தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

திருக்குற்றாலநாதர் கோயில் - குற்றாலம்

  • திருக்குற்றாலநாதர் கோயில் - குற்றாலம்

    பாண்டிய நாட்டுத் தலம்

    நெல்லை மாவட்டத்தில் தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையில் குற்றாலம் உள்ளது. தென்காசியிலிருந்தும் செங்கோட்டையிலிருந்தும் அடிக்கடி பேருந்துகள் உள்ளன. மதுரை திருநெல்வேலியிலிருந்தும் பேருந்துகள் குற்றாலம் வழியாகச் செங்கோட்டை செல்கின்றன.

    1. சென்னை - கொல்லம் மெயிலில்
    2. சென்னை - செங்கோட்டை பாசஞ்சரில்,

    சென்று செங்கோட்டையில் இறங்கி அங்கிருந்தும் பேருந்தில் வரலாம். இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள் :- திரிகூடாசலம், திரிகூடமலை என்பன.

    இறைவன்
    -
    குற்றாலநாதர், குறும்பலாஈசர், திரிகூடாசலபதி, திரிகூடாசலேஸ்வரர்.
    இறைவி
    -
    குழல் வாய்மொழியம்மை, வேணு வாக்குவாஹினி.
    தலமரம்
    -
    குறும்பலா.
    தீர்த்தம்
    -
    வடஅருவி.

    சம்பந்தர் பாடல் பெற்ற பதி

    இறைவனுக்குரிய பஞ்ச சபைகளில் இத்தலம் சித்திரசபை. பட்டினத்தார், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடல்களில் இத்தலம் சிறப்பிக்கப்படுகின்றது. அப்பர், தாம் பாடிய திருவங்கமாலையில் இத்தலத்தைக் குறித்துள்ளார். மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர் அவர்கள் இத்தலத்திற்குத், திருக்குற்றாலத் தலபுராணம் மற்றும் குறவஞ்சி முதலிய பிரபந்தங்களும் பாடியுள்ளார். இதன் அருகில் ‘இலஞ்சி, ‘பண்பொழி’ முதலிய முருகன் தலங்களும் தென்காசி சிவத்தலமும் உள்ளன.

    திருமால் வடிவில் இருந்த மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கத் திருமேனியாக மாற்றிய தலம். கோயில், மலைகள் சூழ்ந்த இயற்கையழகு வாய்ந்த சூழலில் மலையடிவாரத்தில் உள்ளது. இங்குள்ள மலைத்தொடர் ‘திரிகூடமலை’ என்றழைக்கப்படுகிறது. கோயிலுக்குப் பக்கத்தில் பேரருவி வீழ்கின்றது. கோயிலுக்குப் பக்கத்தில் செல்லும் பாதை வழியே சென்றால் ஐந்தருவியைக் காணலாம். மலை உயரத்தில் சண்பக அருவி, செண்பகாதேவி கோயில், தேனருவி, புலியருவி முதலிய பல அருவிகள் உள்ளன. ஜுன் மாத இறுதி, ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அருவிகளில் நீர் பொழிய, அவைகளில் நீராடி நலம்பெற ஆயிரக்கணக்கில் மக்கள் இத்தலத்திற்கு வருவர். குற்றால அருவியிற் குளித்தல் உடலுக்குச் சுகத்தைத் தரும். குளிப்பதற்குரிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

    கோயில் சங்கு வடிவில் அமைந்துள்ளது. சிறிய ராஜகோபுரம் முக்கலசங்களுடன் முகப்பில் காட்சி தருகிறது. களிற்று படிகளேறி 2000-ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையுடைய குற்றாலநாதர் கோயிலுள் நுழைந்தால் மிக விசாலமான மண்டபம் உள்ளது. தூண்களின் வரிசையமைப்பு அழகுடையது. இக்கல்மண்டபம் வசந்த மண்டபம் எனப்படுகிறது. மண்டபத்தின் நடுவில் உயர்ந்த யாகசாலை மேடையும் ஒரு மூலையில் தீர்த்தவாரி மண்டபமும் உள்ளன. நுழைவு வாயிலில் இருபுறமும் உள்ள அம்பலவிநாயகரையும், ஆறுமுக சுவாமியையும் வணங்கி நுழைந்தால் நேரே மூலவர் சந்நிதி தெரிகின்றது. அலங்கார மண்டபம் நுழைந்து வலமாகச் சுற்றித் துவார பாலகர்களைக் கடந்து, மிகக் குறுகலான பிராகாரத்தை வலம் வரும் போது, அதிகார நந்தி, சூரியன், கும்பமுனி மற்றும் அருட்சத்தியர்கள், எதிரில் கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி, விநாயகர் முதலிய சந்நிதிகளைத் தரிசிக்கலாம். பஞ்சபூதலிங்கங்களும், சுப்பிரமணியர், சனிபகவான் சந்நிதிகளும் உள. கருவறைச் சுவரின் வெளிப்புறத்தில் கல்வெட்டுக்கள் உள்ளன.கோயில் கற்றளி, பிராகாரம் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதெனத் தெரிகிறது. மகாமண்டபத்தில் வலப்பால் நடராசர் திருமேனி உள்ளது. மூலவர் சிவலிங்கத் திருமேனி - மிகச் சிறிய லிங்கம். அகத்தியரால் சிவத் திருமேனியாக மாற்றப்பட்டதாதலின் திருமேனியின் மீது அகத்தியரின் ஐந்து விரல்களும் பதிந்துள்ளன. திருமால் திருமேனியைச் சிவத்திருமேனியாகவும், ஸ்ரீ தேவியைக் குழல்வாய்மொழியம்மையாகவும், பூதேவியைப் பராசக்தியாகவும் மாற்றியதாக ஐதீகம்.

    சுவாமி கிழக்கு நோக்கியுள்ளார். சுவாமிக்கு வலப்பால் அம்பாள்-குழல்வாய்மொழியம்மை சந்நிதி உள்ளது. இதுவும் கிழக்கு நோக்கிய சந்நிதியே. படிக்கட்டுகள் ஏறி உள்நுழைய வேண்டும். நுழைவு வாயிலில் உள்ள வாயில் தூணில் உள்ள கல்வெட்டுக் குறிப்பொன்று, அம்பாள் கோவில் திருப்பணி கொல்லமாண்டு 1108ல் (ஸ்ரீமுக ஆண்டு - ஆனி-19) பூர்த்தி செய்யப்பட்டுத் தேவகோட்டை காசி விசுவநாத செட்டியார் அவர்களால் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்ட செய்தியை தெரிவிக்கின்றது.

    விசாலமான சந்நிதி. வலப்பால் பள்ளியறை. அம்பாள் நின்ற கோலம். உள்பிராகாரத்தை வலம் வரும்போது கைலாசநாதர், துர்க்கை சந்நிதிகள் உள்ளன. அம்பிகையை வழிபட்டு வெளிவந்து வலமாக வரும்போது தலமரமான குறும்பலா (புதிய தலமரம்) உள்ளது. அதற்கு எதிரில் பிராகாரத்தில் ஆதிகுறும்பலா மரத்தின் கட்டைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அதையடுத்து அறுபத்து மூவர் மூலத்திருமேனிகள், நன்னகரப் பெருமாள் சந்நிதி, பாபவிநாசர் உலகாம்பாள், நெல்லையப்பர் காந்திமதி, நாறும்புநாதர், சங்கரலிங்க நாதர், பால் வண்ணநாதர் ஒப்பனை அம்பாள், சொக்கலிங்கர், ஐயனார், மதுநாதேசுவரர், அறம் வளர்த்த நாயகி சந்நிதிகள் உள்ளன. எதிர்ப்புறத்தில் அருவியைப் பார்க்குமிடத்தைக் குறித்துள்ளனர். அங்கிருந்து பார்த்தால் பேரருவி விழுவது தெரிகிறது. சோழலிங்கம், அகத்தியர், வாசுகி, மகாலிங்கம், சஹஸ்ரலிங்கம் முதலியவைகளும் உள்ளன.

    வலமாக வரும்போது அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படும் ‘பராசக்தி பீடம்’ உள்ளது. இங்கு மகாமேரு உள்ளது. பைரவர் சந்நிதி உள்ளது. குற்றாலமலை 5134 அடி உயரம். வடஅருவி 288 அடி உயரத்திலிருந்து வீழ்கிறது. மகுடாகம முறைப்படிப் பூசைகள் நடைபெறும் இத்திருக்கோயிலில் தைமகம் தெப்போற்சவம், மார்கழித் திருவாதிரை, சித்திரை விஷு உற்சவங்கள் சிறப்புடையன.

    சித்திர சபை, கோயிலுக்குப் பக்கத்தில் தனிக்கோயிலாக உள்ளது. எதிரில் தெப்பக்குளம் - நடுவில் மணிமண்டபம். சபா மண்டபத்தில் நுழைந்தால் குறவஞ்சி சிலைகளின் அருமையான காட்சி. கீழே கல்பீடம், மேலே முன்மண்டபம் மட்டும் மரத்தால் ஆனது. விமானம் செப்புத்தகடு. எட்டு கலசங்கள் உச்சியில்.

    இச்சித்திர சபையின் வெளிச்சுற்றில் ஊர்த்துவதாண்டம், பத்திரகாளி, முருகன், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன், மன்மதன், ரதி ஆகிய உருவங்கள் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. முன் மண்டபத்தின் உட்புறத்தில் மேற்புறத்தில் உள்ள கொடுங்கைகளின் அழகு கண்டின் புறத்தக்கது.

    சபையின் உட்சுற்றில் துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், திருவிளையாடற்புராண வரலாறுகள், அறுபத்துமூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்தகோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு உருவங்கள், சனிபகவான் ஆகியவை வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. இவை காலப்போக்கில் அழிந்தாற்போல் உள்ளன.

    சபையின் உள்ளே - சித்திரசபையாதலின் - நடராசர் உருவம் சிவகாமியுடன், தேவர்கள் தொழுமாறு அழகாக வண்ணத்தில் (சித்திரமாக) வரையப்பட்டுள்ளது. பார்வதி கல்யாணச் சிற்பமும் அழகு. மரத்தூபியில் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. குற்றாலநாதர் அகத்தியருக்குக் காட்சி தந்தது, சுப்பிரமணியரின், விநாயகரின் பல்வகைச் சிற்பங்கள் முதலான ஏராளமான சிற்பங்கள் இச்சபையில் உள்ளன. இச்சபை கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே இருக்கும் நடராச சிற்பம் தெற்கு நோக்கியுள்ளது. ஆலயப்பெருவிழாவில் எட்டாந்திருவிழாவில் நடராசர், ஆலயத்திலிருந்து இச்சபைக்கு எழுந்தருளி, (பச்சைசார்த்தி) ஆஸ்தானம் திரும்புவது வழக்கம்.

    சுற்றுலாத்தலமாதலின் இங்கு ஏராளமான சத்திரங்களும், உணவுக் கடைகளும் உள்ளன. இக்கோயிலில் 89 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டுள்ளன. அவற்றிலிருந்து நீட்டலளவைகோல் - சுந்தர பாண்டியன் கோல் என்ற பெயரால் வழங்கியமை தெரிகிறது. மற்றும் மக்கள் சபை, ஐந்நூற்றுமூவர் சபை முதலிய குழுக்களைப் பற்றியும் தெரியவருகின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-08-2017 12:31:47(இந்திய நேரம்)