Primary tabs
-
பிறனுடைய மனைவியை விரும்பாமையே ‘பிறன் இல்விழையாமை‘
என்று வள்ளுவர் சுட்டுகிறார், ‘இல்‘ என்றால், இல்லத்திற்கு உரிய
இல்லாளை இங்குச் சுட்டுகிறது. விழைவு என்றால் விரும்புதல்
என்று பொருள். பிறன் மனைவியை விரும்பாதவர்களின் சிறப்பும்,
பிறன் மனைவியை விரும்புபவர்களின் இழிவும் பற்றி வள்ளுவர்
பல கருத்துகளை வழங்கியுள்ளார்.• முதல் உரிமைப்பொருள்
இல்வாழ்க்கையில் ஈடுபட்டவனது முதல்உரிமைப்பொருளாகக்
கருதப்பட்டது இல்வாழ்க்கைத் துணையாகிய அவனுடைய
மனைவி. இல்லாளாகிய மனைவியை மையமாகக் கொண்டே,
இல்வாழ்க்கை அமையும். எனவே, ஒருவனது மனைவி,
அவனோடு நிரந்தரமாக, ஈர்உயிர் ஓர் உடல்போல்
வாழ்வதையே இல்வாழ்க்கையின் பெரும் பயன் என்று பண்டைத்
தமிழ்ச் சமுதாயம் கருதியது. இதில் ஒரு சிறு மாறுதல்
ஏற்பட்டாலும், குடும்பம் சிதையும் என்று நம்பியது. அதனால்
‘ஒருவனுக்கு ஒருத்தி‘ என்ற மரபை வலியுறுத்தியது. எனவே,
பிறன் மனைவியை ஒருவன் விரும்புவதைப் பெரிய தவறாகத்
தமிழ்ச் சமுதாயம் எண்ணியது. அந்த எண்ணத்தையே ‘பிறன்
இல் விழையாமை‘ என்ற அதிகாரத்தில் வள்ளுவர் விளக்கிக் கூறி
உள்ளார்.இராமாயணத்தில் இடம்பெறும் இலங்கை அரசன் இராவணன்;
மிகச்சிறந்த இசை வல்லுநன், சிறந்த ஆட்சியாளன், சிறந்த வீரன்,
புகழ் மிகுந்த அரசன். ஆனால், இராமனின் மனைவியாகிய
சீதையை விரும்பினான் என்ற ஒரு குற்றத்திற்காக ஒரு பெரும்
பழிக்கு உரியவானகவே - பழியைச்சுமந்தவனாகவே இன்றும்
கருதப்படுகிறான்.பிறனில் விழைந்தான் என்ற ஒன்று பிற எல்லாச் சிறப்புகளையும்
மறைத்து விட்டது - இழக்கச் செய்துவிட்டது. எனவேதான்
வள்ளுவர், பெருமைகள் பல பெற்றிருப்பினும், ஆற்றல்கள் பல
அமைந்திருந்தாலும், பிறனில் விழைதல் என்ற ஒரு
குறையிருக்குமேயானால் ஒருவனது பெருமைகளும் ஆற்றலும்
ஒன்றுமில்லாமல் போய்விடும்; அவற்றால் ஒருவனுக்கு எந்தப்
பயனுமில்லை என்று குறிப்பிடுகிறார். இதனை,
(எனைத்துணையர் = எவ்வளவு பெருமை உடையவர்,
என்னாம் = (என்னஆகும்) என்ன பயன் உண்டாகும்,
தினைத்துணையும் = (தினை அளவு) சிறிது அளவும்,
தேரான் = ஆராயாதவன், புகல் = செல்லுதல்)என்ற குறளின் வாயிலாக வள்ளுவர் கூறுகிறார்.
எவ்வளவு பெருமை உடையவனாக இருந்தாலும், சிறிது அளவு
கூட ஆராய்ந்து பார்க்காமல் பிறன்மனைவியை விரும்புதல்
அல்லது பிறன் மனைவியிடம் செல்லுதல் ஆகிய தீய செயலைச்
செய்யும் ஒருவனது பெருமைகளால் எந்தவிதப் பயனும் இல்லை,
என்கிறார் வள்ளுவர். அதாவது, பிற எல்லாப் பெருமைகளும்,
பிறனில் விழைதல் எனும் ஒரு பிழையால் ஒன்றும் இல்லாமல்
ஆகிவிடுகின்றன.குறை உடையவன் மனிதன். எனவே, குறையே இல்லாத
மனிதனைப் பார்ப்பது அரிது. அதனால், ஒருவரிடமிருக்கும் நல்ல இயல்புகளையும், தீய இயல்புகளையும் ஒப்பிட்டுப்பார்த்து,
‘அவரிடம் பழிவாங்கும் தீய எண்ணம் இருந்தாலும், பொய்
சொல்லாத நல்ல இயல்பு உண்டு‘ என்று குறைகளைப்
பெரிதுபடுத்தாமல், நிறைகளையும் சொல்வது மரபு. ஆனால்
பிறனில் விழைதல் என்று குறையிருக்குமானால் பிற எந்த
நிறையும் நிறை ஆகா என்கிறார். எனவே, பிறனில் விழைதல்
என்பது எல்லாவற்றையும் அழிக்கும் தீய சக்தி என்கிறார்
வள்ளுவர்.பிறன் இல்விழைதலினால் வரும் தீமையைச் சொல்லி, அந்தத்
தீமையைச் செய்யாதே என்று கூறிய வள்ளுவர், பிறனில்
விழையாமையினால் வரும் சிறப்பினையும் எடுத்துரைக்கிறார்.பல நல்ல இயல்புகளைக் கொண்ட அறிவுடையவர்களைச்
சான்றோர்கள் என அழைக்கின்றோம். அத்தகைய
சான்றோர்களுக்குப் பிறனில் விழையாமை எனும் இயல்பு
இருக்குமானால் அது பிறவற்றைவிட மிகவும் சிறப்பான ஒன்று
என்கிறார் வள்ளுவர். இது,
(ஆன்ற = நிறைந்த)எனும் குறள்மூலம் கூறப்படுகிறது.
பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை,
சான்றோர்க்கு அறம் மட்டும் அல்ல; நிறைந்த ஒழுக்கமும்
ஆகும் என்பது இந்தக் குறளின் பொருள்.• விலங்கினங்களின் கற்பு
ஆறு அறிவு படைத்த மனிதனிடம் பிறன் இல் விழையாமையை
வற்புறுத்தலாம், எதிர்பார்க்கலாம். ஆனால் விலங்கு இனத்திடம்?
விலங்கு இனத்திடமும் பிறன் இல் விழையாமையைக் காட்டுகிறார்,
இராமாயணத்தைத் தமிழில் எழுதிய கம்பன் எனும் தமிழ்க்
கவிஞர். விலங்குகளிடையே, ஒன்றின் துணையை இன்னொன்று
விரும்புவது அல்லது அடைவது தவறு அல்ல. அது
அவற்றினிடம் இயல்பாக அமைந்து உள்ளது. ஆனால் அந்த
விலங்குகளிடையேயும் பிற விலங்கின் துணையைத் தன்
துணையாக்கிக் கொள்ளாத சிறப்பினைக் கம்பன், தன்
இராமாயணக் கதையில் காட்டுகிறார்.குரங்கு இனத்தைச் சார்ந்தவன் வாலி. குரங்கு இனங்களினுடைய
ஒரு நாட்டின் தலைவன். வாலியின் தம்பி சுக்ரீவன். அண்ணன்
ஆகிய வாலியின் கொடுமைகள் தாங்க முடியாமல் சுக்ரீவன்,
இராமனிடம் சரண் அடைகிறான்.இராமன் வாலியைக் கொன்று, வாலி ஆட்சி செய்த நாட்டையும்
சுக்ரீவனுக்குக் கொடுக்கிறான். நாட்டின் ஆட்சியில் அமர்ந்த
சுக்ரீவன், அண்ணன் மனைவி ஆகிய தாரையைத் தன் மனைவி
ஆக்கிக் கொள்கிறான். வட மொழியில், வால்மீகியால்
எழுதப்பட்ட இராமாயணத்தில் இவ்வாறு, அண்ணன்
மனைவியைத் தம்பி சுக்ரீவன் அபகரித்துக் கொண்டதாகக் கதை
அமைந்து உள்ளது.• கம்பனின் கைவண்ணம்
ஆனால், கதையையே மாற்றுகிறார் கம்பர். எவ்வாறு மாற்றினார்?வாலி இறந்த பின், அவன் நாட்டைக் கைப்பற்றிய சுக்ரீவன்,
வாலியின் மனைவியாகிய தாரையைத் தன் மனைவி ஆக்கிக்
கொள்ளவில்லை, அவள் விதவையாக, அந்தப்புரத்தில் தனியாக
வாழ்ந்து வருவதாகக் கம்பன் காட்டுகிறார். ஏன் அவ்வாறு
காட்டுகிறார்?விலங்கு இனங்களின் இடையேயும் பிறன் இல் விழையாமையை
எடுத்துக்காட்டவே கம்பன் இவ்வாறு மாற்றி அமைத்துள்ளார்.
மூல நூலாகிய வடமொழி இராமாயணத்தில் சொல்லாத ஒரு
கருத்தைக் கம்பன் தன் படைப்பில் சொல்லக் காரணம் என்ன?பிறன் இல் விழையாமைக்குக் கம்பன் கொடுத்த சிறப்பு. பிறன்
இல் விழையாமையை ஓர் அறமாக, பண்பாகக் கொண்டிருந்த
தமிழ்ச் சமுதாயத்தின் உயர்வு அத்தகைய அறத்தைப் பின்பற்றி
வாழ்தல், சிறந்த பண்பாடாகக் கருதப்பட்டது. தமிழர்களின்
அந்தப் பண்பாட்டின் அடிப்படையில்தான் இங்குச் சுக்ரீவன்
பிறனில் நோக்காப் பேராண்மை உடையவனாகக் கம்பனால்
காட்டப்படுகிறான்.பிறன் மனைவியை நோக்காத பேராண்மை அறச் செயல்மட்டுமா?
உயர்ந்த ஒழுக்கமும் ஆகும் என்கிறார் வள்ளுவர். பிறனில்
விழையாமையின் சிறப்பையெல்லாம் இவ்வாறு வள்ளுவர்
கூறுவதின் நோக்கம் என்ன? எந்தச் சூழலிலும் பிறன்
மனைவியை நோக்காதீர்கள், விரும்பாதீர்கள் என்று
வலியுறுத்துவதேயாகும்.