தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 5.3-மயல் தீர்க்கும் மருந்து

  • 5:3 மயல் தீர்க்கும் மருந்து

    E

    ‘யான்’ என்ற எண்ணமும் ‘எனது’ என்று குவியும் உடைமைகளும்
    ஒன்றை ஒன்று தொற்றி வருவன. அவை தாம் சார்ந்த மனிதனை
    ஆணவ மயக்கத்தில் தள்ளுவன. இந்த மயக்கத்தைத் தீர்க்க
    மருந்து உண்டா?


    5:3:1 பற்றை விடமுடியுமா?

    பற்றுகளை விடுவது கடினம். ஒரு பற்றை விட்டால், இன்னொரு
    பற்று வந்து சேர்வது இயல்பு. புகை பிடிப்பதனால் வரும்
    தீமையை உணர்ந்தவன், இதை நிறுத்திவிட்டு இன்னொரு தீய பழக்கத்தைப் பற்றிக் கொள்கிறான். கேட்டால், ‘அதை மறப்பதற்கு
    இது’ என்பான். இப்படி, ஒன்றை விட்டு
    இன்னொன்றிற்குத்
    தாவிக்கொண்டிருப்பான். இது மனித இயல்பு. எனவே பற்றை
    எளிதில் விட இயலாது.

    இவ்வாறு மனிதனால் விட இயலாத பற்றை, ஒருவன் முழுமையாக
    விட முடியும். அவன்தான் கடவுள். அவன் எல்லாம் கடந்தவன்.
    எனவே எல்லாம் கடந்து உள்ள ஒருவனைக் ‘கடவுள்’ என்று
    தமிழர்கள் அழைத்து மகிழ்கின்றனர். தமிழில் ‘கடவுள்’
    என்பதற்குப் பற்று பாசங்களைக் ‘கடந்தவன்’ என்று பொருள்
    கூறுவார்கள். அந்தக் கடவுளை வள்ளுவர் ‘பற்று அற்றவன்’
    என்று அழைக்கிறார். பற்று அற்றவன்தான், எல்லாவற்றையும
    கடக்க முடியும்.


    5:3:2 நோய்க்கு நோயே மருந்தாகுமா!

    எதன் மீதும் பற்றுக் கொள்ளவேண்டாம் என்று கூறிய
    வள்ளுவர், ஒருவர் மீது பற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறார். இது
    முன்னுக்குப் பின் முரண்தானே? இது என்ன நியாயம் என்று
    கேட்கலாம். ஆனால் யாரைப் பற்றச் சொல்கிறார் என்பதை
    அறிந்தால், அதை முரண் என்று கருதமாட்டீர்கள். யாரைப் பற்றச்
    சொல்கிறார்? பற்று அற்றவனை. பற்று அற்றவன் யார்? கடவுள்.
    அவரை ஏன் பற்ற வேண்டும்?

    மனிதனுக்கு இல்லாத     தன்மை அவரிடம் இருக்கிறது.
    மனிதனால், பற்றை விட முடியாது, முன்பு கூறியது போல்,
    ஒன்றை விட்டால், இன்னொன்றைப் பற்றுவான். கடவுள்
    ஒருவரால் தான் பற்றை விட முடியும். எனவே, பற்று
    அற்றவனைப் பற்றுங்கள். அந்தப்பற்று பிற பற்றை விடுவதற்குத்
    துணை செய்யும் என்று கூறுகிறார் வள்ளுவர்.


    பற்றுக பற்று அற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு.



    (குறள் எண்: 350)


    மனிதனுக்கு இயல்பாக     இருக்கும்     பற்றையும் அதை
    விடுவதற்குரிய வழியையும் கூறுகிறார். அந்த வழியை
    இறைவனை அடையும் மார்க்கமாகக் கூறுகிறார். இதில், கடவுள்
    என்றால் யார் என்பதற்கும் விளக்கம் கொடுக்கிறார். துறவு
    என்றால் என்ன என்பதற்கும் விளக்கம் கொடுக்கிறார். பற்று அற்ற
    ஒருவன் இறைவன் என்றும், பிற பற்றுக்களைத் துறந்து, பற்று
    அற்றவனாகிய கடவுளைப் பற்றுவது துறவு என்றும் எவ்வளவு
    எளிமையாக விளக்கம் கொடுக்கிறார் பார்த்தீர்களா?


    5:3:3 மனிதனும் தெய்வமாகலாம்!

    கடவுளைப் பற்றிப் பெரிய பெரிய வேதாந்தங்களையும்,
    தத்துவங்களையும் கூறுவார்கள். ஆனால் வள்ளுவர் ‘பற்றற்றான்’
    என்று ஒரே ஒரு சொல்லில் கடவுளைப் பற்றிய தத்துவங்களை
    எல்லாம் அடக்கியுள்ளார். இறைவனைப் பற்றி இதை விட
    எளிமையான விளக்கம் கொடுக்க முடியுமா? எளிமையாக
    மட்டுமா இருக்கிறது? பொருத்தமாகவும் இருக்கிறது அல்லவா?

    இக்கருத்து கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமா
    பொருந்தும்? இல்லை. கடவுளே இல்லை என்று கூறும் நாத்திக
    வாதிகளுக்கும் பொருந்தும். எப்படி?

    கடவுளை நம்பாதவர்கள், சில சிந்தனையாளர்கள் மீது அல்லது
    தலைவர்கள் மீது பற்றுக் கொள்வார்கள். அச்சிந்தனையாளர்கள்
    அல்லது தலைவர்களின் ஈர்ப்பு அவர்களிடம் ஒரு தீவிரப்
    பற்றுதலை உண்டாக்கி இருக்கும். அவர்களைப் பார்த்து
    வள்ளுவர் கூறுகிறார். நீங்கள் யாரைப் பின்பற்றினாலும்
    பரவாயில்லை; அவர்களுக்கும் சில தகுதிகள் வேண்டும். அந்தத்
    தகுதிகள் பதவி, பணம், சுகம், புகழ் முதலியன மீது பற்று
    இல்லாமை ஆகும். இவ்வாறு உலகபிரகாரமான இப்பற்றுக்களைத்
    துறந்த பற்று அற்றவர்களையே பற்றுங்கள். அவர்கள்
    கொள்கைகளைப் பின்பற்றுங்கள் என்று கூறுகிறார். அத்தகைய
    மனிதன் இறைவனுக்குச் சமமானவன். எனவே, இன்னொரு
    இடத்தில் சிறந்த மனிதர், ‘வானுறையும் தெய்வத்துள்
    வைக்கப்படும்’ என்று குறிப்பிடுவார். இவை, எதைக்
    காட்டுகின்றன? வள்ளுவர வாழ்ந்த சமுதாயத்தின் பண்பட்ட
    உணர்வுகளையும், சிந்தனையின் முதிர்ச்சியையும் காட்டுகின்றன.
    இச்சிந்தனைகள் தமிழர் பண்பாட்டின் கருவூலங்கள்.

    தன் மதிப்பீட்டு: வினாக்கள் - I

    1. வள்ளுவர் ‘துறவு’ என்பதற்குக் கூறும் இலக்கணம்
      யாது?

    1. வள்ளுவர் துறவு பற்றிக் கூறும் கருத்துகளுக்கும்,
      பிறர் கூறும் கருத்துகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

    1. எத்தகைய பற்றை விட வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்?

    1. யாரைப் பற்ற வேண்டும் என்று வள்ளுவர்
      கூறுகிறார்? அதற்கு அவர் கூறும் காரணங்கள்
      யாவை?

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:02:57(இந்திய நேரம்)