தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை்

    (1827 – 1900)

    முனைவர் த.கலாஸ்ரீதர்
    உதவிப்பேராசிரியர்
    ஓலைச்சுவடித்துறை

    இவர் சங்கர நாராயணர்க்கும் தெய்வ நாயகி அம்மைக்கும் 23-04-1827 இல் பாளையங்கோட்டையில் பிறந்தவர். திருப்பாற்கடல்நாத கவிராயரிடம் தமிழ்க் கல்வி பயின்றவர். இவருடைய தந்தையார் வைணவத்தில் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தவர். தாயார் கேள்வியறிவாலே கம்ப இராமாயணப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு மனத்தில் நிறுத்திச் சொற்பொழிவாற்றும் முதிர்ச்சி பெற்றிருந்தவர். கிருஷ்ண பிள்ளை தொடக்கத்தில் மல்வித்தைப் பயின்று மிகவும் முரடராக விளங்கினார். சிறப்பாகக் கிருஸ்தவரைக் கண்டால் பிடிக்காது தொல்லை கொடுத்து வந்தவர். இவரது 14 ஆம் வயதிலே 9 வயதுள்ள முத்தம்மாளைத் திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர்.

    நாளடைவில் மனம் மாறி 1857 இல் சென்னைக்கு வந்து கிருஸ்தவராகித் திருமுழுக்குப் பெற்றார். ஹென்றி ஆல்பிரட்டு என்ற பெயர் அளிக்கப்பட்டது. கிருஸ்தவராகியும் தம் குடுமியை நீக்காமலும் கடுக்கனை விடாமலும் பழைய கோலத்திலேயே இவர் இருக்கலானார்.

    சென்னையில் தினவர்த்தமானியில் சில காலம் வரை துணையாசிரியராகப் பணியாற்றினார். பிறகு பள்ளி ஆசிரியராகவும் தொழில் பார்த்தார். இவர் பெயர் ஹென்றி ஆல்பிரட்டு கிருஷ்ண பிள்ளை என்று நீளமாகச் சில காலம் அழைக்கப்பட்டு கடைசியில் எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை என்று சுருக்கப்பட்டது.

    பதிப்பு நூல்கள்

    இவர் 1865 இல் திருவேதமாணிக்க நாடார் இயற்றிய வேதப் பொருள் அம்மானை என்னும் செய்யுள் நூலைப் பதிப்பித்தார். கால்டுவெல் பாதிரியார் இயற்றிய பரத கண்ட புராதனம் எனும் நூலையும் இவர் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

    இவரது இலக்கண சூடாமணி எனும் உரைநடை நூல் 1883லும், போற்றித் திருவகவல் எனும் 53 கண்ணிகள் கொண்ட செய்யுள் நூல் 1884லும், கிருஷ்ண பிள்ளை கிருஸ்தவரான வரலாறு 1893 லும் (இது 19 ஆம் நூற்றாண்டில் தமிழில் தோன்றிய முதல் தன் வரலாறு), இரட்சணிய யாத்திரிகம் 1894லும், இரட்சணிய சமய நிர்ணயம் 1898 லும் இரட்சணிய மனோகரம் 1899 லும் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. இரட்சணிய நவநீதம் என்ற நூலையும் இவர் இயற்றியுள்ளார்.

    கம்பராமாயணத்தில் கிருஷ்ண பிள்ளை இளமை முதலே பற்றுக் கொண்டு மூழ்கித் திளைத்தாலும் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தாலும் இவரது படைப்புகளில் செறிவான நடையும் பல நூல்களின் சாயலும் படர்ந்து காணப்படுகின்றன. அதன் பெருமையை எடுத்துக்கூறிய சுதேச கிருஸ்தவர் கிருஷ்ண பிள்ளையே ஆவர். இவரைக் கிருஸ்தவக் கம்பன் என்றே பலர் அழைத்து வருகின்றனர். இவர் 3-2-1900 இல் காலமானார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:19:12(இந்திய நேரம்)