Primary tabs
-
மனத்து அளவில் துறந்து, பற்று இல்லாமல் வாழ்வது, துறவு என
வள்ளுவர் கூறுகிறார். சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும்
அவருக்கு நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை.
புறத்தோற்றத்தில் இருப்பதை விட, அகத்துள், மனத்துள் இருக்க வேண்டியதையே எல்லா இடங்களிலும் வலியுறுத்துகிறார். துறவு
என்ற தலைப்பிலும் அதையே கூறுகிறார்.பசி இரண்டு வகைப்படும். ஒன்று உடல் பசி. இன்னொன்று
உள்ளப்பசி. அதைப்போல, பற்றும், உடல் பசியின் மீதும்,
உள்ளப் பசியின் மீதும் ஏற்படும். விலங்கினங்களுக்கு உடல்
பசியின் மீதுதான் பற்று உண்டு.அந்தப் பற்று உணவுப் பொருள்
மீதுள்ள பற்றாக அமைகிறது. ஆனால், மனிதனுக்கு உடல்,
உள்ளம் ஆகிய இரண்டு பசியின் மீதும் பற்று உண்டு.வாழ்க்கைக்குப் பொருள் முக்கியம். ‘பொருள் இல்லார்க்கு இந்த
உலகம் இல்லை’ என்றே இன்னொரு இடத்தில் வள்ளுவர்
குறிப்பிடுவார். எனவே வாழ்க்கையை நடத்திச் செல்வதற்குப்
பணம் தேவை. பணத்தை விரும்பிச் சேகரிக்க வேண்டும். ஆனால்
அதன் மீது பற்று வைக்கக் கூடாது என்பதே வள்ளுவர் கருத்து.குடும்பத்தை நடத்திச் செல்வதற்காகப் பொருளை ஈட்டவேண்டும்.
ஈட்டிய பொருள், பிறருக்கு உதவுவதற்கே. பொருளைப்
பிறருக்கும் உதவுமாறு பயன்படுத்தாவிட்டால், ஒருவன் ஈட்டிய
பொருளால் எந்த விதப் பயனும் இல்லை என்கிறார் வள்ளுவர்.ஒவ்வொரு மனிதனும், தன் குடும்பத்தின் நலனிற்காகவும், நாட்டின்
நலனிற்காகவும் செய்ய வேண்டிய கடமைகள் பல உண்டு.
அவற்றில் ஒன்று தான், பொருள் ஈட்டிக் குடும்பத்தைப்
பாதுகாக்க வேண்டும் என்பது. எனவே, பொருள் ஈட்டுவது
அவனது கடமை. பொருள் ஈட்டுவது தன் கடமையை நிறைவேற்றுவதற்குத்தான் என்று எண்ண வேண்டும்.
கடமைக்காகப் பொருள் ஈட்ட வேண்டும் என்று எண்ணாமல், தனது
சுகபோகங்களுக்கு என்று எண்ணுபவனே, பொருள் மீது பற்றுக்
கொண்டு, அதை எவ்வழியினாலும் ஈட்டவேண்டும், மிகுதிப்படுத்த
வேண்டும் என்று எண்ணுவான். அவ்வாறு எண்ணிப் பொருளைச் சேகரிப்பவனுக்கு அதனால் தீமை வரும் என்கிறார் வள்ளுவர்.
பணத்தின் மீது கொண்ட பற்றினால் ஒருவன் தீய வழியில்,
பணத்தை ஈட்ட முயலுவான்; குற்றவாளி ஆவான்; அதன்
பயனாக வரும் பிற விளைவுகளை எதிர்கொள்வான்.உடலைப் பாதுகாப்பதற்குத் தேவையான உணவை நாடுவதும்
இத்தகையதே. ஒரு குறிப்பிட்ட உணவின் மீதுள்ள பற்றினால்,
விருப்பத்தினால், அதை அதிக அளவிலே உண்டால், உடலுக்கு
நோய்வரும். உடல் துன்பம் அடையும். இதனையே வள்ளுவரும்,
எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அந்தப் பொருள் மீது, எந்த
அளவுக்குப் பற்று இல்லாமல் இருக்கிறோமோ, அந்த அளவுக்கு
அவற்றினால் வரும் துன்பங்கள் குறையும் அல்லது துன்பங்களே
வராது என்று குறிப்பிடுகிறார். இது தான் வள்ளுவர் துறவுக்குக்
கூறும் இலக்கணம்.
(யாதனின், யாதனின் = எவ் எவற்றிலிருந்து; நோதல் = துன்புறுதல்;
அதனின், அதனின் = அவ் அவற்றிலிருந்து)நீங்கிய பொருட்கள் ஒன்று ஒன்றாகச் சுட்டி, அவை
ஒவ்வொன்றும் கொடுக்கக்கூடிய துன்பத்தினின்றும் விடுதல்
பெற்றமையைக் குறிக்கத்தான் - ‘யாதனின், யாதனின்’, ‘அதனின்
அதனின்’ என்று இரட்டித்துச் சொல்லப் பெற்றுள்ளது.பதவியாக இருந்தாலும், பணமாக இருந்தாலும், சுகங்கள்
(Comforts/ pleasure) ஆக இருந்தாலும், அவற்றின் மீது பற்றுக் கொள்ளாதீர். பதவியின் மீது பற்றுக் கொண்டால், அந்தப்
பதவியே உங்களுக்குத் தீமையாக வரும்; பணத்தின் மீது
பற்றுக்கொண்டு அதைத் தனக்கு எனப் பெருக்கிக் கொள்ள
விழைந்தால் அப்பணமே உங்களுக்குப் பகையாக மாறும்;
சுகங்களை விரும்பி நாடிச் சென்றால், அச்சுகங்களே உங்களுக்கு
நோயாக வரும் என்று எச்சரிக்கிறார். எனவே தான் யாதனின்
யாதனின் நீங்கியான் அதனின் அதனின் நோதல் இலன் என்றார்.
அது சரி. ‘நீங்குதல்’ என்பதன் பொருள் என்ன? பணம்
வேண்டாம்; பதவி வேண்டாம்; இவ்வளவு சுகங்கள்
வேண்டாம் - என்று எல்லாவற்றையும் மறுப்பதா? அவற்றை
எல்லாம் மறுப்பது தான் அறநெறி என்றால் அவ் அறவழியால்
இவ்வுலக வாழ்க்கைக்கு என்ன பயன்?வாழ்க்கை வாழ்வதற்கே. உலகியல்
இன்பங்கள் யாவும் துய்ப்பதற்கே ஆம்.
எனவே துறவு என்பது காவி உடுத்தலோ,
காடு தேடிச் செல்வதோ அன்று. துறவு
விரும்பும் ஒருவன் செல்வம், வாய்ப்பு,
வசதி ஆகியவை தனக்கு
இருக்கும் போதே, அவை
பற்றிய மனப்பற்றை நீக்கி உலகிடை
வாழவேண்டும். தாமரை இலைத்
தண்ணீராய் வாழும் துறவு இது.
இவ்வாறு மனப்பற்று நீங்கியபின
ஒருவன இவ்வுலக வாழ்வில் அடையக்கூடிய நன்மைகளும்
இன்பங்களும் பலவாகும்.
(வேண்டின் = (துறவை) விரும்பினால்;
உண்டாகத்துறக்க = செல்வம், வாய்ப்பு, வசதிகள் அனைத்தும்
இருக்கும்போதே அவற்றின் மீது பற்றின்றித் துய்க்க;
துறந்த பின் = அவ்வாறு பற்றுதல் கொள்ளாமல் அனுபவிக்கத்
தெரிந்து கொண்ட பின்னர்; ஈண்டு = இவ்வுலக வாழ்க்கையில்;
இயற்பால = உங்கள் மனதை ஈர்க்கக்கூடிய, உங்களுக்கு
மகிழ்வைத் தரக்கூடிய)
இதுவே வள்ளுவரின் துறவுக் கோட்பாடு ஆகும்.புலன்களின் மேல் ஆளுமை செலுத்துங்கள்; புலன்களின்
வலையில் சிக்க வேண்டாம். இவ்வுலக வாழ்க்கையை
முழுமையாகத் துய்க்க விரும்பினால் துறவினை
மேற்கொள்ளுங்கள்; துயரங்களுக்கு ஆட்படாமல் வாழ்க்கை
இன்பத்தை அனுபவியுங்கள்.
புலன்களை வெல்லுங்கள் (அடல் = வெல்லுதல்); வெல்லுதல்
என்பதன் பொருள் கொல்லுதல் அன்று. புலன்களை அவற்றின்
போக்கில் விடாமல், அவற்றின் தேவைகளை உங்கள்
கட்டுப்பாட்டிற்கு உட்படுத்திக் கொள்ளுங்கள். இன்ப நிகழ்வின்
உந்துதலை நாடாதவருக்கு, துன்ப நிகழ்வுகள் உறுத்துதல்
இல்லை.பற்றுகள் என்றால், பதவிப் பற்று, பணப்பற்று
முதலியவைகள்தானா? இல்லை, இதற்கு மேலும் ஒரு பற்று
இருக்கிறது. அது ஒருவன், தன்மீது கொண்டுள்ள பற்று. இந்தப்
பற்றுத் தானே, பிற பற்றுகளையும் உருவாக்குகிறது. எனவே,
ஒருவன் தன் மீது கொண்ட பற்றாகிய ‘யான்’ ‘எனது’ என்பதை
அழிக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.யான், எனது என்ற இயல்பு உடையவர்களை ‘ஆணவம்’
உடையவன் என்பார்கள். இந்து சமயத்தில், ஆணவம், கன்மம்,
மாயை என்ற மூன்றும் மும்மலங்கள் என்று அழைக்கப்படுன்றன.
இவற்றை அழித்தால் தான், ஒருவன் இறைவனை அடைய
முடியும். வள்ளுவர் ஆணவத்தைச் ‘செருக்கு’ என்று
குறிப்பிடுகிறார்.
ஆங்கிலக் கவிஞன் மில்டன் (John Milton) எழுதியது
சுவர்க்க நீக்கம் (Paradise Lost). இதில், இயேசுவானவருக்கு
எதிராக இருப்பவன் சாத்தான். கடைசிவரையிலும், நான், தான்,
என்கின்ற ஆணவத்தை அவன் விடவில்லை. அவனுடைய
ஆணவத்தின் பயனாகச் சுவர்க்கத்தை விடுத்து, நரகத்திற்குச்
செல்ல வேண்டியதாயிற்று. அப்பொழுதும், ‘இயேசுவினிடத்தில்
அடிமையாக வாழ்வதை விட, நரகத்தில், அரசனாக
இருப்பதையே விரும்புகிறேன். இயேசுவுக்கு அடிபணியமாட்டேன்’
என்று ஆணவமாக இருந்தான்.ஆணவம் ஒருவனை அழித்துவிடும்; அதனால், யான், எனது
எனும் செருக்கை விட்டுவிடுங்கள். (துறந்துவிடுங்கள்). அவ்வாறு
செய்வீர்கள் ஆனால் வானவர்களாகிய தேவர்களுக்கும்
மலோன வீடுபேறு உங்களுக்குக் கிடைக்கும் என்கிறார்
வள்ளுவர்.பற்று வைக்கத்தக்க பொருள் ஒன்றுகூட இல்லை என்னும்
நிலையே துறவில் முழுமை தரும். அவ்வாறு இன்றிப் பற்றி நிற்கக் கூடியதாக ஏதேனும் ஒரு உடைமை கருதப்படுமாயின் அதன் வழி
பிற பற்றுகள் தொடர ஏதுவாகும்; மீண்டும் புலன்களின்
மயக்கத்திற்கு உட்படக் காரணமாகும்.
(நோன்பிற்கு = துறவு என்ற தவத்திற்கு; மயல் = மயக்கம்)எனவே, யான், எனது எனத் தன் உடலையும்,
உடைமைகளையும் கருதி அவற்றின் மீது பற்று வைக்கும்
மனச்செருக்கை முற்றாக அகற்றுவீர்களாக, எனக் கூறுகிறார்
வள்ளுவர்.