபாடல் இவர்தம் வானநூல் அறிவைப் புலப்படுத்தும். இவர் பாக்கள் எல்லாம் பெரும்பாலும் அகத்திணை தழுவியனவேயாம். பதிற்றுப்பத்திலும் புறநானூற்றிலும் இவர் பாடல் இடம் பெறாமையின் இவரை அகத்திணைப் புலவர் எனலாம். இவர் நெய்தல் திணை பாடுவதில் வல்லுநர் எனப் புகழ்பெற்றாலும் குறிஞ்சி, பாலைத்திணைகளிலும் இவர் பாக்கள் இடம் பெற்றுள்ளன. நெய்தல் நிலத்தையும் மாலைப் பொழுதையும் நெய்தற்கலியில் புனையும்போது இப்புலவர் அழகிய உவமைகளால் அறக்கருத்துக்களைப் புலப்படுத்தியுள்ளார். பல்கதிர் ஞாயிறு பகையிருளைக் கெடுத்துப் பகற்பொழுதை முறையால் செலுத்தி மாலையிலே மலையிலே சென்று சேர்தலுக்கு, ஒழுக்கத்தால் வென்று புகழெய்திய மன்னன் நன்முறையிலே உயிர்களைக் காத்துப் பழவினையின் பயனைத் துய்க்கத் துறக்கம் வேட்டெழுதலை உவமை கூறுவர் (கலி. 118). தலை சாய்த்து மரம் துஞ்சுதற்குத் தம்புகழ் கேட்டார், நாணித் தலைகுனிதலை உவமையாக்குவர் (கலி. 199). சில அறங்களை வரையறை செய்து சுருங்கக்கூறி விளங்க வைக்கிறார். ‘ஆற்றுதல் என்பது அலந்தவர்க்குதவுதல், போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை, பண்பெனப்படுவது பாடறிந்தொழுகுதல் அன்பெனப்படுவது தாங்கிளை செறாஅமை (கலி. 133) என்று பொழிந்திருப்பதைச் சான்றாகக் காணலாம்.

    பரிபாடலில் செவ்வேளைப் பற்றிய பல செய்திகளை அறியலாம். பரங்குன்றச் சிறப்பு, முருக வழிபாடு, பரங்குன்றத்துக்கு வந்த காதலரின் ஊடற் பேச்சு, பொய்ச்சுளுக்கு வருந்துதல், இறைவனை வேண்டல் முதலிய செய்திகள் அழகுறக் கூறப்பட்டுள்ளன. வையைப் பற்றிய இவர்தம் மூன்று பாடல்கள் வையையின் வளத்தையும், புனலாட்டுச் சிறப்பையும், தைந் நீராடலையும், ஊடலையும், பின் ஊடல் தவிர்த்து காதலர்கள் கூடுதலையும் நயமுறச் சித்தரிக்கின்றன.

    தமிழ் வையைத் தண்ணம் புனல் என வையையாறு தமிழுடன் இயைபு படுத்தி முதன் முதல் இவராலேயே சுட்டப்பெறுகின்றது. வையைத் தெய்வமாகவே கருதிப் புனலாட வருவோர், காதலருடன் இயைந்து வாழவேண்டும் என்றும், எப்பொழுதும் கிழவர், கிழவியர் என்னாது இளமையும் வலிமையும் பெற வேண்டும் என்றும் வரம் வேண்டுகின்றனர். இங்ஙனம் நல்லந்துவனார் பாடல்கள் இன்பச்சுவை பக்திச் சுவைகளைக் காட்டி நல்ல அறக்கருத்துக்களையும் நவில்கின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:16:48(இந்திய நேரம்)