தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • மகாவித்துவான் சி.மீனாட்சி சுந்தரம் பிள்ளை

  (1815 – 1876)

  முனைவர் த.கலாஸ்ரீதர்
  உதவிப்பேராசிரியர்
  ஓலைச்சுவடித்துறை

  இவருடைய தந்தையார் மதுரை சிதம்பரம் பிள்ளை, தாயார் அன்னதாச்சி. இவர் நெய்தல் வாயிலுடையான் கோத்திரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய முன்னோர் திருக்கோயிலுக்குரிய முத்திரைக் கணக்குகள் மீன் முத்திரைப் பணிக்குரியவர்களாக இருந்து வந்தனர். தமிழ்க் கல்வி கேள்விகளிலும் சிறந்தவர்களாகவும் விளங்கினர்.

  இவர் இளமையில் தந்தையாரிடம் கல்வி பயின்று நினைவாற்றல் மிக்கவராக விளங்கினார். தமக்கு வேண்டிய எல்லா நூல்களையும் தாமே ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதிப் படித்து வந்தார். பழஞ்செய்யுள்களைப் படிப்பதும் புதுக் கவிகளை இயற்றுவதும் இவரது பொழுதுபோக்குச் செயல்கள். இவருடைய தந்தையார் இறந்த போது தமது 15 ஆவது வயது முதற்கொண்டு குடும்பப் பொறுப்பினை ஏற்று நடத்த வேண்டியவரானார்.

  அக்காலத்தில் திரிசிரபுரத்தில் சிறந்து விளங்கிய மருதநாயகம் பிள்ளை, அப்பாவையர் ஆறுமுகம் பிள்ளை, வீரராகவ செட்டியார், முத்துவீர உபாத்தியாயர் முதலான தமிழ்ப் புலவர்களிடம் அண்டி அரிய நூல்களைப் பாடங்கேட்கும் ஏடுகள் பெற்றும் தமது தமிழறிவை முன்பைவிடப் பெருக்கிக் கொண்டார். மீனாட்சி சுந்தரம் பிள்ளை சைவரான இவர் வைணவ நூலான கம்பராமாயணம் முழுவதையும் தம் கையாலேயே மூன்று முறை எழுதிப் படியோலை (பிரதி) பண்ணியுள்ளார்.

  இவர் தமது கடுக்கனை விற்று ஆறு மாதத் தொகையை முன்னதாகக் கொடுத்து கீழ்வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகரிடம் இலக்கண விளக்கப்பாடம் கேட்டுள்ளார் என்றால் அவருக்குக் கல்விப் பெருக்கிலிருந்த ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஒருவாறு நாம் அறிந்துகொள்ள முடியும். கல்விச் செல்வத்தைப் பெற கல்வியைப் பிறர்க்கு அளிக்கவும் அவர் அப்போதும் தயங்கியது கிடையாது.

  இவர் தம்மிடம் வந்து கற்க விரும்பும் மாணவர்களுக்கு அவர்களது சாதி, மதம், கொள்கை என வேறுபாடு காட்டாமல் பாடம் சொல்வது வழக்கம். அதனைத் தம் கடமையாகவும் கொண்டிருந்தார். அவர் பாடம் சொல்லும் திறமையை அறிந்தும் அவர் காட்டும் அன்பைத் தெரிந்தும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வசதியுள்ளவர்களும் வசதியற்றவர்களும் அவரிடம் வந்து பாடம் கேட்பதைப் பெருமையாகக் கருதினர். ஏழை மாணவர்களுக்கு வேண்டிய உணவு, உடை, உறையுள் யாவும் அளித்து அவர்களுக்குக் கல்விச் செல்வத்தை வரையாது வழங்கிப் பயன் கருதாது அருந்தொண்டாற்றியுள்ளார்.

  22 தலபுராணங்களும், 6 பிற காப்பியங்களும், 51 பிரபந்தங்களும் கணக்கற்ற தனிப்பாடல்களும் என ஏராளமான இலக்கியங்களை இயற்றிய இவரைப் போன்ற தமிழறிஞர் இந்நூற்றாண்டில் எவருமில்லை. ஏராளமான இலக்கிய இலக்கண ஏட்டுச் சுவடிகளையும் அவர் திரட்டி வைத்திருந்தார். ஆயினும், அச்சில் பதிப்பிப்பதில் அவருக்கு அதிக நாட்டமில்லை.

  செவ்வந்திப் புராணம் (1851), காஞ்சிப்புராணம், திருவானைக்காப் புராணம் கல்லாடம் (1868) ஆகிய நூல்களை ஓலைச்சுவடியிலுள்ளவாறே அச்சில் பதிப்பித்தார். இவருக்குப் பின் வந்த இவருடைய மாணவர்களே இவருடைய நூல்களையும் பிற நூல்களையும் மிகுதியாகப் பதிப்பித்தனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:16:58(இந்திய நேரம்)