தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 5.6-சுடச் சுடரும் பொன்

  • 5:6 சுடச் சுடரும் பொன்

    E

    தவறு செய்வது மனிதனின் இயல்பு (To err is human) என்று
    சொல்வார்கள். தவறு செய்யாமலே, மனிதனுக்குத் துன்பம்
    வருவதும் இயல்பு. துன்பத்தைக் கண்டு அஞ்சுபவர்கள் உண்டு.
    அதைக் கண்டு அஞ்சாமல் தாங்கிக் கொள்ளுகின்ற, பொறுத்துக்
    கொள்ளுகின்ற இயல்பு எல்லோருக்கும் அமையாது. மனத்தைத்
    திடப்படுத்திக்     கொள்கின்றவர்களுக்குகே,     துன்பத்தைப்
    பொறுத்துக் கொள்ளுகின்ற இயல்பு அமையும். அதைத் தான்
    தவத்தின் இலக்கணமாக வள்ளுவர் குறிப்பிட்டார். அந்தத்
    துன்பத்தை எவ்வளவு நாள் பொறுத்துக் கொள்வது?
    துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள, பொறுத்துக் கொள்ளத்தான்,
    ஒருவரின் சிறப்பு மிகுந்துவரும்; தவத்தின் பெருமை மேலும்
    மேலும் உயர்ந்து கொண்டே செல்லும் என்கிறார். அதற்கு ஒரு
    சிறந்த எடுத்துக்காட்டையும் உவமையாகச் சொல்லுகிறார்.


    தங்கத்தைச் சுத்தம் செய்பவர்கள், அதைத்
    தீயில் சுட்டு, உருக்குவார்கள். ஒரு
    தடவைக்குப் பல தடவை உருக்குவார்கள்.
    மீண்டும், மீண்டும் தீயினால் சுட்டுச் சுட்டு,
    உருக்க உருக்க அதிலிருக்கும் கழிவுப்
    பொருள்கள் நீங்கி, சுத்தமான தங்கம்
    கிடைக்கும். தங்கம் மேலும், மேலும் ஒளி


    வீசும். இந்த அறிவியல் உண்மையை, தனக்கு வரும்
    துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுகின்ற தவ ஞானிகளுக்கு
    உவமையாகச் சொல்லுகிறார்.


    சுடச் சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம்
    சுடச் சுட நோக்கிற் பவர்க்கு.



    (குறள் எண்: 267)


    (நோக்கற்பவர் = தவம்செய்பவர்)

    வள்ளுவரின் இந்தக் கருத்து, துறவிகளுக்கு மட்டுந்தான்
    பொருந்துமா? இல்வாழ்வானுக்குப் பொருந்தாதா? பொருந்தும்.
    குடும்பத்தில் வரும் துன்பங்களை எல்லாம், தான் ஒருவனே
    தாங்கிக் கொண்டு, பொறுமையோடு வாழ்ந்து, குடும்பத்தில் உள்ள
    அனைவரிடமும் அன்பு காட்டி, வாழ்பவர்களும் இருக்கிறார்களே!
    அவர்கள் வள்ளுவர் சொல்லும் இந்த இலக்கணத்திற்குள்
    அடங்கமாட்டார்களா? அடங்குவார்கள். அவர்களை நாம்
    ‘தியாகச் சுடர்’ என்று குறிப்பிடுகிறோம். பிற எல்லாப் பற்றையும்
    துறந்து, குடும்பத்தை மேம்பாடு அடையச் செய்வதையும், சிக்கல்
    இல்லாது நடத்திச் செல்வதையும் குறிக்கோளாகக் கொண்டு
    வாழும் குடும்பத் தலைவர்களும் பொன்னைப் போல் புடம்
    போடப்பட்டவர்கள் தானே?

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:03:10(இந்திய நேரம்)