தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • திரு.வி.கே. சூரிய நாராயண சாஸ்திரியார்

  (1870 – 1903)

  முனைவர் த.கலாஸ்ரீதர்
  உதவிப்பேராசிரியர்
  ஓலைச்சுவடித்துறை

  இவர் மதுரைக்குத் தெற்கே 4 கல் தொலைவிலுள்ள விளாச்சேரியில் 6-7-1870 இல் பிறந்தார். தந்தையார் பெயர் கோவிந்த சாஸ்திரி. மதுரை மகாவித்துவான் சு.சபாபதி முதலியாரிடம் முறையாகத் தமிழ் பயின்றவர். தந்தையாரிடம் வடமொழி கற்றார். பள்ளியிலும் கல்லூரியிலும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றார். 1892 இல் சென்னைக் கிருஸ்தவக் கல்லூரியில் தத்துவத்தில் பி.ஏ பட்டம் பெற்றும் சென்னை மாகாணத்திலேயே தமிழில் முதல் வகுப்பில் முதல்வராகத் தேறியதால் பாஸ்கர சேதுபதியின் பொற்பதக்கத்தையும் அடைந்தவர். தாம் படித்த கிருஸ்தவக் கல்லூரியிலேயே உதவித் தமிழாசிரியராக அலுவல் பார்த்து தலைமைத் தமிழாசிரியராக உயர்ந்தவர்.

  இவர் திராவிட மொழிச் சங்கத்தின் உதவித் தலைவராக 1899 இல் இருந்துள்ளார். தமிழ்மொழியின் மீது இவருக்கு இருந்த அடங்காப்பற்றின் காரணமாகத் தமது பெயரைத் தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றியமைத்துக் கொண்டார். வடமொழிப் பற்றுள்ளவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து, மத்திய சட்டமன்றத்தில் தாய் மொழிகளையெல்லாம் பல்கலைக்கழகப் பாடப் பகுதியிலிருந்து நீக்கிவிடச் சூழ்ச்சியாக ஒரு தீர்மானம் கொண்டு வந்து முன்மொழிய வைத்தனர். இதனை அறிந்த பரிதிமாற் கலைஞர் அச்சூழ்ச்சியை முறியடிக்க வேண்டிய தம் நண்பர் மு.சு.பூரணலிங்கம் பிள்ளையின் துணையுடனும் மதுரைத் தமிழ்ச்சங்க ஆதரவுடனும் மிகுந்த முயற்சி எடுத்து, ஆசிரியர் சங்கம் கூட்டத்தில் தம் கருத்துக்கு ஆதரவு தேடி, தாய்மொழிப் பாடப் பகுதியை நிலை நிறுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் கிருஸ்தவக் கல்லூரியின் இதழில் தமிழ் இடம் பெறப் போராடி வெற்றியடைந்துள்ளார்.

  தமிழை இகழ்ந்தவரை அவர் பெரிய மனிதராக இருந்தாலும் கவலைப்படாமல் சுடச்சுடப் பதிலளித்து அவர் தம் வாயை அடக்கிவிடுவார். பரிதிமாற் கலைஞர் தமிழில் நல்ல நாடகங்கள் இயற்றியும், நாடகவியல் என்னும் இலக்கண நூலை ஆக்கியும் தந்துள்ளார். மேலும் ஞானபோதினி எனும் மாத இதழை மு.சு.பூரணலிங்கம் பிள்ளையுடன் 1900 – 1903 வரை கூட்டாட்சியராக இருந்து நடத்தி வந்தார். இவர் நாடகங்களில் பங்கேற்று நடித்தும் உள்ளார். ஞானபோதினியில் தான் இவர் எழுதிய பலவகையான நூல்கள் முதலில் வெளியாயின.

  இவர் தமிழ்மொழியின் வரலாற்றை வரைந்து காட்டினார். பழைய நூல்களைப் பதிப்பித்தார். புதிய வகையில் தமிழுக்குப் பாமலைகளைச் சூட்டினார். நாடக நூல் வகையினை நாமகள் சிலம்பு என்றும் செய்யுள் நூல் வகையினைத் தமிழ் மகள் மேகலை என்றும் கதைகளாகிய உரைநடை நூல் வகையினை இன்பவள்ளி என்றும் ஞான நூல் வகையினை ஞான தரங்கினி என்றும் இவ்வகையில் அடங்காத நூல்களைக் கலாநிதி என்றும் இவர் பெயர் கொடுத்து அவ்வவ் வரிசையின் தலைப்பின்கீழ் வெளியிட்டுள்ளார்.

  இவர் தமது 19 ஆம் வயதில் இயற்றியது மாலா பஞ்சகம் என்னும் தோத்திர நூலாகும். ஆனால் இது அச்சாகவில்லை. ரூபாவதி அல்லது காணமற்போன மகன் – இது நாமகள் சிலம்பின் முதற்பரல், இவரது முதல் நாடக நூல் இது பெரிதும் மேனாட்டு நாடக முறைகளைப் பின்பற்றி எழுதப்பட்டது. இதன் முதல் பதிப்பு 1895லும் இரண்டாம் பதிப்பு 1902லும் வெளிவந்தது. 1952 இல் பி.ஏ தேர்வுக்கு இது பாடமாக வைக்கப்பட்டது.

  கலாவதி – இது நாமகள் சிலம்பின் இரண்டாம் பரலாகும். பெரிதும் வடமொழி நாடக இலக்கண முறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட்டது. தமது நாடகவியலுடன் முழுவதும் ஒத்தியங்கும் விதத்தில் இது இயற்றப்பட்டது. இதன் முதல் பதிப்பு 1897 இல் வெளிவந்தது. இந்நூலில் 225 செய்யுள்களும் மேற்கோளகராதியும் விளக்கக் குறிப்புரையும் ஆசிரியரே சேர்த்து அச்சிட்டுள்ளார்.

  நாடகவியல் – இந்நூல் தமிழ் மகள் மேகலையின் முதற் கிங்கிணியாகும். 1897 இல் இதன் முதல் பதிப்பும் 1901 இல் இரண்டாம் பதிப்பும் வெளியாகியுள்ளன. 1934 இல் இந்நூலசிரியரின் மாணவரான ந.பலராமையர் எழுதிய உரையுடன் மூன்றாம் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  தனிப்பாசுரத் தொகை - இது தமிழ் மகள் மேகலையின் இரண்டாம் கிங்கிணியாக 1899 இல் வெளிவந்த நூல் முதன் முதலில் ஞானபோதினியில் சிறிது சிறிதாக அச்சிடப்பட்டது. இதனைத் தான் ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இரண்டாம் பதிப்பில் இம்மொழிபெயர்ப்புடன் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதற்கு சி.வை. தாமோதரம் பிள்ளை சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார்.

  தமிழ்மொழியின் வரலாறு

  இந்நூல் 1903 இல் ஆசிரியரின் மிகுந்த ஆராய்ச்சியின் முடிவாக எழுதப்பட்டது. இதுவும் முதலில் ஞானபோதினியில் வெளிவந்து பின்னர் நூலாக்கப்பட்டது. பரிதிமாற் கலைஞர் இயற்றிய நூல்களில் இதுவே தலைசிறந்தது எனக் கூறப்படுகிறது.

  பதிப்பித்த நூல்கள்

  இவர் திருக்குளத்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ் (1896), கலிங்கத்துப்பரணி, இலக்கணச் சுருக்கம் (1898), நளவெண்பா (1899), மதுரை மாலை, பஞ்சதந்திரம், உத்தரகோச மங்கை, மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901), கலைமயில் கலாபம், நீதிநெறி விளக்கம் போன்ற நூல்களை இவர் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:20:34(இந்திய நேரம்)