தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 4.7

  • 4.7 ஈகை (Charity)

    இந்த உலகத்திலுள்ள பல பாவச் செயல்களுக்கு அடிப்படைக்
    காரணங்களுள் ஒன்று பசி. பிறர் பொருளைத் திருடிய ஒருவனைப்
    பார்த்து ஏன் திருடினாய்? என்று கேட்டால், ‘பசி‘ எனவே
    திருடினேன் என்பான். இவ்வாறு பல தவறுகளுக்கும்
    அடிப்படையாக அமைவது ஒருவனைத் துன்புறுத்தும் பசி
    அல்லது இல்லாமை. இதைப் போக்கி விட்டால், அந்தப் பாவச்
    செயல்களை அல்லது தவறுகளைத் தவிர்க்கலாம். தமிழிலுள்ள
    சிறந்த காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலை பசியினால்
    ஏற்படும் துன்பத்தை எடுத்துரைக்கிறது. ‘உண்டி (உணவு)
    கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்‘ என்று கூறுகிறது. எனவே
    பசியால் வருந்தும் ஒருவனுக்கு அவன் விரும்பும் உணவைக்
    கொடுத்து அவன் பசியைப் போக்குவது ஓர் அறம். அது
    சமுதாயத் தொண்டு. இதையே வள்ளுவர் ‘ஈகை‘ என்று
    கூறுகிறார்.


    4.7.1 தேவை அறிந்து உதவுக

    ‘பாத்திரம் அறிந்து பிச்சை இடவேண்டும்‘ என்பர். யாருக்கு எது
    தேவையோ அதை அறிந்து உதவவேண்டும். தகுதிக்கு ஏற்றவாறு
    பணி கொடுக்க வேண்டும், என இதற்குப் பல விளக்கங்கள்
    உண்டு. எனவே, எவன் ஒருவன் பசியால் வருந்துகிறானோ,
    அவனது பசியைத் தீர்ப்பதற்கு உதவி செய்வதுதான் ‘ஈகை‘ என,
    ஈகைக்கு விளக்கம் கொடுக்கிறார் வள்ளுவர். இதனை,


    வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றுஎல்லாம்
    குறிஎதிர்ப்பை நீரது உடைத்து.


    (குறள் : 221)


    (குறிஎதிர்ப்பு = கைமாறுகருதுவது, நீரது = தன்மை,
    உடைத்து = உடையது)

    என்ற குறளில் குறிப்பிடுகிறார்.

    தன்னிடம் எந்தப் பொருளும் இல்லாதவரும், மீண்டும் உதவி
    செய்ய இயலாத நிலையில் உள்ளவர்களும் ஆகிய ஏழைகளுக்கு,
    அவர்களின் தேவைக்கு ஏற்ப உதவுவதுதான் ஈகை.
    மற்றவையெல்லாம் ஒருவரிடம், ஏதாவது ஒரு பலனை அல்லது
    உதவியை எதிர்பார்த்துச் செய்வதுதான் என்கிறார் வள்ளுவர்.
    எனவே, தேவைக்கு ஏற்ப உதவுங்கள்; அதுதான் ஈகை.
    இல்வாழ்வானும், பிறருக்கு என்ன தேவையோ, அதை உணர்ந்து
    உதவி செய்ய வேண்டும் என்று கூறுகிறார் வள்ளுவர்.

    தேவை இல்லாதவர்க்கு உதவுவது என்றால், வேறு ஏதோ ஓர்
    எதிர்பார்ப்புடன் செய்யப்படும் ஒன்று. எனவே, உண்மையிலே
    யார் வறுமையால் துன்பம் அடைகிறார்களோ, அவர்களுக்கு
    ஈவதே நல்லது என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். ஈதலும்
    இல்வாழ்வான் பண்புகளில் சிறப்புடைய ஒன்று. அதனால்
    சமுதாயத்தில் உள்ள இல்லாதவர் பயன் பெறுவார்கள்.


    4.7.2 ஈதல் இயலாமை

    இழந்த பணத்தை மீண்டும் ஈட்டலாம்; இழந்த பணியை மீண்டும்
    பெறலாம். இழந்த உறுப்பைக்கூட நவீன அறிவியலின் வாயிலாகச்
    செயற்கையாக அமைத்துக் கொள்ளலாம். ஆனால், இழந்த
    உயிரை மட்டும் மீண்டும் பெற முடியாது. ஒருவர் இறந்து
    விட்டார் என்றால் அதற்காக மிகவும் வருந்துவோம். எனவே
    இறத்தால் என்பது துன்பம் தரக் கூடிய ஒன்று. ஆனால்
    வள்ளுவர் இறத்தலும் இன்பம் தரும் என்கிறார.் ஏன்? எவ்வாறு?

    தன்னிடம் இருக்கும் செல்வத்தைத் தான் மட்டும் துய்க்காமல்,
    பிறரும் பயன்பெறும் வகையில், பிறருக்குக் கொடுத்து உதவுவர்.
    பிறருக்கு வழங்குவதில் இன்பம் கொள்வர். இத்தகையோர்,
    தனக்கும், பிறருக்கும் இன்பம் தரக் கூடிய ஈகையைச் செய்ய
    முடியாத சூழலில் மிகவும் வருந்துவர். பிறர், கேட்கும்பொழுது
    இல்லை என்று சொல்வதற்கு அஞ்சுபவர். அத்தகையோர்
    ஈவதற்கு மனம் இருந்தும் பிறருக்குக் கொடுத்து, உதவ இயலாத
    நிலைவரும் போது, அதை நினைத்து வருந்தி வாழ்வதை விட
    இறத்தல் இன்பம் தரக்கூடியது என்று கருதுவர். இதனையே
    வள்ளுவர்,


    சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
    ஈதல் இயையாக் கடை


    (குறள்: 230)


    (இன்னாதது = துன்பம் தருவது, இயையாக்கடை = இயலாதபொழுது)

    என்று குறிப்பிடுகிறார்.

    ஒருவனுக்கு இறத்தலைப் போலத்துன்பம் தருவது வேறொன்றும்
    இல்லை. ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத
    நிலை வந்தபோது அந்த இறப்பும் இனியதே ஆகும் என்பது
    இக்குறளின் கருத்து.

    எனவே வறியவன் ஒருவனுக்கு ஈவதே, செல்வம் பெற்றதின்
    உண்மையான பயன். இல்வாழ்வான் கடமைகளில் இது
    முதன்மையானது. இல்லறத்தில் வாழ்பவர் பிறர் பயன்படும்படி
    வாழ வேண்டும்.


    4.7.3 ஈதலின் சிறப்பு

    ஈதலின் பெருமையைச் சொன்ன வள்ளுவர், அந்த ஈதலினால்
    வரும் புகழை அடுத்துக் குறிப்பிடுகிறார்.

    யாரைப் புகழ்வோம்? யார் ஒருவரால் நாம் நன்மை
    அடைகிறோமோ, யார் ஒருவர் நமக்கு எந்தவித எதிர்பார்ப்பும்
    இல்லாமல் உதவி செய்கிறாரோ அவரைப் புகழ்வோம். பிறருக்கு
    நன்மை செய்தவர் புகழுக்கு உரியவர்.

    இந்த உலகத்தில், பிறர் புகழும் வகையில் வாழும் வாழ்க்கைதான்
    பயனுடையது. அந்தப் புகழைப் பெறுவதற்கு என்ன செய்ய
    வேண்டும்? வறியவர்களின் பசியைத் தீர்க்கும் பணியான
    ஈகையைச் செய்ய வேண்டும். அதுதான் புகழ் பெறுவதற்கு உரிய
    வழி என்கிறார் வள்ளுவர்.


    ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு


    (குறள்: 231)


    (இசைபட = புகழ்வருமாறு, ஊதியம் = பயன் அல்லது பேறு)

    என்பது குறள்.

    ஒன்றும் இல்லாத வறியவர்களுக்குத் தம்மால் இயன்ற அளவு
    உதவி செய்யவேண்டும். அதனால் புகழ் உண்டாகும். இத்தகைய
    புகழைத்தவிர, மக்களுக்கு இந்த உலகத்தில் பெறக்கூடிய,
    நிலையான பேறு வேறு எதுவும் இல்லை என்கிறார் வள்ளுவர்.

    இன்னொரு குறளில் (குறள் : 236) கூட ஒருவன் புகழ் தரும்
    செயலைச் செய்யாதவனாக இருந்தால், அவன் இந்த உலகத்தில்
    தோன்றாமல் இருப்பதே நல்லது என்கிறார் வள்ளுவர். ஒருவனது
    வாழ்க்கை     பயன் உடையதாக அமைய வேண்டும்.
    இல்வாழ்க்கையில் ஈடுபடுகின்றவன் இத்தகைய புகழை அடைய
    வேண்டும் என்பதே வள்ளுவரின் எண்ணம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:00:58(இந்திய நேரம்)