தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 5.4-துறவுக்குத் திறவுகோல் தவம்

  • 5:4 துறவுக்குத் திறவுகோல் தவம்

    E

    பற்றுகளை விடவும், பற்று அற்றவனைப் பின்பற்றவும்
    மனப்பக்குவம் வேண்டும். அந்த மனப்பக்குவத்தை எவ்வாறு
    அடைவது? அதற்கும் வழி சொல்லுகிறார் வள்ளுவர். தவம்
    செய்ய வேண்டும் என்கிறார்.


    5:4:1 தவம் எனப்படுவது யாது?

    பொதுவாகத் தமிழில், ‘தவம்’ என்ற சொல்
    நோன்பு, ஒறுத்தல், பொறுத்தல், பேறு என
    இடத்திற்குத் தக்கவாறு பல பொருள்களை
    வழங்கும். சமயவாதிகள் கூறும் ‘தவம்’
    உண்ணா நோன்பு; வெயில், மழை, பனி
    ஆகியவற்றைத் தாங்குதல்; நீரில் மூழ்குதல்,
    நெருப்பில் நிற்றல், ஆகியவை. ஆனால்
    வள்ளுவர்,     ‘தவம்’     என்பதற்கு

    வேறுவிதமான விளக்கம் கொடுக்கிறார்.

    ‘உலகில் முயற்சியால் வரும் துன்பங்களைப் பொறுத்தலும், பிற
    உயிர்களுக்குத் துன்பம் செய்யாமையுமே தவம்’ என்கிறார்
    வள்ளுவர். சமயவாதிகள் ‘தவம்’ என்பதற்குக் கொடுக்கும்
    விளக்கத்திற்கும், வள்ளுவர் கூறுவதற்கும் எவ்வளவு வேறுபாடு
    பாருங்கள்.

    சமயவாதிகள் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
    வள்ளுவர், உணர்வுகளுக்கு - மன உணர்வுகளுக்கு -
    முக்கியத்துவம் கொடுக்கிறார். எனவே, துன்பங்களைப்
    பொறுத்தலையும், பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமையுமே
    ‘தவத்தின்’ வெளிப்பாடு என்று குறிப்பிடுகிறார். தவத்திற்கு
    வள்ளுவர் கூறும் இலக்கணம்.


    உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை

    அற்றே தவத்திற்கு உரு.

    (குறள் எண்: 261)


    (உறுகண் = தீங்கு) - என்பதாகும்.

    ‘உரு’ என்றால் ‘வடிவம்’ என்று பொருள். தவத்தின் வடிவமே
    இது தான் என்கிறார் வள்ளுவர். சமயவாதிகள் புற வடிவத்திற்கு
    முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வள்ளுவர் அக வடிவத்திற்கு
    (அகம்: உள்ளம்) முக்கியத்துவம் கொடுக்கிறார். வள்ளுவர்
    காலத்தில் ‘தவம்’, ‘வேள்வி’ என்ற பெயரில் தவசிகள்
    உயிர்களைப் பலி இடும் வழக்கம் மேற்கொண்டு இருந்தனர். தம்
    துயரைக் களைய, பிற உயிர்களைக் கொலை செய்யும் இக்கொடிய
    வழக்கத்தை எதிர்த்தார் வள்ளுவர். தம் சமகாலச் சமூகக் கொடுமைகளுக்கு     எதிராக     வள்ளுவர்     எழுப்பிய
    புரட்சிக்குரல்களுள் இக்குறளும் ஒன்றாகும். செயல் வீரராய்
    நீங்கள் காரியங்களை மேற்கொள்ளும் பொழுதுத் துன்பங்களும்
    கஷ்டங்களும் நேர்வது இயல்பு. அவற்றை ஏற்றுக் கொள்ளப்
    பழகுங்கள். அது தான் நோன்பு. அது தான் தவம். இப்பக்குவம்
    அடைந்தவர்க்கு வாழ்க்கையில் துன்பம் என்பது அறவே
    இல்லாது போகும்.


    5:4:2 தவத்தின் அடிப்படை - வள்ளுவரும்
    சமயக் கருத்துக்களும்

    தனக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளவும், பிற
    உயிருக்குத் துன்பம் செய்யாத இரக்க உணர்வு அமையவும்,
    மனப்பக்குவம் வேண்டும். இந்த மனப்பக்குவத்தைத் தருவது
    தவம். அதுவே தவத்தின் அடிப்படை. உலகிலுள்ள எல்லா
    மதங்களும், சகிப்புத்தன்மை (Tolerance), மனித நேயம்
    (humanitarianism) என்ற இரண்டையும் வலியுறுத்துகின்றன.
    பொறை என்பதற்கு ஒரு கன்னத்தில்     அடித்தால்
    மறுகன்னத்தையும் காட்டுங்கள்’ என்பதுவும்,
    ‘மனித நேயம்’
    என்பதற்கு உன்னைப் போல் பிறரை நேசி (Love thy
    neighbour) என்பதுவும் கிறித்துவ மதம் கூறும் அறக்கருத்துகள்.

    ஏனைய மதங்களும் இவ்வாறே கூறுகின்றன.
    மகாபாரதத்தில்
    வரும் ஒரு நிகழ்ச்சியைக்
    காணுங்கள் கர்ணனின் மடியில் குரு
    தூங்கிக்கொண்டிருக்கிறார். வண்டு ஒன்று
    வந்து அவர்களை சுற்ற ஆரம்பிக்கிறது.
    வண்டால் குருவின் தூக்கம் கலைந்து
    விடுமோ என்று அஞ்சுகிறான் கர்ணன்.
    வண்டைத் துரத்திப்பார்க்கிறான்; வண்டு

    ஓடவில்லை. மாறாக, வண்டு கர்ணன் தொடையைத் துளைக்க
    ஆரம்பிக்கிறது. குருவின் தூக்கம் கலைந்துவிடக்கூடாது
    என்பதற்காகக் கர்ணன், வண்டால் ஏற்பட்ட துன்பத்தைச்
    சகித்துக்கொள்கிறான். ‘உற்றநோய் நோன்றல்’ என்பதற்கு
    கர்ணன் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. ஒருவன் தன் கடமையைச்
    செய்யும் பொழுது நேரும் துன்பங்களை சகித்துக் கொள்வது
    தான் தவம். இத்தகைய தவத்தை மேற்கொள்ள, புற வேஷங்கள்
    தேவை இல்லை என்கிறார் வள்ளுவர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:03:02(இந்திய நேரம்)