தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை

  முனைவர் த.கலாஸ்ரீதர்
  உதவிப்பேராசிரியர்
  ஓலைச்சுவடித்துறை

  இவர் கம்பராமாயணத்திற்குப் பொருள் சொல்வதில் மிகத் திறமை படைத்தவராக இருந்தவர். இவர் எப்பொழுது பேசினாலும் வேடிக்கையாகப் பேசுவாராம். இவரைப் பற்றி ப.சம்பந்த முதலியார் யான்கண்ட புலவர்கள் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர் சென்னை மாகாணக் கல்லூரியில் தமிழ்ப் புலவராக இருந்தவர். இவர் மிகத் தீவிர வைணவர். இவரிடம் மயிலை சண்முகம் பிள்ளை போன்றவர் பாடங்கேட்டனர்.

  பதிப்பு நூல்கள்

  இவர் திருவாய் மொழி (1859), நளவெண்பா (1879), தென் திருப்பதி புராணம் (1890), திருநீலகண்ட நாயனார் விலாசம் (1875), வில்லிபுத்தூரர் பாரதம் முதலியனவும் இவரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியச் சேனாவரையம் இவரால் கையெழுத்து வழுவறப் பரிசோதிப்பித்துச் சென்னை வர்த்தமான தரங்கிணீ சாகை அச்சுக்கூடத்தில் விபவ ஆண்டு கார்த்திகை மாதம் (1868) பதிப்பிக்கப்பட்டுள்ளது. இவர் வில்லிபுத்தூரார் பாரதத்தைப் பெரியோர் வாக்கு அழியக்கூடாதென்று சிறிதும் அஞ்சாது சிவபரமாயிருந்த பாடல்கள் அநேகத்தைத் தள்ளியும் சில அடிகளை மாற்றியும் சில சொற்களைத் திரித்தும் மனம் போனவாறு பதிப்பித்தனர் என்பது கூடலூர்க் குமரகுரு சுவாமிகள் இயற்றி அச்சிற் பதிப்பித்த பரமோத்த ரசாபாச தருப்பணத்தில் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை தமது தீவிர வைணவப் பற்றுக் காரணமாகத் தாம் அச்சிட்டுப் பதிப்பித்த கம்பராமாயணத்தில் பழைய பாடத்தை மாற்றித் தமது கருத்துக்கேற்ப புதிய பாடத்தைப் புகுத்தி அச்சிட்டுள்ளார் என்று தொழுவூர் வேலாயுத முதலியார் 1886 ஆம் ஆண்டில் அச்சிட்ட ஏரெழுபது திருக்கை வழக்கம் என்னும் நூலின் முகவுரையில் சுட்டிக்காட்டிக் கண்டித்துள்ளார் என்பதும் இங்கு அறியத்தக்கதாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:19:43(இந்திய நேரம்)