தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 5.5-போலித் துறவிகள்

  • 5.5 போலித் துறவிகள்

    E

    அக்காலத்தில் தவம் செய்யும் துறவிகளில்
    சிலர், தலைமயிரை நீளமாக வளர்த்துச்
    சடையாகப்     பின்னி,     முடியாகக்
    கொண்டிருந்தனர். சிலர் தலை மயிரைப்
    போக்கி மொட்டையாக இருந்தனர்.
    இத்தகைய புற வேஷம் கொண்டு வாழ்ந்த
    துறவிகளுக்கு,     மக்கள்     மத்தியில்
    செல்வாக்கும் இருந்தது. மன்னனும்,

    வலிமையும் செல்வாக்கும் பெற்றிருந்த அவர்களைக் கண்டு
    அஞ்சினான். பல பேரரசுகளின் வீழ்ச்சிக்குத் துறவிகளே
    காரணமாக இருந்தனர். வள்ளுவர் இத்தகையப் போலித்
    துறவறத்தை, போலித் துறவிகளைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்
    என்று எச்சரிக்கை செய்கிறார்.

    உலகில் உள்ளோர், பழித்துச் சொல்லக் கூடிய தவறுகளைச்
    செய்யாமல் இருந்தாலே போதும். அதுவே தவம் செய்யும்
    துறவிகளும், உயர்ந்தோரும் செய்யும் செயல். இதை விட்டு
    விட்டு, வீணாகச் சடை வளர்த்தலும், மொட்டை அடித்தலும்
    ஆகிய புறச் சடங்குகள் எதற்கு? என்று வினவுகிறார் வள்ளுவர்.


    மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்தது ஒழித்து விடின்.



    (குறள் எண்: 280)


    (மழித்தல் = மொட்டையடித்தல்; நீட்டல் = முடியை நீளமாக
    வளர்ப்பது)

    உள்ளம் பக்குவப்படாத வரையில், பிறருக்குத் தீங்கு செய்வது
    தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வரையில், புற வேஷங்கள்
    எவையும் பயன்படா என்கிறார் வள்ளுவர்.

    இன்றைக்கும்,     அறிவியலில்     முன்னேறிய     இந்தக்
    காலக்கட்டத்திலும், புறவேஷதாரர்கள் சமயம் சார்ந்த துறவிகள்
    போன்று பொய்க்கோலம் பூண்டு வாழ்ந்து வருகின்றனர்.
    புறத்திலே மாண்பு கொண்ட தோற்றமும், அகத்திலே மாசு
    கொண்ட எண்ணமும் உடைய இவர்களைப் போன்றோர்
    வள்ளுவர் காலத்திலும் வாழ்ந்தனர். இப்போலித்துறவிகளை
    அடையாளம் காட்டவே,     வள்ளுவர், மேற்குறிப்பிட்ட கருத்துகளைக் கூறினார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:03:06(இந்திய நேரம்)