தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • இரா. இராகவைய்யங்கர்

    (1870 – 1946)

    முனைவர் த.கலாஸ்ரீதர்
    உதவிப்பேராசிரியர்
    ஓலைச்சுவடித்துறை

     

    இவர் இராமானுஜையங்காருக்கும் பத்மாசனி அம்மாளுக்கும் இளைய மகனாய் 20-09-1870இல் பிறந்தார். இராமநாதபுரத்தில் சுவார்ட்ஸ் ஐயன் நிறுவிய உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர். ஓட்டப் பந்தயம், உடற்பயிற்சி முதலிய விளையாட்டுகளிலும் மிகுந்த ஈடுபாடு காட்டியவர். தம் தாய் மாமனான சதாவதானம் முத்துசாமி ஐயங்காருடன் இளமை முதல் பழகி வந்த காரணத்தால் தமிழ் நூல்களை விரும்பிக் கற்கவும், பிழையறத் தமிழ் நடையில் எழுதவும், பேசவும், தமிழ்ப் பாக்கள் இயற்றவும் திறமை பெற்றவரானார். மெட்ரிக்குலேஷன் வகுப்பு வரை படித்த இவர் ஆங்கிலக் கல்வியில் நாட்டங்கொள்ளாமல் தமிழ்ப் பயிற்சியிலேயே ஈடுபாடு காட்டினார். தமது அம்மானிடம் முறையாக இரண்டாண்டுக்குள் இலக்கிய இலக்கண நூல்களைப் படித்துணர்ந்து தேர்ச்சி பெற்றார்.

    மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும் திருச்சி தேசியப் பள்ளியிலும் தமிழாசிரியராகத் தொண்டு புரிந்தார். இந்திய அரசாங்கயத்தின் கல்வெட்டுப் பரிசோதகராய்ப் புகழ்பெற்ற து.அ கோபிநாதராவ் இவரிடம் அக்காலத்தில் கல்வி பயின்ற மாணவராவர். பாஸ்கர் சேதுபதியின் காலத்தின் ரா.இராகவைய்யங்கார் அவரது ஆதீன வித்துவானாக நியமிக்கப்பட்டார். 1903 இல் தொடங்கப்பட்ட செந்தமிழ் என்னும் தமிழ்ச்சங்க மாத இதழுக்கு முதல் ஆசிரியராகவும், 1935இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சிப் பகுதிக்குத் தலைவராகவும் இராகவைய்யங்கார் இருந்துள்ளார்.

    இவர் எழுதிய நூல்கள்

    பாரி கதையை 753 வெண்பாக்களால் இயற்றி 1934இல் இவர் தம் விளக்கவுரையுடன் செட்டி நாட்டரசர் அண்ணாமலைச் செட்டியாரைக் கொண்டு அரங்கேற்றச் செய்தார். புவி எழுபது, தொழிற் சிறப்பு, திருவடிமாலை முதலிய செய்யுள் நூலகளையும் அச்சிட்டுள்ளார்.

    தமிழ் வரலாறு, வஞ்சிமாநகர், சேதுநாடும் தமிழும், நல்லிசைப் புலமை மெல்லியலார் அண்டகோள மெய்ப்பொருள் முதலிய உரைநடை நூல்களையும் இயற்றி வெளியிட்டுள்ளார். இவர் மொழிபெயர்த்துள்ள நூல்களாவன. பகவத்கீதை தமிழ் இசையாலானது, வால்மீகி ராமாயணம் சில பகுதிகள், இரகுவம்சம் சில சுருக்கங்கள் அபிஜ்ஞான சாகுந்தலம் நாடக நூல்.

    பதிப்பு நூல்கள்

    இவர் பல நூல்களையும் பதிப்பித்துள்ளார். இவரும் பண்டைப் புலவர்கள் வாழ்ந்த ஊர்களுக்கெல்லாம் சென்று பழைய ஏட்டுச் சுவடிகளைத் தேடிச் சேர்த்துள்ளார். தொல்காப்பியச் செய்யுளுக்கு நச்சினார்க்கினியர் உரையைக் கண்டுபிடித்து அதனை 1917இல் அச்சிட்டுப் பதிப்பித்து வெளியிட்டு முதன் முதலில் தமிழ் உலகிற்கு அளித்த பெருமை இவரையே சாரும். மேலும், நேமிநாதம், பன்னிரு பாட்டியல் என்னும் இலக்கண நூல்களையும், ஐந்திணை ஐம்பது, நான்மணிக்கடிகை, திணைமாலை நூற்றைம்பது (1903) எனும் சங்க நூல்களையும், திருநூற்றந்தாதி என்னும் ஜைன நூலையும் முத்தொள்ளாயிரம் என்னும் நூலையும் இவர் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். அகநானூற்றை இவர் ஏடுகளிலிருந்து பரிசோதித்து மயிலாப்பூர் கம்பர்விலாசம் இராஜகோபாலையங்கார் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

    “தொல்காப்பியப் பொருளதிகாரத்துள் மெய்ப்பாடு, உவமம், செய்யுள் மரபியல்களின் உரைகளாக அச்சிடப்பட்டவை நச்சினார்க்கினியர் இயற்றியன அல்ல என்றும் அவை பேராசிரியர் உரையே என்றும் திருக்கோவையாருக்கு உரை வகுத்தவர் பேராசிரியரே என்றும் புறப்பொருள் வெண்பா மாலை உரையாசிரியர் மாகறல் சாமுண்டி தேவநாயகரே என்றும் கம்பராமாயணத்திற்கு அதன் ஆசிரியர் இட்ட பெயர் இராமாவதாரம் என்றும் இவை போல்வன பலவும் ஆராய்ச்சியிற் கண்டு முதன் முதல் தமிழுலகிற்கு அறிவித்தவர் நம் இராகவனாரேயாவர்” என்று டாக்டர் மா.இராசமாணிக்கனார் எடுத்துக் காட்டியுள்ளார்.

    குறுந்தொகை என்னும் சங்க இலக்கிய நூலுக்கு அரிய பெரிய விளக்கவுரை ஒன்றும் ரா.இராகவையங்கார் எழுதினார். இது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இவருக்கு மகாவித்துவான் என்ற பட்டத்தை டாக்டர் உ.வே.சாமிநாதையர் மேலைச்சிவபுரி சங்கத்தில் அளித்துள்ளார்.

    ரா.இராகவையங்கார் அகநானூற்றுக்குத் தாம் எழுதி வைத்திருந்த பிரதிகள் முதலியவற்றைப் பதிப்பிப்பதற்காகப் பாண்டித்துரைத் தேவர் மூலமாக உ.வே.சாமிநாத ஐயரவர்களிடம் சேர்ப்பித்தாகவும் எழுதி இருக்கிறார்கள். எனினும் இம்மூன்று (நற்றிணை, அகநானூறு, கலித்தொகை நூல்களும் ஐயரவர்கள் பதிப்பாக வெளியாகவில்லை. இதற்கு காரணம் ஒரு வகையில் புலமைக் காய்ச்சல் என்று சொல்லலாம் என்கிறார். மு.அருணாசலம் (13 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம், பக்.106)

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:17:40(இந்திய நேரம்)