தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • களத்தூர் வேதகிரி முதலியார்

  (1795 – 1852)

  முனைவர் த.கலாஸ்ரீதர்
  உதவிப்பேராசிரியர்
  ஓலைச்சுவடித்துறை

   

  இவர் களத்தூர் என்னும் ஊரினர். மகாவித்துவானாக விளங்கிய இயற்றமிழாசிரியர் முகவை இராமானுசக் கவிராயரிடம் தமிழ்க் கல்வி பயின்றார். இக்கவிராயரால் நிறுவப்பட்ட தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவராக இருந்தவர். மதுரையிலும் புதுவைக் கத்தோலிக்கக் கல்லூரியிலும் தமிழ்ப் புலவராகத் தொண்டாற்றியவர். பிறகு சென்னைக்கு வந்து ஓர் அச்சுக் கூடத்தை அமைத்து நடத்தி வந்தார்.

  இவர் யாழ்ப்பாணத்து உதய தாரகை எனும் இதழில் இலக்கண இலக்கியங்களைப் பற்றி 1841 முதல் 1843 வரையில் கட்டுரைகள் எழுதியுள்ளார். பல இலக்கண இலக்கிய நூல்களிலிருந்து செய்திகளைத் தொகுத்து இலக்கணக் களஞ்சியம், இலக்கியக் களஞ்சியம் என்னும் பெயருடன் நூலாக்கி அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.

  இவர் சூடாமணி நிகண்டின் பதினோராவது பகுதிக்கு உரை எழுதி 1843இல் அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். இவர் சூடாமணியில் பதினோராம் நிகண்டினைப் புதுப்பித்து சுமார் 600 செய்யுள்களுள்ள தனி நூலாக அமைத்து உரையும் வகுத்து யாழ்ப்பாணத்துச் சங்கத்து வாயிலாக 1842இல் வெளியிட்டுள்ளார். யாப்பருங்காலக் காரிகையை 1851இல் அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். பகவத்கீதையை 1832லும் நாலடியாரை 1855 லும் அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். மேலும், 1859இல் நைடத்திற்கு உரை எழுதிப் பதிப்பித்துள்ளார். இவர் மனுநீதி சதகம், மனுவியாக்கியான சதகம், நீதி சிந்தாமணி எனும் நூல்களையும் செய்தவர். இவைகளை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியபோது அவை அங்கு அச்சிடப்படவில்லை என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் தமது 19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் எனும் நூலின் 197 ஆம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:16:37(இந்திய நேரம்)