தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருப்பூவணநாதர்கோவில் - திருப்பூவணம்

 • திருப்பூவணநாதர்கோவில் - திருப்பூவணம்

  பாண்டிய நாட்டுத் தலம்

  பாண்டிய நாட்டுத் தலங்களுள் மூவர் பாடலும் பெற்றது. இத்தலத்திற்கு மதுரையிலிருந்து செல்லலாம். இத்தலம் மதுரை- மானாமதுரை பாதையில் உள்ள புகைவண்டி நிலையம். இவ்வூர் (1) பழையூர் (2) புதூர் (3) கோட்டை (4) நெல் முடிக்கரை என நான்கு பகுதிகளாகவுள்ளது. இவற்றுள் ‘கோட்டை’ எனும் பகுதியில் திருக்கோயில் உள்ளது. குலசேகர பாண்டியன் இந்நகரில் முடிசூட்டிக் கொண்ட விழாவில் நெற்கதிரை முடியாகச் சூடிக்கொண்டான். எனவே இத்தலத்திற்கு நெல்முடிக்கரை என்ற பெயருண்டாயிற்று. வேறு பெயர்கள்:- புஷ்பவனகாசி, பிதுர்மோக்ஷபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரமபுரம், ரசவாதபுரம் என்பன. பொன்னனையாள் என்பவள் வாழ்ந்து சிவனடியார்களை உபசரித்த தலம். இவளுக்காக இறைவன் மகிழ்ந்து இரசவாதம் செய்த திருவிளையாடல் இத்தலத்தில் நிகழ்ந்ததே. இக்கோயிலில் உள்ள கொடுங்கைகள் மிகவும் அழகானவை.

  பிரமன் வழிபட்ட பதி. வைகைக்கரையில் கோயில். இங்கு வைகையாறு வடக்கு நோக்கி - உத்தரவாகினியாகப் பாய்கிறது. எனவே இவ்விடம் மிகவும் விசேஷமானதாகும். இறந்தோரின் எலும்புகளை இங்குப் புதைப்பதால் அவர்கள் மேலான நற்கதியைப் பெறுகிறார்கள் என்பது மரபு. மூவர் பெருமக்களுக்கும் வைகை மணல் சிவலிங்கமாகத் தோன்றியமையால் மூவரும் மறுகரையிலிருந்தே - இத்தலத்தை மிதிக்க அஞ்சி- வணங்க, இறைவன் அவர்கள் தம்மை நேரே கண்டு வணங்குவதற்கு ஏதுவாக நந்தியை விலகச் செய்தருளினார் என்பது வரலாறு. இதனால் நந்தி சாய்ந்துள்ளதைக் காணலாம். வைகையின் மறுகரையிலிருந்து அவர்கள் தொழுத இடம் மூவர் மண்டபம் என்று வழங்குகிறது. (பழைய மண்டபம்) திருவாசகத்திலும், கருவூர்த்தேவரின் திருவிசைப்பாவிலும் இத்தலம் புகழப்படுகிறது.

  இறைவன்
  -
  புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர்
  இறைவி
  -
  சௌந்தரநாயகி, மின்னனையாள்
  தலமரம்
  -
  பலா

  மூவர் பாடல் பெற்றது.

  இங்குள்ள நடராசமூர்த்தம் அற்புதமான வேலைப்பாடுடையது- பெரியது- அழகு மிக்கது. மூலவர் - சிவலிங்கத் திருமேனி - நிறைவான தரிசனம். அழகான மூர்த்தம். பொன்னனையாள் என்னும் ஒருத்திக்காக இறைவன் சித்தராக வந்து இரசவாதம் செய்து பொன் கொடுக்க, அவள் அதனால் சிவலிங்கம் அமைத்து, வழிபட, அது மிகவும் அழகாயிருப்பதைக் கண்டு ஆசையுடன் அத்திருமேனியை - சிவலிங்கத்தைக் கிள்ளி முத்தமிட்டாளாம். இவ்வாறு கிள்ளிய அடையாளம் சிவலிங்கத்தில் உள்ளதை இன்றும் காணலாம். கோயிலில் பொன்னனையாள், சித்தர் ஆகியோர் உருவங்கள் உள்ளன.

  நாடொறும் முறையாகப் பூஜைகள் நடைபெறுகின்றன. நல்ல பராமரிப்பு. பங்குனியில் பெருவிழா நடைபெறுகிறது. காசிக்குச் சமமான தலங்களுள் ஒன்றாக விளங்கும் இத்தலத்திற்குக் கந்தசாமிப் புலவர் தலபுராணம் பாடியுள்ளார். திருப்பூவணநாதர் உலாவும் மிகச் சிறப்பான நூல். கோனேரின்மைகொண்டான் குலசேகரதேவன் காலத்திய கல்வெட்டுக்கள் இத்தலத்திற்கு வேதபாராயணத்திற்கும், விழாக்களுக்கும் நிவந்தங்கள் அளித்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.

  “நன்றுதீது என்று ஒன்றிலாத நான்மறையோன் கழலே
  சென்று பேணி ஏத்த நின்ற தேவர் பிரான் இடமாம்
  குன்றில் ஒன்றியோங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர்மேல்
  தென்றல் ஒன்றி முன்றிலாருந் தென்திருப் பூவணமே”   (சம்பந்தர்)

  ‘வடிவேறு திரிசூலந்தோன்றும் தோன்றும்
  வளர்சடை மேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
  கடியேறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்
  காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும்
  இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
  எழில்திகழும் திரு முடியும் இலங்கித் தோன்றும்
  பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
  பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.’
                                                            (அப்பர்)

  ‘எண்ணியிருந்து கிடந்து நடந்தும்
  அண்ணல் எனாநினைவார் வினைதீர்ப்பார்
  பண்ணிசையார் மொழியார் பலர் பாடப்
  புண்ணியனார் உறை பூவணம் ஈதோ’        (சுந்தரர்)
                                                     - மோனருளே

  பூவணமும் பூமணமும் போல அமர்ந்ததிருப்
  பூவணத்திலானந்தப் பொக்கிஷமே.            (அருட்பா)

  அஞ்சல் முகவரி :-
  அ/மி. பூவணநாதர் திருக்கோயில்

  திருப்பூவணம் & அஞ்சல் 623 611
  இராமநாதபுரம் மாவட்டம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-12-2017 13:18:51(இந்திய நேரம்)