தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நேத்திரார்ப்பணசுவரர் கோவில் - திருவீழிமழலை

  • நேத்திரார்ப்பணசுவரர் கோவில் - திருவீழிமழலை

    சோழநாட்டு (தென்கரை)த் தலம்

    மயிலாடுதுறை - திருவாரூர் இருப்புப் பாதையில் பேரளத்தை யடுத்துள்ள பூந்தோட்டம் நிலையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தலம். திருவாரூர், கும்பகோணம், பேரளம், ஆடுதுறை, பூந்தோட்டம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். வீழிச்செடிகள் நிறைந்திருந்தமையால் வீழிமிழலை என்று பெயர் வந்தது. இத்தலத்திற்குப் பூகைலாசம், கல்யாணபுரம், பஞ்சாக்கரபுரம், தக்ஷிணகாசி, ஷண்மங்களஸ்தலம், சுவேதகானனம், ஆகாசநகரம், பனசாரண்யம், நேத்திரார்ப்பணபுரம், தேஜிநீவனம் எனப் பத்துப் பெயர்களுண்டு.

    இறைவன்
    -
    நேத்திரார்ப் பணேசுவரர், விழியழகீசர், விழியழகர்.
    இறைவி
    -
    சுந்தரகுஜாம்பிகை, அழகுமுலையம்மை.
    தலமரம்
    -
    வீழிச்செடி.
    தீர்த்தம்
    -
    விஷ்ணுதீத்தம்

    மூவர் பாடல் பெற்ற தலம். இத்தலம் 23 திருப்பதிகங்களையுடையது. சேந்தனார் பாடிய திருவிசைப்பாவும், அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்ற தலம்.

    கோயிலின் எதிரில் பெரிய குளம் உள்ளது. மிகப் பெரிய கோயில். உற்சவமூர்த்தி - கல்யாணசுந்தரர் - விநாயகர் - படிக்காசு விநாயகர். இத்தலத்தில், திருமால் சக்கரம் வேண்டி இறைவனைப் பூசை செய்யும் போது ஒருநாள் ஒருமலர் குறையத் தம் கண்ணையே இடந்து சாத்தி சக்கரத்தைப் பெற்றார். இவ்வரலாறு திருமுறையில் கூறப்பட்டுள்ளது. கல்யாணசுந்தரரின் பாதத்தில் விஷ்ணு தம் கண்ணைப் பறித்து அருசித்த அடையாளம் உள்ளது. உற்சவமூர்த்தியின் வலப்பாதத்தின் மேலே திருமாலின் கண்ணும் கீழே சக்கரமும் உள்ளன. ஞானசம்பந்தருக்கும், அப்பருக்கும் இறைவன் படிக்காசு தந்தருளி அவர்கள் மூலமாகச் சிவனடியார்க்கு அமுதூட்டிய தலம். அவ்வாறு வைத்தருளிய பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ளன. படிக்காசுப் பிள்ளையார் மேற்கு பலிபீடத்தின் அருகில் உள்ளார். அருகில் சம்பந்தர், அப்பரின் உருவங்கள் உள்ளன. இவ்விருவரும் தங்கியிருந்த திருமடங்கள் வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (சம்பந்தர்) மேற்குக் கோடியிலும் (அப்பர்) உள்ளன.

    இறைவன், ஞானசம்பந்தருக்குத் தாம் சீகாழியில் இருக்கும் திருக்கோலத்தை இங்குள்ள விண்ணிழி விமானத்தில் காட்டியருளினார். ‘தில்லை மூவாயிரவர்’ என்பது போல இத்தலத்து வாழ்ந்த ஐந்நூறு அந்தணர்கள் (வீழி ஐஞ்ஞூற்று அந்தணர்) போற்றப்பட்டனர். இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமானது. இத்தலத்துத் தலபுராணம், திருவாவடுதுறை ஆதீனத்து, இரண்டாவது குருமூர்த்திகளான ஸ்ரீ மறைஞானதேசிகருடைய மாணவரான ஸ்ரீ மெய்ஞ்ஞான முனிவரால் இயற்றப்பட்டது - உள்ளது. இக்கோயிலில் உள்ள வௌவால் நத்து (வாவல்நெற்றி) மண்படம் மிகச் சிறப்பான வேலைப்பாடுகள் உள்ளதாகும்.

    கோயில் திருப்பணிகள் செய்யும் ஸ்தபதிகள் சில தலங்களில் உள்ள அரிய திருப்பணிகள் நீங்கலாகச் செய்யும் ஒப்பந்தங்களில் இம் மண்டபமும் ஒன்றாகும். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. ராஜகோபுரம் கடந்து நுழைந்தவுடன் வௌவால் நத்திமண்டபம் - கல்யாணமண்டபம் உள்ளது. அகலமான அமைப்பு - நடுவில் தூணில்லாமல், சுண்ணாம்பு கொண்டு ஒட்டப்பட்டுள்ள அமைப்பு - பார்ப்பவரை வியக்கச் செய்யும். இரண்டாம் கோபுரத்தைக் கடந்ததும், வெளிச்சுற்றில், படிக்காசு வைத்தருளிய பலிபீடங்கள் உள்ளன. இக்கோயில் மாடக்கோயில் அமைப்புடையது. தெற்குப் பிராகாரத்தில் தலவிநாயகர் (படிக்காசு விநாயகர்) சந்நிதியும், மேற்கில் சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகளும், வடக்கில் சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. நடராசர் சந்நிதி சிறப்பானது.

    சுவாமி உள்ள இடம் விண்ணிழி விமானம் என்று சொல்லப்படுகிறது. இவ்விமானம், திருமால் கொணர்ந்தது என்பதனை “தன்றவம் பெரிய சலந்தனுடலந் தடித்த சக்கிரம் எனக்கருள் என்று அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறையணி சடையவன்” என்னும் ஞானசம்பந்தர் வாக்கால் அறியலாம். செப்புத் தகடுகள் வேயப்பெற்றுத் தங்கக்கலசத்தோடு விளங்கும் இவ்விமானம் தனி அழகுடையது. பதினாறு சிங்கங்கள் தாங்கும் தனிச்சிறப்புடையது. கர்ப்பகிருக விமானத்தில் ஞானசம்பந்தர் கண்ட சீகாழிக் காட்சி சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளது.

    மூலவரின் (வீழிநாதேசுரரின்) பின், இறைவன் உமையோடு உள்ள திருமணக்கோலமுள்ளது. இறைவன் உமையை மணந்து கொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன. மகாமண்டபத்தில் - தனி மண்டபத்தில் கல்யாணசுந்தரர் - மாப்பிள்ளை சுவாமியாகக் காட்சி தருகிறார். பாதத்தில் திருமாலின் கண்ணாகிய மலர் உள்ளது. பிட்சாடனர், ரதிதேவி, வசிஷ்டர், காமதேனு, மனு முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் இஃது. இங்குத்தான் மிழலைக் குறும்பர் என்னும் வேடுவர் விளாங்கனியை நிவேதித்து அருள்பெற்றார்.

    ஞானசம்பந்தரும், அப்பரும், படிக்காசு பெற்றபோது அவற்றைக் கடைத்தெருவிற்குக் கொண்டு சென்று பொருள்களை வாங்கிய கடைத்தெரு இப்போது ஐயன்பேட்டை என வழங்குகிறது. அங்கே உள்ள சுவாமி பெயர் - செட்டியப்பர். அம்பாள் - படியளந்த நாயகி. உற்சவமூர்த்தி தராசு பிடித்த கையோடும், அம்பாள் படியைப் பிடித்த கையோடும் காட்சி தருகின்றனர். நடராஜர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சக்கரதானர், பிட்சாடனர், காலசம்ஹாரர், சுவர்க்காவதாநேசர், நாயன்மார்கள் முதலிய உற்சவத் திருமேனிகள் உள்ளன. தலவிருக்ஷம் ஒவ்வொரு யுகத்துக்கும் ஒவ்வொன்றாக உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. முதலில் சந்தனமாகவும், பிறகு சண்பகமாகவும், பின் வீழிச்செடியாகவும் உள்ளது. அடுத்து இருக்கவுள்ளது பலாமரமாகும். இத்திருக்கோயிலைச் சுற்றி, பத்மதீர்த்தம், புஷ்கரணி, விஷ்ணு தீர்த்தம், திரிவேணிசங்கமம், குபேரதீர்த்தம், இந்திரதீர்த்தம், வருணதீர்த்தம், இலக்குமிதீர்த்தம், வசிட்டதீர்த்தம் முதலாக 25 தீர்த்தங்கள் உள்ளன.

    சுவாமி சந்நியில் உள்ளது - புஷ்கரணிதீர்த்தம் மேற்கு மதிலைச் சார்ந்து உள்ளது - விஷ்ணுதீர்த்தம் தாமரைக் குளம் உள்ளது - பிரம, பத்மதீர்த்தங்கள் என்பன.

    சித்திரை மாதத்தில் பெருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி, சஷ்டி, ஆதிரை முதலிய பெரு உற்சவங்களும் நன்கு நடைபெறுகின்றன.

    “கண்ணிற் கனலாலே பொடியாகப்
    பெண்ணுக் கருள் செய்த பெருமானுறைகோயில்
    மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்
    விண்ணிற் புயல்காட்டும் வீழிம்மிழலையே.”         (சம்பந்தர்)

    நீற்றினைநிறையப் பூசி நித்தல் ஆயிரம் பூக் கொண்டு
    ஏற்றுழி ஒருநாள் ஒன்று குறையக்கண் ணிறைய விட்ட
    ஆற்றலுக் காழிநல்கி அவன் கொணர்ந்திழிச்சுங் கோயில்
    வீற்றிருந்தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்தனாரே    (அப்பர்)

    விடங் கொண் மாமிடற்றீர் வெள்ளைச் சுருளொன்றிடுவிட்ட
                    காதினீர் என்று

    திடங்கொள் சிந்தையினார் கலிகாக்குந் திருமிழலை
    மடங்கல் பூண்ட விமான மண்மிசை வந்திழிச்சிய வானநாட்டையும்
    அடங்கல் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.   (சுந்தரர்)

    ‘பங்கயம் ஆயிரம் பூவினி லோர் பூக் குறையத்
    தங்கண் இடந்துஅரன் சேவடிமேற் சாத்தலுமே
    சங்கரன் எம்பிரான் சக்கரமாற்கருளிய வா(று)
    எங்கும் பரவிநாம் தோணாக்கம் ஆடாமோ’.         (திருவாசகம்)

    ‘ஒழிவில் உயிர்கட்கு உயிராய்க் குணங்களின்றி
    உருவருவ மென்றின்றி மலமொன்றின்றி
    அழிவில் வியாபகமா யானந்த ரூப
    மாய்விளங்கும் பரம் பொருள்தான் அருளினாலே
    பழுதில் அரிபூசை கொள்வானருளு ருக்கொள் எந்தை
    பக்தியுடன் கமலம்போல் அவன் இடந்து சாத்தும்
    விழி மருவும் வீழிமிழலை மேவும்
    விண்ணிழிந்த நாயகன் சீர் விளம்பி உய்வாம்.’
                                                           (தலபுராணம்)

    “காரணகாரியங் கடந்த இபமுகன் பாரதத்தைக்
    கனககிரிதனில் வரைந்தகோடுடைய எந்தை
    ஏருறு நற்றமிழ்வேத மாகிய பாமாலை
    இசையுள கொற்குருகி உளமிறைஞ்சி நின்றே சாத்திச்
    சீருறு சம்பந்தருக்கும் அப்பருக்கும் மிரங்கித்
    தீவினைக் காலத்திவணுற் றின்புறுதிர் என்றே
    பாரறிய அநுதினமும் வீழிநகர் தனின் முன்
    படிக்காசு வைத்த கணபதி யிருதாள் பணிவாம்.”
                                                           (தலபுராணம்)

                     - முன்அரசும்

    காழிமிழலை யருங்கண்டு தொழக் காசளித்த
    வீழிமிழலை விராட்டுருவே.                       (அருட்பா)


    அஞ்சல் முகவரி :-
    அ/மி. நேத்ரார்ப்பணேஸ்வரர் திருக்கோயில்
    திருவீழிமிழலை & அஞ்சல் - 609 505
    தஞ்சை மாவட்டம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-12-2017 13:12:01(இந்திய நேரம்)