தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 5.7-இல்லறத்துறவு

  • 5:7 இல்லறத்துறவு
    E

    எந்த ஒரு பற்றும் இல்லாமல், எல்லாவற்றையும் துறந்து காடு
    நோக்கிச் செல்வதை வள்ளுவர், ‘துறவு’ என்ற தலைப்பில்
    கூறவில்லை. எதிலும் பற்று இல்லாமல், ஏற்கனவே பற்று
    இருந்தாலும் அந்தப் பற்று உடைய பொருளையும் துறக்கும்
    மனப்பக்குவம் பெற்று வாழும் இல்வாழ்வானுக்கு உரியனவாகவே,
    கருத்துகளைக் குறிப்பிடுகிறார். அதற்கு வள்ளுவரின் இன்னொரு
    குறளின் கருத்தையும் சான்றாகக் காட்டலாம். இல்வாழ்க்கை
    என்ற அதிகாரத்தில், அற வழிகளில் இல்வாழ்க்கையை நடத்திச்
    செல்கின்ற ஒருவன், வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன
    இருக்கிறது என்று கேட்கிறார். வீட்டை விட்டுக் காடு செல்லும்
    துறவறத்தால் கூடுதல் பயன் ஒன்றும் இல்லை என்பதே
    வள்ளுவர் கருத்து.


    அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
    போஓய்ப் பெறுவது எவன்.
        



    (குறள் எண்: 46)


    இவற்றிலிருந்து என்ன தெரிகிறது? வள்ளுவரின் சிந்தனைச்
    செல்வம் எத்தகைய கருத்துக் களஞ்சியமாகத் திகழ்கிறது என்பது
    தெரியும் அவர் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் பலவேறு
    வகையான விளக்கங்களுக்கும் (Inerpretations), பலவகைப்பட்ட
    மக்களுக்கும் பொருந்தும். எனவே துறவறத்தில் சொல்லப்படும்
    கருத்துகள்,     இல்வாழ்வானுக்கும் பொருந்தும் மாண்பே
    அமைந்துள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:03:14(இந்திய நேரம்)