தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • யாழ்ப்பாண ஆறுமுக நாவலர்

  (1822 – 79)

  முனைவர் த.கலாஸ்ரீதர்
  உதவிப்பேராசிரியர்
  ஓலைச்சுவடித்துறை

  இவர் 18.12.1822இல் யாழ்ப்பாண நல்லூரில் வேளாள வகுப்பில் பாண்டி மறவர் குடியில் பிறந்தவர். தந்தையார் ப.கந்தப்பிள்ளை பல மொழி அறிந்தவராகவும், பல நாடகங்களின் ஆசிரியராகவும் திகழ்ந்தார். ஆறுமுகனார் இளமையில் நல்லூர்ச் சுப்பிரமணிய உபாதத்தியாரிடமும் வேலாயுத முதலியாரிடமும் தமிழ்க் கல்வி கற்றார். பிறகு 12 லிருந்து 19 ஆவது வயது வரை பீட்டர் பெர்சிவல் பாதிரியாருடைய ‘மெதடிஸ்ட் மிஷன்’ பள்ளிக்கூடத்தில் பயின்றார். சேனாதிராய முதலியார், சரவண முத்துப் புலவர் ஆகியோரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களை அறிந்து கொண்டார். சைவ சமயத்தொண்டால் சிறப்புற்று சைவச் சொற்பொழிவுகளை ஆற்றி எல்லார் உள்ளங்களையும் கவர்ந்தவர். தருமபுர ஆதீனத்தால் ‘நாவலர்’ என்ற பெயர் பெற்றவர். இவர் பதிப்புத்துறையில் பெரும் புகழ்பெற்றவர்.

  பதிப்புப் பணி

  சூடாமணி நிகண்டு உரை, சௌந்தரியலகரி உரை (1849) நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தூர் நீரோட்டகயமக வந்தாதி, திருமுருகாற்றுப்படை (1851), ஞானக்கும்மி (1852), திருவாசகம், திருக்கோவையர் (1860), திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் (1861) இலக்கணக்கொத்து, தருக்க சங்கிரகம், அன்னபட்டீயம் (1861), இலக்கண விளக்கம் சூறாவளி, தொல்காப்பிய சூத்திர விருத்தி (1866), கோயிற் புராணம் (1867), சைவ சமய நெறி (1868) போன்ற நல்ல பதிப்புகளை உருவாக்கி வெளியிட்டவர் இவர். தமிழில் நல்ல திருத்தமான பதிப்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வன இவருடைய பதிப்புகளேயாம்.

  தம் சைவசமய நூல்களோடு பிற சமய நூல்களான வில்லிபுத்தூரர் பாரதம் சீவகசிந்தாமணியுரை, சிலப்பதிகாரவுரை, மணிமேகலையுரை, வளையாபதியுரை போன்றவற்றையும் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக 1862இல் இவர் வெளியிட்ட திருக்கோவையார் நூலில் கூறியுள்ளார். இவ்வாறு அவர் பத்து நூல்களை அச்சிற் பதிப்பிக்கும் பொருட்டு எழுதி முடித்து வைத்திருந்தார் என்றும் அறியமுடிகின்றது. ஆனால் உடனடியாக வெளியிட்டிருந்தால் வளையாபதி நமக்குக் கிடைத்திருக்கும் என்பர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:18:21(இந்திய நேரம்)