தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • அ.முத்துசாமிப் பிள்ளை

  (-1840)

  முனைவர் த.கலாஸ்ரீதர்
  உதவிப்பேராசிரியர்
  ஓலைச்சுவடித்துறை

  இவர் பிறந்த ஊர் பாண்டிச்சேரியாகும். இவர் வித்துவான் சாமிநாத பிள்ளையிடம் கற்றவர். தமிழ் இலக்கண இலக்கிய ஆராய்ச்சி மிக்கவராகவும், இலத்தீன், ஆங்கிலம், தெலுங்கு, வடமொழி ஆகியவற்றை அறிந்தவராகவும் விளங்கினவர். கிருஸ்தவ வேத விற்பன்னராகவும் திகழ்ந்தவர். சென்னைக் கல்விச் சங்கத்தின் ஆட்சிப் பொறுப்பாளராக இருந்தவர். தம் முன்னோர் கையெழுத்தாக எழுதிப் படித்து வந்த செபங்கள், மந்திரங்கள் பிரார்த்தனைகள் முதலியவைகளைப் பரிசோதித்து இலத்தீன் முதலிய மூலபாஷையில் முதனூல்களுக்கிணங்க வொத்திட்டுப் பிழையறத்திருத்தி அவைகளையொரு புத்தகமாகச் சேர்த்து ‘ஆத்துமவுத்தியான (1847) மெனப் பெயரிட்டுப் புதுவை மேற்றிராணியாரவர்கள் அனுமதியின் பேரில் அச்சிற் பதிப்பித்தவர். வேதவிகற்பதிக்காரம் எனும் அரிய நூலையும் ஆக்கியவர்.

  1868இல் நசரைக் கலம்பகம், 1885இல் நானாதிக்கர் கலம்பகம் எனும் நூல்களை இயற்றியவர். 1820இல் வேதவிகற்பதிக்காரம் வெளியிட்டவர். திரு வால்தர் எல்லீஸ் துரையின் கட்டளைக்கிணங்க சென்னைக் கல்விச் சங்கத்துக்காக ஓலைச்சுவடிகளை சேகரித்து வருவதற்காக 1816இல் தென்னாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முதன் முதலாகச் சுவடிகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டவர் திரு.அ.முத்துசாமிப்பிள்ளை அவர்களே ஆவர்.

  இவர் வீரமாமுனிவர் இயற்றிய நூல்களின் கையேட்டுப் படிகளைத் திரட்டி வீரமாமுனிவரது வரலாற்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி 1840இல் வெளியிட்டவர். மேற்படி சங்கத்து திரு ரிச்சர்டு கிளர்க்குடன் சேர்ந்து சில தமிழ் நூல்களையும் எழுதியவர். 1835இல் தாண்டவராய முதலியாருடன் சேர்ந்து இலக்கணப் பஞ்சகங்களில் நன்னூல் மூலமும், அகப்பொருள் மூலமும், வெண்பாமாலையும் அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார்.

  இவரது வரலாறு அ.முத்துசாமிப் பிள்ளையவர்களின் சமுத்திரச் சுருக்கம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இந்நூலில் வீரமாமுனிவர் அருளிச்செய்த திருக்காவலூர்க் கலம்பகமும், அன்னையழங்கலந்தாதியும், தேம்பாவணியில் சில பாடலும் வண்ணமும், வாமன் சரித்திரமும், புத்தகப் பெயரட்டவனையும், தஞ்சை நகரத்துப் பூங்கொடி சின்னப்பிள்ளை குமாரரான மரியப்ப பிள்ளையவர்கள் தம்பி அப்பாவு பிள்ளை என்பவராலும், ஞானாதிக்கப் பிள்ளை என்பவராலும் இரக்ஷணிய (வருடம்) சூஅளசுயங (1843) இல் அச்சில் பதிப்பிக்கப்பட்டன என்று குறிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ 1 ¼ என்றும் தலைப்பில் சர்வேஸ்வராய நம என்றும் போடப்பட்டிருக்கின்றன. இதன் பெயரட்டவணையில் தத்துவ போதக சுவாமி அருளிச் செய்தது. சாங்கோபாஸ் அருளிச் செய்தது. வீரமாமுனிவரும் சித்தாந்த பண்டாரமும் செய்தது என்று விவரம் தரப்பட்டுள்ளது. இது மொத்தம் 82 பக்கங்கள் கொண்டது. இதன் பின் பக்கத்தில் தமிழுக்கும் போர்த்துக்கீசு வியாக்கியான அகராதி, தமிழும் லத்தீனும் – லத்தீனும் தமிழுமாகிய அகராதி, தமிழும் லத்தீனுமாகிய கொடுந்தமிழிலக்கணம், தமிழும் லத்தீனுமாகிய செந்தமிழிலக்கணம், திருவள்ளுவர் குறளுக்கு லத்தீன் மொழிபெயர்ப்பு என்றும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:17:08(இந்திய நேரம்)