தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஐயாறப்பர் கோவில் - திருவையாறு

  • ஐயாறப்பர் கோவில் - திருவையாறு

    சோழநாட்டு (வடகரை)த் தலம்

    தஞ்சை மாவட்டத்திலுள்ள பெரிய ஊர். தஞ்சாவூருக்கு 11 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சை கும்பகோணம் முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்கு வரப்பேருந்துகள் உள்ளன. சிறப்புக்கள் பல வாய்ந்த தலம். அப்பர் பெருமான் கயிலைக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த அற்புதத் தலம். இவ்வற்புதம் - கயிலைக் காட்சித் திருவிழா ஆண்டு தோறும் ஆடி அமாவாசையன்று நடைபெறுகிறது. சப்த ஸ்தான தலங்களுள் இதுவும் ஒன்று. இந்திரன், இலக்குமி ஆகியோர் வழிபட்ட தலம். தருமையாதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட பெருங்கோயில். மிகப் பழைமையும் சிறப்பும் வாய்ந்த ‘அரசர் தமிழ்க கல்லூரி’ இத்தலத்தில்தான் உள்ளது. சுந்தரரும் சேரமானும் வந்த போது இறைவன் காவிரி வெள்ளத்தை ஒதுங்கி வழிவிடச் செய்து காட்சி தந்தருளிய தலம்.

    “அரியலால் தேவியில்லை
           ஐயன் ஐயாறனார்க்கே”

    என்னும் திருமுறை வாக்கின்படி இங்கு அம்பாளே அரியின் அம்சமாதலின் இத்தலத்தில் விஷ்ணு ஆலயம் இல்லை. தேவியே மகாவிஷ்ணுவின் அம்சம் என்பதற்கேற்ப, அம்பாளுக்கு எதிரில் கிழக்கே பாவாசாமி அக்ரஹாரத்தில் ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. ‘பஞ்ச நதக்ஷேத்திரம்’ ‘ஐயாறு’ எனப்படும். இத்தலம் நாற்புறமும் கோபுர வாயில்களைக் கொண்டது.

    இறைவன்
    -
    பஞ்சநதேஸ்வரர், ஐயாற்றீசர், செம் பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன்.
    இறைவி
    -
    தர்மசம்வர்த்தினி, அறம்வளர்த்தநாயகி.
    தலமரம்
    -
    வில்வம்.
    தீர்த்தம்
    -
    சூரிய தீர்த்தம், காவிரி.

    மூவர் பாடல் பெற்ற சிறப்புத்தலம். இத்தலத்திற்குப் பதினெட்டு பதிகங்கள் உள்ளன.

    கிழக்கு ராஜகோபுரமே பிரதானவாயில். ஏழு நிலைகளையுடையது. சிற்பங்களையுடைய பழைமையான கோபுரம். விசாலமான உள்ளிடம். வலப்பால் பெரிய மண்டபம் உள்ளது. இதில் வல்லபை விநாயகர், தண்டபாணி சந்நிதிகள் உள்ளன. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. சிற்பங்கள் அதிகமில்லை. வலப்பால் அம்பாள் கோயிலுக்குப் போகும் வழியுள்ளது.

    உள்நுழைந்து வலமாக வரும்போது சூரிய தீர்த்தம் நீராழி மண்டபத்துடன் நல்ல கட்டமைப்பில் உள்ளது. தெற்கு வாயில் வழியைக் (தெற்கு வாயிலில் வெளிப்புறம் ஆட்கொண்டார் சந்நிதி உள்ளது. இதற்கு எதிரில் உள்ள வேலியிட்ட பள்ளத்தில் குங்கிலியம் இட்டுப் புகைக்கும் பழக்கம் உள்ளது. இங்குக் குங்கிலியப் பொட்டலங்களை விற்கிறார்கள். மக்கள் அவற்றை வாங்கி அக்குழியில் புகையும் நெருப்பில் கொட்டுகிறார்கள்.) கடந்து சென்றால் பிராகாரத்தில் அப்பருக்குக் கயிலைக் காட்சியருளிய சுவாமி கோயில் (தென்கயிலை) தனிக்கோயிலாக - கோபுர, விமான அமைப்புகளுடன் உள்ளது. மூன்று நிலைக் கோபுரத்தையுடைய இக்கோயிலின் உட்சுற்றில் அழகிய வேலைப்பாடமைந்த தூண்கள் உள்ளன. நுழைவு மண்டபத்தில் வலப்பால் அப்பர் பெருமானின் நின்ற திருக்கோலம் காட்சியளிக்கிறது. மூலவர் சிவலிங்கத் திருமேனி. பின்னால் சுவாமி அம்பாள் நின்ற கோலம் உள்ளது. இக்கோயில் வாயிலில்தான் அப்பர் கயிலைக் காட்சி கண்ட ஐதீகம், ஆடி அமாவாசையன்று நடைபெறுகின்றது.

    பிராகாரத்தில் தொடர்ந்து வலம் வரும்போது விநாயகர் சந்நிதி உள்ளது. அடுத்து மேலக் கோபுரவாயில். ஏழுநிலைக் கோபுரம் சிற்பங்களுடன் புதுப் பொலிவுடன் விளங்குகின்றது. அடுத்துள்ள கோயிலும் விநாயகர் சந்நிதியே உள்ளது. அடுத்து இடப்பால் வடகயிலாயம் உலகமாதேவீச்சரம் என்று வழங்கப்படும் தனிக்கோயில் பிராகார மதிலை யடுத்து அப்பால் உள்ளது. செல்வதற்கு வாயில் உள்ளது. மூலவர் சிவலிங்கத் திருமேனி. வலம் முடித்து, மூன்று நிலைகளையுடைய மூன்றாவது கோபுரத்தைக் கடந்து துவார விநாயகராகவுள்ள இரட்டை விநாயகர்களையும் தண்டபாணியையும் வணங்கி உட்சென்றால் கவசமிட்ட கொடிமரம், முன்னால் சித்தி விநாயகரும் உள்ளார். பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை.

    இப்பிராகாரத்தின் கோடியில் ஒலி கேட்கும் இடம் என்று குறிப்பிட்டுக் காட்டியுள்ள இடத்தில் நின்று, கற்சுவரில் அமைக்கப்பட்டுள்ள சிறிய குழியில் வாய்வைத்து, உரத்த குரலில் ‘ஐயாறா’ என்று அழைத்தால் அவ்வொலி பன்முறை பிரதிபலிப்பதைக் கேட்கலாம். (நாம் அழைத்தபோது ஐந்துமுறை கேட்டது, இன்னும் உரத்து அழைத்தால் ஏழுமுறை கேட்பதாகச் சொல்கிறார்கள்.)

    “ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே” என்னும் அப்பர் வாக்கு இங்கு நினைவிற்கொள்ளத் தக்கது.

    இப்பிராகாரத்தை வலமாக வந்து, கொடிமரத்தைத் தாண்டி, படிகள் ஏறினால் மிகப்பெரிய மண்டபம் உள்ளது. நீண்ட விசாலமான மண்டபம். மூலவர் நுழைவு வாயிலுக்குப் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் - சந்நிதியில் ஓர் இரும்புப் பேழையில் மரகத லிங்கம், ஸ்படிக லிங்கம், ஸ்படிக அம்பாள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு நாடொறும் காலையில் பூஜை நடைபெறுகின்றது. சுவாமி தன்னைத்தானே பூசிப்பதாக ஐதீகம். இது தொடர்பாகச் சொல்லப்படும் வரலாறு வருமாறு” :-

    இக்கோயில் பூஜைமுறை உள்ள சிவாசாரியார் ஒருமுறை காசிக்குச் சென்றார். அவருடைய பூஜை முறைக்காலம் வந்து விட்டது. ஆனால் அதற்குள் அவரால் திரும்பி வர முடியவில்லை. அந்நிலையில் இறைவனே அந்த சிவாசாரியார் போல சிவவேடமணிந்து அவருடைய பூஜை முறையைத் தவறாது செய்து வந்தார். திரும்பி வந்த சிவாசாரியார் தன்னைப்போலவே ஒருவர் தன் முறையைச் செய்து வருவதறிந்து அவரைப் பார்த்து ‘நீ யார்?’ என்று கேட்க, அவரும் ‘நீ யார்?’ என்று கேட்டுவிட்டு, ‘உள்ளே வா காட்டுகிறேன்’ என்று கூறிச் சென்றார். சிவாசாரியார் பின்தொடர்ந்து செல்ல, உள்ளே சென்ற உருவம் மறைந்தது. அப்போது இதுகாறும் பூஜை செய்து வந்தவர் இறைவனே என்று தெரிய வந்தது. ஆகவேதான் “தன்னைத் தானே வழிபடுவது” என்ற ஐதீகத்தில் இரு லிங்கங்களும் ஓர் அம்பாளும் அப்பேழையுள் வைத்துப் பூசிக்கப்படுகின்றன. இந்த அற்புதத்தையொட்டியே இன்றும் இக்கோயிலில் சித்திரை ஆயில்யத்தன்று சுவாமி புறப்பாடும் செய்து, இறைவனாக வந்த சிவாசாரியார், பூஜை முறையினராகிய சிவாசாரியார் என்கிற ஐதீகத்தில் இரு சிவாசாரியார்களுக்கும் பரிவட்டம் சார்த்தி, சுவாமியுடன் வலம் வரும் சிறப்பு விழா நடைபெறுகின்றது. இந்த அதிசயத்தையே மாணிக்கவாசகர் தம் அமுதவாக்கில் “ஐயாறு அதனில் சைவனாகியும்” என்று குறித்துள்ளார்.

    இக்கோயிலில் சித்திரையில் நடைபெறும் பெருவிழாவில் இந்த மூன்று திருமேனிகளுக்கும் - ஸ்படிகலிங்கம், ஸ்படிக அம்பாள், மரகதலிங்கம் - ஐந்தாம் நாளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    சுதையாலான பெரிய துவாரபாலகர் உருவங்களைக் கண்டு தொழுது துவார விநாயகரையும், முருகனையும் வணங்கி உள்ளே சென்றால் நேரே பஞ்சநதேஸ்வரர் சந்நிதி தெரிகின்றது.

    உள் பிராகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தின் சுவர்களில் பலவகை வரலாற்றுச் சிற்பங்கள் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. பவானிநாதர் சிவலிங்கமும், ஆதிவிநாயகரும் இவற்றையடுத்து நவக்கிரகங்களும், பஞ்சபூத லிங்கங்களும், சந்திரசேகரர் சந்நிதியும் உள்ளன. ஆதி விநாயகர், முன்பு ஒரு கல்வெட்டு உள்ளது. இச்சந்நிதியில் இரவு பகல் எந்நேரமும் எரியும் விதத்தில் எட்டு இழையாலான திரிஇட்டு நேத்திர தீபம் ஏற்றும் தர்மத்திற்காக நிபந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ள செய்தி இதில் சொல்லப்படுகிறது. இத்தீபத் தொண்டு தடைப்படுமாயின் இன்ன முகவரிக்குத் தெரிவித்தால் அது தொடர்ந்து செய்ய மேற்கொள்ளப்படும் எனும் குறிப்பும் உள்ளது. இதன் பக்கத்தில் மாடிக்குச் செல்லும் வழியுள்ளது. அதன்மேற் சென்றால் அழகிய சிற்பங்கள் பலவற்றைக் கண்டு மகிழலாம். அடுத்துப் பிராகாரத்தில் சித்தி விநாயகர், விசுவநாதர் விசாலாட்சி, தண்டபாணி உருவத் திருமேனிகள் உள்ளன. தனுசு சுப்பிரமணியரும், செல்வ விநாயகரும் உள்ளனர்.

    ஆவுடை விநாயகர் தரிசிக்கத்தக்கது. (ஆவுடையார்) மீது விநாயகர். மகாலட்சுமி சரஸ்வதி கூடியுள்ள சந்நிதி. துர்க்கத்தாம்பாள் சந்நிதி கண்டு தொழுதவாறே வந்து சண்டேசுவரரைத் தரிசிக்கலாம். சண்டீசுவரர் சந்நிதி தனிக்கோயிலாக விமானத்துடன் அமைந்துள்ளது. விமானத்தில், ஒரு புறத்தில் பாற்குட அபிஷேகக் காட்சியும் மற்றொரு புறம் இறைவன் விசாரசருமருக்குச் சண்டீசப் பதத்தையருளும் காட்சியும் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. நடராச சந்நிதி அழகுடையது. சப்தஸ்தானத் தலங்களுள் இத்தலம் நீங்கலாக ஏனைய ஆறு தலங்களின் சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாக உள்ளன. சுரஹரேஸ்வரர் திருமேனி உள்ளது.

    மூலவர் தரிசனம். பஞ்சநதேஸ்வரர் அழகான திருமேனி. சுயம்பு மூர்த்தி, மூலவர் முன் கவசமிடப்பட்டுள்ளது. இக்கவசத்தில் பசுவின் உருவமும் அதன்மீது சூலமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால் சுவாமிக்குத் ‘திரிசூலி’ என்ற பெயரும் சொல்லப்படுகிறது. “வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்” என்னும் திருமுறைத் தொடர் இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது. அலங்காரம் செய்து பார்க்கும் நிலையில் சிவலிங்கத் திருமேனி, பாம்பு படமெடுப்பது போலவும், கொண்டை போட்டிருப்பது போலவும் பலவித வடிவங்களில் தோன்றுவதைக் காணலாம். சுவாமிக்குப் புனுகு சட்டம் மட்டுமே சார்த்தப்படுகிறது. அதுவும் கைபடாமல் சார்த்தப்பட வேண்டும். மற்ற அபிஷேக மெல்லாம் ஆவுடையார்க்கே.

    மூலவரின் கருவறை அகழி அமைப்புடையது. கோஷ்டமூர்த்தமாகத் தட்சிணாமூர்த்தி உள்ளார். இதைத் தட்சிணாமூர்த்தி பிராகாரம் என்கின்றனர். சுவாமி ஜடாபாரமாக இருப்பதாக ஐதீகம். ஆதலால் இவ்வுள் பிராகாரத்தில் எவரும் நுழைந்து வலம் வரக்கூடாது என்பர். வெளிவரும்போது இடப்பக்க மூலையில் மெய்கண்டார், உமாபதிசிவம் அருணந்தி சிவம் ஆகியோர் சந்நிதி உள்ளது.

    சுவாமிக்குப் ‘பஞ்சநதேஸ்வரர்’ என்னும் பெயர் வந்தமைக்குரிய வரலாறு வருமாறு :-

    இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள அந்தணக்குறிச்சி என்னுமிடத்தில் பங்குனித் திருவாதிரையில் சிலாதமகரிஷிக்கு நந்தியெம்பெருமான் அவதரித்தார். அன்று மாலையே இறைவன் நந்தியை இங்கு அழைத்து வந்து, ஐந்துவித தீர்த்தங்களால் ((1) சூரியதீர்த்த நீர் (2) சந்திரதீர்த்த நீர் (3) நந்தி வாயில் ஒழுகிய நுரை நீர் (4) காவிரி நீர் (5) அம்பாளின் திருமுலைப்பாலாகிய நீர்) அவருக்கு அபிஷேகம் செய்து, ‘அதிகார நந்தி’ பட்டஞ்சூட்டிக் காவற் பொறுப்பை ஒப்படைத்தார். மறுநாள் புனர்பூசத்தன்று

புதுப்பிக்கபட்ட நாள் : 05-12-2017 13:09:15(இந்திய நேரம்)