தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மொழிபெயர்ப்புக் கொள்கைகள்

  • 5.1 மொழிபெயர்ப்புக் கொள்கைகள்

    மொழிபெயர்ப்புக் கலைக்கு நீண்ட நெடிய மரபுடைய வரலாறு உண்டு என்பதை அறிவோம். ஒவ்வொரு துறையின் இயல்புக்கேற்பவும் மொழிபெயர்ப்புச் செய்தல் என்பது மிக மேன்மையான ஒன்றாக ஆகிவிடுகிறது. தனித்தனித் துறையின் இயல்பிற்கேற்ப மொழிபெயர்த்தல் தவிர்க்க இயலாதது. ஆதலின் எல்லா நிலையிலும் ஒரே அளவுகோலினைப் பயன்படுத்துதல் பொருந்தாது. மொழிபெயர்ப்பு உத்திகள் வேறுபடுவதைப் போலவே, மொழிபெயர்ப்பைப் பற்றிய மொழிபெயர்ப்பாளர்களின் தனிப்பட்ட நோக்கங்களும் கூட வேறுபடுகின்றன. முரண்பாடு தவிர்த்தல், எளிமை, தெளிவு, விளக்கங்கள், தன்வயமாக்கல், மூலநூல் ஆசிரியர், மொழி மற்றும் மூலநூல் அறிமுகம் என்ற சில அடிப்படைகளில் இவை அமையும்.

    5.1.1 முரண்பாடு தவிர்த்தல்

    மூலநூலின் கருத்துகளை மற்றொரு மொழிக்கு மாற்றுதல் என்ற நிலையில், மூலநூலின் கருத்துகளில் சிறிதும் மாறுபாடு ஏற்படாது இருத்தல் மிக அவசியமாகும். அவற்றுள் முரண்பாடு தோன்றின் மொழிபெயர்ப்பின் நோக்கத்தில் தடை ஏற்படும். எனவேதான் மொழிபெயர்ப்பாளர் மூலநூலினை நன்கு புரிந்துகொண்டு மொழிபெயர்ப்பில் இறங்க வேண்டும்.

    ''மொழிபெயர்ப்பென்பது எளிதான வேலையல்ல. மூலபாடம் எழுதவல்ல ஆற்றலுடையவர்களே மொழிபெயர்ப்பில் இறங்க முடியும். மூலபாடம் எழுதுபவர்களாயின் ஒரு மொழிப்பயிற்சி போதுமானது. மொழி பெயர்ப்பாளர்க்கோ இருமொழிகளிலும் தேர்ந்த கல்வி அறிவு இருக்க வேண்டுவது இன்றியமையாதது. சொல்லுக்குச் சொல் பெயர்த்தடுக்குவது மொழிபெயர்ப்பாகாது. பெயர்க்கப்பட வேண்டியது பொருளே. அங்ஙனம் பெயர்க்கும்போது அந்தந்த நாட்டு வழக்குகளையும் மரபுகளையும் கூட நன்கு தெரிந்திருத்தல் இன்றியமையாதது'' என்ற கவிமணியின் கூற்றை இணைத்து நோக்கும்போது, கருத்துமுரண் தோன்றா வகையில் நூலை மொழிபெயர்ப்பதற்கென மொழிபெயர்ப்பாளருக்கு இருக்க வேண்டிய திறன் புலப்படும். ''முரண்பாடுகள் இருப்பின் அவை தவறான கருத்துகளை மாற்று மொழியினருக்கு அறிமுகப்படுத்துவதோடு மொழிபெயர்ப்பு எனும் நிலை மாறி அது தழுவலாகி விடும்'' என்று திரு. மு.கோவிந்தராசன் மொழித் திறன்களும் சில சிக்கல்களும் என்ற தம்நூலில் குறித்துச் சொல்வது சிந்திப்பதற்கு உரியது.

    இதனை ஒரு குறளுக்கான சில ஆங்கில மொழிபெயர்ப்புகள் கொண்டு விளக்கலாம்.

    மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீர பிற

    என்பது வள்ளுவன் வாய்மொழி. இதனைப் பலர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். அவற்றுள் ஒரு சிலவற்றை எடுத்து விளக்கம் பெறலாம்.

    (1) ''Let him who does virtuous deeds
    be of spotless mind to that extent is virtue
    all else is vain show''

    என்று W.H. Drew & John Lazarus என்பவர்கள் மொழிபெயர்த்துள்ளனர்.

    இந்த மொழிபெயர்ப்பைக் கூர்ந்து நோக்கும் போது ‘அறச்செயல்களைச் செய்வதில் குற்றமில்லாத மனத்தினை உடையவனாக இருத்தல் அறம் என்ற பொருள் தொனிக்கிறது.’ இதில் குற்றமற்ற மனத்தினை உடையவனாய் இருப்பதுதான் அறம் என்ற மூலநூலோட்டத்தைச் சற்றுப் புரட்டும் நிலையை உணருகிறோம்.

    (2) ''Spotless be thou in mind, this only merits
    virtue’s name; All else, mere pomp of idle sound,
    no real worth can claim''

    என்று Dr. G.U. Pope மொழிபெயர்த்துள்ளார்.

    (3) ''Virtue is nothing but becoming pure in mind,
    the rest is nothing, empty and pompous noise''

    என்று S.R.V. அரசு என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.

    (4) ''Be pure in mind, its virtues claim,
    All else is only vain acclaim''

    என்று கஸ்தூரி சீனிவாசன் என்பவர் மொழி பெயர்த்துள்ளார்.

    (5) ''Abolishing filthy thoughts from our mind
    is virtue. All the other virtuous acts
    cannot be equated with it''

    என்று சு. சண்முக வேலாயுதம் எழுதுகிறார்.

    மொழிபெயர்ப்புகளைச் சற்றுச் சிந்தித்தால் Dr. G.U. போப் அவர்களின் மொழிபெயர்ப்பு சற்று விளக்கமாகவும், பொருத்தமாகவும் அமைவதைக் காணமுடிகிறது. இதனை உண்மை மொழிபெயர்ப்பு என்று ஏற்றுக் கொள்ளலாமா என்ற வினாவை எழுப்பினால் மூலத்தின் உள்ளீட்டை விளக்கி நிற்கும் நிலையில் ஏற்றுக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. ஏனைய மூன்றாவது, நான்காவது மொழிபெயர்ப்புகள் வேறுபட்ட சொற்களில் ஒரே பொருளைச் சொல்லி நிற்கின்றன. ஐந்தாவது மொழிபெயர்ப்பு ஒரு விளக்க மொழிபெயர்ப்பாக அமைகிறது என்று தேறலாம். இது கருத்தினைத் தெளிவாகப் புரிந்து கொண்டு கூற முற்பட்டிருப்பதால் மொழிபெயர்ப்பென ஏற்பதில் தவறில்லை. ஆனால் நான்காவது மொழிபெயர்ப்புச் சுருக்கமாகவும் அதே நேரத்தில் ஆங்கிலக் கவிதையில் திருக்குறளைக் கூறுவதாகவும் அமைகிறது. எனவே, இதனைச் சிறந்ததெனக் கொள்ளினும் பொருந்தும் எனலாம்.

    பல மொழிபெயர்ப்புகள் தோன்றுவது நல்லதுதான். ஆனால் தவறாக மொழிபெயர்த்து விடக் கூடாது என்ற நோக்கம் இருத்தல் வேண்டும். மற்றவற்றினும் சிறந்த மொழிபெயர்ப்பைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுதல் நல்லதுதான். ஆனால் முரண்பாடு நிகழா வண்ணம் காப்பது மொழிபெயர்ப்பாளரின் அடிப்படைக் கருத்தாக அமைய வேண்டும்.

    5.1.2 எளிமை

    ஒரு மொழிக் கருத்தினை மற்றொரு மொழியினருக்கு அறிமுகப் படுத்துதல் என்ற நிலையில் எளிமை மிகுதியாக வேண்டப்படுகிறது. மூல மொழியின் அழகு சிதையா வண்ணம், கற்போருக்கு இயல்பான நடையில், இது ஒரு மொழிபெயர்ப்பு என்று தோன்றாத வகையில், எளிய இனிய சொற்களால் மொழிபெயர்க்கும் போது இந்த எளிமை அமைந்து விடுகிறது.

    ''அறிவுலகத்திற்கு மொழிதான் பாதையும், பாலமும் ஆகும். அதன் எல்லைகள் விரியும் பொழுது நமது சாலையும் பாலமும் இயல்பாகவே அவற்றை எட்ட வேண்டும். இன்றைய அறிவுலகின் எல்லைகள் எங்கோ இருக்கின்றன. நமது மொழிகள் எங்கோ நிற்கின்றன. இடைவெளி பெரிது என்பது கவலைக்குரியது. அதனினும் அந்த இடைவெளி விரிவாகிக் கொண்டே போகிறது என்பது மேலும் கவலைக்குரியது. அது சீரானால் விரிவாகும் வேகமும் குறையும், எளிமையும் தோன்றும்'' என்று மொழிபெயர்ப்பின் இன்றியமையாமையினையும் எளிமையையும் குறித்து டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் குறிப்பிடுகிறார். ''நல்ல மொழிபெயர்ப்புகள் நம் காலத்தின் முக்கிய தேவைகளில் ஒன்றாகும்'' என்று F.L.லூக்காஸ் என்பவர் கூறுகிறார். இந்த எளிமைக்குச் சான்றாகக் குஜராத்தி மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுத் தமிழ் மொழிக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட ஜெய சோமநாத் என்ற நூலைக் கொள்ளலாம். இந்தப் புதினத்தைத் தமிழில் தந்தவர் சரஸ்வதி ராமனாத்.

    5.1.3 தெளிவு

    மொழிபெயர்ப்பினைச் செய்யும் பொழுது அது மிகத் தெளிவாக அமைந்திருந்தால்தான் எடுத்ததன் நோக்கம் நிறைவேறும். கருத்துத் தெளிவிற்காக மூலநூலின் மிக நீண்ட தொடர்களை ஆங்காங்கே எளிய தொடர்களாக்கியும் மொழிபெயர்க்கலாம். வாக்கியங்கள் பல கொண்ட பகுதிகளில், ஒவ்வொரு வாக்கியமாக எடுத்துக் கொண்டு அவ்வாக்கியத்தின் பயனிலை, எழுவாய், செயப்படுபொருள், வினையடை, பெயரடை முதலியவற்றை அடையாளம் கண்டு மொழிபெயர்த்து முறைப்படி சேர்த்துக் கோக்கிற பொழுது தெளிவான மொழிபெயர்ப்பு அமைகிறது. குறிப்பாக இந்த நிலையை அலுவலகத் தொடர்பான மொழிபெயர்ப்புகளில் காணலாம். மூலநூலார் பயன்படுத்தியிருக்கும் கடினமான சொற்களையோ அன்றி மொழிபெயர்ப்பினைப் படிப்போர் அறியாத சில மரபுச் சொற்றொடர்களையோ, பொருள்களையோ மொழிபெயர்க்கும் நிலை ஏற்பட்டால், கற்பார் அறிந்த வழக்கு மொழிகளில் தரும் பொழுது எளிமை புலப்படும். ஒரு மொழியில் வழங்கப்படும் பழமொழிகள் போன்றவற்றை மொழிபெயர்க்கும் போதும் மேற்சொன்ன தெளிவு முறை புலனாக வேண்டும். சான்றாக ''Carrying coal to New castle'' என்ற மரபுத் தொடரான ஆங்கிலப் பழமொழி தமிழில் மொழிபெயர்க்கப்படும் போது, இந்தியத் தமிழருக்குக் ''கொல்லன் தெருவில் ஊசி விற்றல் போல்'' என்றும் இலங்கைத் தமிழருக்கு ''யாழ்ப்பாணத்துக்குப் பனங்கொட்டை கொண்டு போதல் போல்'' என்றும் அவரவர் வழக்காற்றுக்கு ஏற்றவாறு எழுதப்படுவது சிறப்புடையதாகும்.

    5.1.4 விளக்கங்கள்

    அந்தந்த மொழியினரின் மரபுகள், பழக்க வழக்கங்கள், சூழல்கள் போன்ற அடிப்படைகள் ஒன்றன் சிறப்பு மற்றொன்றில் உறுதியாகப் புலப்படுவதும், அச்சொற்களை அப்படியே தந்துவிட்டு அவற்றிற்குத் தேவையான விளக்கங்களை அடிக்குறிப்பில் தருவதும் விளக்கத்திற்குத் துணை நிற்கும். எடுத்துக்காட்டாக லியோ டால்ஸ்டாயின் ''சக்கரவர்த்தி பீட்டரை''த் தமிழில் மொழிபெயர்த்த S.ராமகிருஷ்ணன் தரும் விளக்கம் சிறப்பாக உள்ளது. ‘பாயர்கள்’ என்ற ஒருவகைப் பிரபுக்களைக் குறிக்கும் போது ''பாயர்கள்'' என்று மொழிபெயர்த்து விட்டு, அடைப்புக்குறிக்குள் பாயர்கள் ருசிய நாட்டு நிலப்பிரபுக்களில் ஒருவகையினர். உச்சவட்டத்துப் பிரபுக்கள் மகாப்பிரபுக்கள் என்றழைக்கப்பட்டனர்; அடுத்த தட்டிலிருந்தவர்கள் பாயர்கள் என்று குறிக்கப் பெற்றனர் என்று தந்துள்ள விளக்கம் சிறப்பாக அமைந்துள்ளது.

    ‘மூலத்திலுள்ள சொல்லும் எழுத்தும் மொழி பெயர்ப்பாளருடைய சுதந்திரத்தைப் பாதிக்கும் விலங்காக அமைந்துவிடக் கூடாது. சில சொற்களை மொழிபெயர்க்காமல் விட்டு விட்டால் அதனால் மொழிபெயர்ப்பு ஒன்றும் கெட்டுப் போய் விடாது. உண்மையில் மூலத்தின் பொது பாவத்தைச் செம்மையாக மொழிபெயர்ப்பதற்காகவே சில சொற்களைத் தமிழாக்கம் செய்யாமல் தவிர்க்க வேண்டி இருக்கும்’ என்ற S.மகராஜன் அவர்களின் கருத்து இந்தப் போக்குக்கு மேலும் வலிவூட்டக் காணலாம்.

    • தன்வயமாக்கல்

    பிறமொழியினரின் பெயர்ச்சொற்கள் அதாவது பாத்திரத்தின் பெயர், இடப்பெயர் போன்றனவும், நம்மிடையே இல்லாத பொருட்களின் பெயர்களும் மூலத்தில் வருமாயின் அவற்றைத் தன்வயமாக்கி ஏற்றுக் கொள்ளுதல் சிறப்புடையதாகும். எடுத்துக்காட்டாகச் சிறந்த ஆங்கில நாடக ஆசிரியரான Shakespear ஐ ‘செகப்பிரியர்’ என்றும், Merchant of Venice என்பதை ‘வாணிபுர வணிகன்’ என்றும் தமிழாக்கியதைக் குறிப்பிடலாம். Joseph, John, Jacco போன்ற ஆங்கிலப் பெயர்களை சூசை, நகுலன் என்று வீரமாமுனிவர் தமிழ்ப்படுத்திய நிலையும் இங்கு எண்ணிப்பார்க்கத் தக்கது.

    5.1.5 மொழிபெயர்ப்பாளர் கடமை

    மொழிபெயர்ப்பாளர் தம் பணித் தொடக்கத்தில் அதாவது நூல் முகவுரையில் மூலநூலினைப் பற்றியும், மூலநூலாசிரியர் பற்றியும் எந்த மொழியில் அமைந்தது என்பது பற்றியும் ஒரு சிறந்த அறிமுகம் தருதல் கற்போருக்குப் பேருதவியாக இருக்கும். கற்கும் நூலின் மூலம் எது? ஆசிரியர் யார்? மூலமொழி எது? என்பன போன்ற செய்திகளை அறியவும் அதன் சிறப்புகள் பற்றி உணரவும் கற்போர் ஆர்வம் கொள்ளுவது இயற்கை தான். எனவே, அவற்றை நிறைவு செய்வது மொழிபெயர்ப்பாளரின் பொறுப்பான கடமையாகும்.

    எடுத்துக்காட்டாக: மறைமலை அடிகளார் தமது சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பின் முன்னுரையில் காளிதாசன் சமக்கிருதத்தில் எழுதிய சாகுந்தலம் பற்றியும், இதனைத் தாம் எந்தச் சூழலில் தமிழாக்கம் செய்தார் என்பன போன்ற செய்திகளையும் தந்துள்ளமையைக் குறிப்பிடலாம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    மொழிபெயர்ப்பாளர்களின் தனிப்பட்ட நோக்கங்களாக இப்பாடம் குறிப்பன யாவை?
    2.
    முரண்பாடு தவிர்த்தலை விளக்குவதற்காகக் காட்டப்பட்ட திருக்குறள் எது?
    3.
    மொழிபெயர்ப்பாளரின் அடிப்படைக் கருத்தாக அமையவேண்டியது எது?
    4.
    சரஸ்வதி ராமனாத் மொழிபெயர்ப்புச் செய்த நூல் எது? எம்மொழியில் எழுதப்பட்டது?
    5.
    இடத்திற்கு இடம் மாறுபட உரைக்கத் தகும் மொழியாக்கமாக இப்பாடம் எதனைச் சுட்டுகிறது?
    6.
    S.ராமகிருஷ்ணன் யாருடைய எந்த நூலை மொழிபெயர்த்தார்? என்ன விளக்கம் தந்தார்?
    7.
    தன்வயமாக்கல் என்றால் என்ன? சான்றுடன் விளக்குக.
    8.
    சாகுந்தல நாடகம் - இதன் மூலநூல் யாரால் எம்மொழியில் எழுதப் பெற்றது? அதை மொழியாக்கம் செய்தவர் யார்?
புதுப்பிக்கபட்ட நாள் : 09-07-2018 12:57:50(இந்திய நேரம்)